‘பனி விழும் இரவு’: விமர்சனம்: நடுங்க வைக்கும் குளிர்.. நடுநடுங்க வைக்கும் திகில்!

‘பனி விழும் இரவு’: விமர்சனம்: நடுங்க வைக்கும் குளிர்.. நடுநடுங்க வைக்கும் திகில்!

‘பனி விழும் இரவு… நனைந்தது நிலவு’ – மணிரத்னம் இயக்கிய ‘மௌனராகம்’ படத்தில் மெஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் வந்த அந்த சூப்பர் ஹிட் பாட்டை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. அதே அழகிய தலைப்பில், இப்போது ஆடியன்ஸை சீட்டின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு அட்ரினலின் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது ‘பனி விழும் இரவு’.

அருண் கார்த்திக் ஹீரோவாகவும், எனாக்ஷி கங்குலி ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ள இப்படத்தில் கருப்பு நம்பியார், சேரன்ராஜ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் எனப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. சதா முருகன், தங்கவேல் வல்லவர் சுவாமி, ஓம் செல்வா கூட்டணி இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்க, கதையின் நாயகனான சே.ரா. ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி தனது முத்திரையைப் பதித்துள்ளார். சதா முருகன் பாட்டெழுதி, இசையமைத்து, தயாரிப்பிலும் கைகொடுத்து அசத்தியிருக்கிறார்.

மிகவும் சாதாரண மனிதர்கள் தங்களின் வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்கள், திகில், நெஞ்சைப் படபடக்க வைக்கும் த்ரில்லிங் சம்பவங்கள் தான் இந்த படத்தின் மெயின் தீம். ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை எப்போது உயிர் பிழைப்பதற்கான போராட்டமாக மாறுகிறது? அவனது பூட்டி வைக்கப்பட்ட ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும்போது தான்!

கொடைக்கானலின் குளு குளு சூழலில் ஜாலியாக பொழுதைக் கழிக்க ஆசையோடு வருகிறது இளம் தம்பதியான அருண் கார்த்திக்கும், எனாக்ஷி கங்குலியும். ஆனால், படத்தின் தொடக்கத்திலேயே “என் மனைவியைக் காணவில்லை” என்று கதறியபடி போலீசில் புகார் கொடுக்கிறார் ஹீரோ. இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் தலைமையில் விசாரணை படு தீவிரமாக, சின்சியராக நடக்கிறது. படம் பார்ப்பவர்கள் “ஓ… கதை இப்படித்தான் போகும்” என்று கணக்கு போடும் நேரத்தில், விசாரணை வேறு ஒரு திசையில் பாய்ந்து, “அடடே, நாம இப்படி எதிர்பார்க்கவே இல்லையே!” என்று ரசிகர்களை ஆச்சரியத்தில் வாயடைக்க வைக்கிறது.

அப்பாவித்தனம், பதற்றம், பயம், குற்ற உணர்ச்சி என அனைத்து உணர்ச்சிகளையும் ஒன்று திரட்டி ‘ஜே.கே’ என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் அருண் கார்த்திக், தனது முகபாவனைகளால் கைதட்டல் பெறுகிறார். வட இந்திய இறக்குமதியான ஹீரோயின் எனாக்ஷி கங்குலி அளவான கிளாமரோடும், கதைக்குத் தேவையான சஸ்பென்ஸை அள்ளித் தெளிக்கும் கதாபாத்திரத்திலும் செம கச்சிதம்.

கிளைமாக்ஸை வெளியே சொல்லிவிட்டால் படத்தின் சுவாரசியமே போய்விடும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! தற்காலத்தின் மிக முக்கியமான ஒரு அதிநவீன தொழில்நுட்ப விஷயத்தைக் கையில் எடுத்து, அதன் அடிப்படையில் கதையைப் பின்னி, கிளைமாக்ஸையும் அமைத்திருக்கிறார் இயக்குநர். அதனால் அந்த மாஸ் ட்விஸ்ட்டை திரையரங்கில் நேரில் பார்த்து அனுபவிப்பது தான் செம மாஸாக இருக்கும்.

துணை கதாபாத்திரங்களில் போலீஸ் விசாரணைக் குழுவாக வரும் கருப்பு நம்பியாரும், சேரன்ராஜும் தங்களின் நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜ் சரவண சக்தியும், டிரைவராக வரும் சுருளியும் கதைக்குத் தேவையான திருப்புமுனைகளை கச்சிதமாக வழங்குகிறார்கள். டாக்டர் சரவணனாக வரும் கஜராஜ், கதையின் முக்கிய ரகசியத்தை உடைக்கும் இடத்தில் மெஜஸ்டிக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் சஸ்பென்ஸை நீட்டித்து திரைக்கதையை அமைத்திருந்தால் படம் வேறு லெவலுக்குச் சென்றிருக்கும். இதுபோன்ற த்ரில்லர் படங்களில் ட்விஸ்ட் உடையும் போது பார்வையாளர்கள் ‘சபாஷ்’ என்று கைதட்ட வேண்டும். அந்த வகையில் இந்த ‘பனி விழும் இரவு’ கிளைமாக்ஸ் ஓரளவுக்கு ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறது என்றே சொல்லலாம்.

மொத்தத்தில், வார இறுதி நாளில் த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் ஒரு அட்டகாசமான படைப்பு தான் இந்த ‘பனி விழும் இரவு’!

Related Posts