“நாகரீகமில்லா மணிரத்னம்!”: வைரமுத்து தாக்கு!
திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, இன்று தனது முகநூல் பக்கத்தில், மணிரத்னம் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களைச் சுட்டிக்காட்டி ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா…” என்று குறிப்பிட்டுள்ள வைரமுத்து, அந்த பாடல் ( தலைப்புகள்) பெயர்களையும் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “இப்படி இன்னும் பல உள்ளன. சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை.
செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில், அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே
என்று அகமகிழ்வேன்.
ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் வைரமுத்து.
அவர் பட்டியலிட்டுள்ள (பாடல்) தலைப்புகள்…
பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்
# மேற்கண்டவற்றில் பல பிரபல இயக்குநர்களின் படங்கள். மௌனராகம் திரைப்படம், வைரமுத்துவின் நண்பர் மணிரத்னம் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரமுத்து, “என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என்று ‘நாகரீகமாக’ கேள்வி எழுப்பினாலும், மணிரத்னம் உள்ளிட்ட அந்த பட்டியலில் உள்ளோருக்கு நாகரீகம் இல்லை என்பதைக் குறிப்பிடுவதாகவே உள்ளது. இது திரைத்துறையில் எந்த மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

