‘வேட்டையன்’ பாடல்கள் சரியில்லை என்கிறாரா வைரமுத்து?
ரஜினியின் ‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், தான் பாடல்கள் எழுதிய ‘பாட்சா’ பட பாடல் அனுபவத்தை இன்று சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
‘பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள்.
‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.
‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன்.
அதிர்ச்சியானவர், நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார்: ‘பாடலாசிரியருக்கு
இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார்.
‘இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன்.
‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார்.
எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன்.
நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார்; நான் பேசாமல்
பெற்றுக்கொண்டேன்.
வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது.
படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.
ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று, என்னைக் கண்டு நின்றது..
காரிலிருந்து இறங்கி வந்தவர், ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை
அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார்.
சென்றேன்.
ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார்.
‘என்ன இது?’ என்றேன்.
‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார்.
‘நன்றி’ என்று பெற்றுக்கொண்டேன்.
தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டேன்.
அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக
வழங்கினேன்’ – இவ்வாறு வைரமுத்து பதிவிட்டு உள்ளார்.
இது வேறுவித சிந்தனையை ஏற்படுத்தி உள்ளது.
தனது அனுபவங்களை பகிர வைரமுத்து உட்பட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை வெளியிடும் நேரம் – காலம்தான் கேள்விகளை எழுப்புகிறது.
1995ம் ஆண்டு வெளியான படம் பாட்சா… முப்பது ஆண்டுகள் ஆகின்றன.. இப்போது ஏன் அந்த பேச்சு..?
அதுவும், ரஜினியின் வேட்டையன் திரைப்ட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றுதான் நடந்திருக்கிறது. இன்று வைரமுத்து, ‘நான் எழுதிய பாட்சா பட பாடல்கள் ஹிட் ஆகின. தயாரிப்பாளர் மீதத் தொகையைக் கொடுத்தார். பாட்சா படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு’ என்றெல்லாம் எழுதுவது, எந்தவிதமான அர்த்த்தைக் கொடுக்கும்?
இளம் பாடலாசிரியர்களை வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை… அவர்களை மறைமுகமாக காயப்படுத்தும் இந்த பதிவு என்பது அறிவார்ந்த வைரமுத்துவுக்குத் தெரியாதா..?
வைரமுத்துவின் கொடைக்குணம், ஊரறிந்ததுதான். ‘அந்த ஐயாயிரம் ரூபாயை ஆட்டோ ரிக்ஷா நிறுத்தத்துக்குக் கொடுத்தேன்’ என இப்போது பறைசாற்ற வேண்டுமா?
திரைப்பாடல்களைத் தாண்டி, இலக்கியத்திலும் முத்திரை பதித்த – பதிக்கும் வைரமுத்துவுக்கு இது அழகா?
அவரது தமிழ்ப்புலமையை கொண்டாடுகிறோம்… மீ டூ விவகாரத்தில் அவர் மீது வீண் பழி சுமத்தப்படுவதை கண்டித்தோம்… ஆனால் வைரமுத்துவின் இந்த பதிவு ஏற்கத்தக்கதாக இல்லை… இந்த சூழலில்…!
– டி.வி.சோமு
# பின் குறிப்பு:
பாட்சா படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்கள்:
@ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டு ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
@ நீ நடந்தால் நடை அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
நீ பேசும் தமிழ் அழகு
நீ ஒருவன் தான் அழகு
@ நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
@ ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா
@ தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்..
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்..
@ ஸ்டைலு ஸ்டைலு தான்
இது சூப்பர் ஸ்டைல் தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்