“விஜய் முதல்வர் ஆனது எப்படி தெரியுமா?”: ‘ஆகாயம்’ பட விழாவில் ‘தினந்தோறும்’ நாகராஜ்!
டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா மிராணி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திரையுலக பிரபலங்களின் பங்களிப்போடு கோலாகலமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன்:
இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி அல்லது கருத்து ஒரு விஷயத்தையே ஒரே நாளில், சில நேரங்களில் ஒரு நொடியில் கூட மாற்றக்கூடியது. அந்த மீடியாவை நம்பித்தான் என்னுடைய முதல் படைப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
எழுத்தாளர் அஜயன் பாலா:
தினந்தோறும் நாகராஜை நான் சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் கதை சொல்லும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே நடப்பது போல் மிக நுணுக்கமாக விவரிப்பார். ‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு நாகராஜ் சென்றார். நாங்களும் சசியும் கூட ஒரு கட்டத்தில் நாகராஜ் முடிந்துவிட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எவ்வளவு கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். இந்த விழா நாகராஜைப் பொறுத்தவரை ஒரு புதிய பிறப்பு போன்றது.
இயக்குநர் பாலசேகர்:
நாகராஜ் அண்ணாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
சினிமா ஒருவரை கடைசி வரை கைவிடாது என்பதற்கு நாகராஜ் சாரே மிகச் சிறந்த உதாரணம். சினிமாவில் அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர்ப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தாண்டி நாகராஜின் திறமையை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு பாராட்டுகள்.
இயக்குநர் சற்குணம்:
தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி எனது தம்பியும், உறவினரும் ஆவார். எனது தம்பியை தமிழ் சினிமா சார்பாக வரவேற்று வாழ்த்துகிறேன். ‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தினந்தோறும் நாகராஜ், ‘ஆகாயம்’ படத்தின் மூலமாகவும் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும்.
நடிகர் ஶ்ரீராம் கார்த்திக்:
நாகராஜ் சார் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னை பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சிறிய வசனங்கள்கூட ஒரு காட்சியை எப்படி உயர்த்துகின்றன என்பதை இந்தப் படத்தில் நேரடியாகப் பார்த்தேன். ‘ஆகாயம்’ அன்பை மட்டுமே வளர்க்கும் அழகான படம்.
இயக்குநர் கிருஷ்ணா:
நாகராஜ் சாரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகை வந்துகொண்டே இருக்கும். அவருடனான எனது நட்பு ‘மின்னலே’ படத்திலிருந்து தொடங்கியது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா தொடர்பான ஒரு முக்கியமான காட்சியில், அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாகராஜ் சொன்ன ஒரு சிறிய யோசனைதான் பின்னர் திரையரங்கில் கைதட்டலைப் பெற்றது. அவர் ஒரு சிறந்த இயக்குநர், எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகரும் கூட.
இசையமைப்பாளர் ரகுநந்தன்:
நாகராஜ் சாரை முதன்முதலில் சந்தித்தபோது, அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும், நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம். இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருது பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.
இயக்குநர் சசி:
நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படி கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். தவறான படங்களை எடுக்கவே முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்.
சித்ரா லட்சுமணன்:
ஒரு நல்ல கலைஞனை, ஒரு முக்கியமான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா அழைத்து வந்திருக்கிறார்கள். நாகராஜின் வாழ்க்கையில் சில தவறுகள் நடந்தன; அதில் குடிப்பழக்கமும் ஒன்று. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்திருக்கிறார். வாழ்க்கையில் விழாதவர்கள் யாரும் இல்லை; விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன். அதை நாகராஜ் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
இயக்குநர் பேரரசு:
ஒருவர் தனது வெற்றிக்கான காரணத்தையும், தோல்விக்கான காரணத்தையும் தானே ஆராய வேண்டும். அந்த வகையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வந்திருக்கும் நாகராஜ் இன்று ஒரு தெளிவான மனிதராக நிற்கிறார். ‘தினந்தோறும்’ நாகராஜ் வெற்றியை அடைந்தவர் என்றால், ‘ஆகாயம்’ நாகராஜ் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறமையுடன் வந்திருக்கிறார்.
இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்:
“மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி அவர்கள், நான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான் பல படங்கள் செய்திருக்கலாம், நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். டிரைலரைப் பார்த்தவுடனேயே அவர் படத்தின் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது.
ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு நிச்சயமாக ரசிப்பீர்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். என்னை நம்பி உடன் நின்ற கார்த்திக் நல்லமுத்து அவர்களுக்கு நன்றி.”

