வாழை : விமர்சனம்

வாழை : விமர்சனம்

சிறு வயதில் தான் அனுபவதித்த ஒரு கொடூர சம்பவத்தை, வாழை திரைப்படமாக அளித்து இருக்கிறார் மாரி செல்வராஜ். இது அவருக்கான துயர் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த சமுதாயத்துக்குமானது என்பதுதான் முக்கியமான விசயம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறு கிராமம்தான் கதைக்களம். இங்கு, விவசாய கூலி வேலை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவன், சிவனைந்தன். அப்பா இறந்துவிட்ட சூழலில் அம்மா மற்றும் அக்காவுடன் வாழ்கிறான்.

அம்மாவும், அக்காவும்,சுற்றுவட்டாரத்தில், வாழைத் தோட்டத்தில் தார் அறுக்கும் வேலை செய்து வருகிறார்கள். ஒரு தாருக்கு ஒரு ரூபாய் என சம்பளம்.

பள்ளி விடுமுறை நாட்களில் சிவனைந்தனும், இவனது நண்பன் சேகரும் கூட இந்த வேலைக்குச் செல்ல பணிக்கப்படுகிறார்கள்.

ஒரு விடுமுறை தினத்தில், அக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு, தார் அறுக்கச் செல்லாமல் பள்ளி விழா ஒத்திகைக்குச் செல்கிறான் சிவனைந்தன்.

அந்த கறுப்பு நாளில் என்ன நடந்தது என்பதுதான் உறைய வைக்கும் உச்சகட்ட காட்சி… ஒட்டுமொத்த திரைப்படம்.

சிவனைந்தனாக பொன் வேல், அவனது நண்பன் சேகராக ரகு ஆகியோர் நடித்து உள்ளனர். இருவரும் அடித்துக்கொள்வது.. பிறகு சேர்ந்து சுற்றுவது, கமலா ரஜினியா என சண்டை போடுவது, டீச்சர் மீதான ஈர்ப்பு… என அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.டீச்சராக நிகிலா, அம்மாவாக ஜானகி, அக்காவாக திவ்யா துரைசாமி, போராட்ட குணமுள்ள இளைஞனாக கலையரசன் என அனைவருமே அற்புதமாக நடித்து உள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் – குறிப்பாக, இறுதியில் இடம் பெறும் ஒப்பாரி பாடல் – நெகிழ வைக்கிறது.

நடிகர் ராமராஜன் வேட்பாளராக வாக்கு கேட்கும் சுவர் விளம்பரம், ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிக்கொடி, ‘தூதுவளை இலை அரைச்சு’ போன்ற பாடல்கள் ஆகியவை நம்மை 1990களுக்கு அழைத்துச் செல்கின்றன.தேனி ஈஸ்வரின் கேமரா, நடப்பவை எல்லாம் உண்மை என்கிற அளவுக்கு நம்மை, கதை மாந்தர்கள் அருகில் அழைத்துச் செல்கிறது.

ஆசிரியை மீது சிறுவர்களுக்கு ஏற்படு்ம் ஈர்ப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து காட்சிகள் வைத்திருக்க வேண்டியதில்லை.

மனிதர்களின் பண வெறியை – சம மனிதரை உயிராக நினைக்காத போக்கை – மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறது திரைப்படம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Related Posts