இந்த சாதி பெண்ணை லவ் பண்ணவே முடியாது! எந்த சாதி தெரியுமா?

‘உயர் சாதி’ என கூறப்படும் பெண்ணை, ‘தாழ்ந்த சாதி’ என கூறப்படும் ஆண், காதலித்து திருமணம் செய்துகொண்டால், இங்கே எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜமாகிவிட்டது. அப்போதலெ்லாம், “அதென்ன உயர்சாதி பெண்ணிடம்தான் காதல் வருமா? நரிக்குறவ பெண்களிடம் காதல் வராதா.. ஏன் எவரும் நரிக்குறவர் இன பெண்களை காதலித்து திருமணம் செய்வதில்லை..” என்று சமூகவலைதளங்களில் பலரும் கருத்திடுவதைப் பார்க்க முடியும்.
 
நரிக்குறவர் இனத்தை… குறிப்பாக அந்த இனத்துப் பெண்களை தாழ்வானவர்கள் என எண்ணும் மனநிலையே இது போன்ற கருத்துக்களுக்குக் காரணம்.
 
“உண்மையில் நரிக்குறவர்கள் உயர்வானவர்களே. அன்றன்று உழைத்து அன்றன்று உண்டு, நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். ஓரிடத்தில் நிரந்தரமாக வாழும் மக்களால்தான், அத்தனை அட்டூழியங்களும், இயற்கையை அழிக்கும் செயலும் நடக்கின்றன” என்கிறார்கள் சமூகவியல் அறிஞர்கள்.
 
மேலும், “தவிர, பிறர் நினைப்பது போல நரிக்குறவன் இன பெண்களை காதலிப்பது என்பதே நடக்காது. அத்தனை கட்டுப்பாடுகள் உண்டு!” என்கிறார்கள்.
 
இது குறித்து நாமும் தெரிந்துகொள்வோமா?
 
”தெருவோரங்களில் வாழ்பவர்களாக, ஊசி, மணி, பாசி விற்பவர்களாக, கையேந்துபவர்களாக நாம் கடந்துபோகும் நரிக்குறவர்கள், வீர மரபைச் சேர்ந்தவர்கள்.
 
மராட்டிய மாமன்னன் வீர சிவாஜியின் சிவாஜியின் படைப்பிரிவில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள், இவர்கள். முகமதியர் படையெடுப்பில், மராட்டிய வம்சத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட பிறகு, படைவீரர்களாக இருந்த நரிக்குறவர்கள் அடிமைகளாக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்கள்.
 
ஆகவே காடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட உடைகள், அவர்களை அடிமைகள் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன. ஆகவே, அவற்றை களைந்துவிட்டு இலை, தழைகளை உடுத்திக் கொண்டனர். உணவுக்காக பறவைகளையும், மிருகங்களையும் வேட்டையாடினர்.
 
இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பிரிட்டிஷார் காடுகளுக்கு வேட்டையாடச் சென்றபோது, காடுகளில் வாழ்ந்த இம்மக்கள் அவர்களுக்கு உதவி செய்தார்கள். இவர்களின் வேட்டையாடும் திறனைக் கண்டு வியந்த பிரிட்டிஷ் துரைமார்கள், இவர்களுக்கு துப்பாக்கி வழங்கி வேட்டையாடிப் பிழைக்க வழியும் செய்து தந்தார்கள்.
 
பிறகு இந்தியா முழுவதும் பரவி வாழ ஆரம்பித்தனர் நரிக்குறவ இன மக்கள். தமிழகத்தில் வசிக்கும் இம்மக்களுக்கு, நரி விருப்பத்துக்குரிய உணவாக இருந்ததால், நரிக்குறவர் என்று அழைக்கப்பட்டனர்.
 
இவர்கள் பேசுவது, “வாக்ரி போலி” என்னும் மொழி. இதற்கு எழுத்து வடிவம் இல்லை.
 
நரிக்குறவ மக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுக்கோப்பானது. குறிப்பாக பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
அதேநேரம், பிற சமூகங்களை விட பெண்களுக்கு அதிக மரியாதையும் உண்டு. குறிப்பாக, வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், விழா எடுத்து கொண்டாடுவார்கள்.
 
இவர்களது சமூகத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை தான் வரதட்சணை தர வேண்டும். திருமணச் செலவும் மாப்பிள்ளை வீட்டாரே செய்ய வேண்டும். அதற்கு தகுதிபடைத்த ஆணுக்கு மட்டுமே பெண் கிடைக்கும்.
 
இன்னொரு முக்கியத் தகுதி, மாப்பிள்ளைக்கு சாமி சொத்து இருக்க வேண்டும். சாமி சொத்து என்பது, மூதாதைகள் கொடுத்துவிட்டுப் போன வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள்.
 
நரிக்குறவர்களில் இரண்டு வகை உண்டு. எருமை வெட்டுபவர்கள், ஆடு வெட்டுபவர்கள். எருமை வெட்டுபவர்கள், ஆடு வெட்டுபவர்கள் வீட்டில் மட்டுமே பெண் எடுக்க வேண்டும். ஒரே பிரிவில் எடுத்தால் அண்ணன் தங்கை முறை வந்து விடும் என்று தவிர்க்கிறார்கள்.
 
இப்போது ஆங்காங்கே சில காதல் திருமணங்கள் நடக்கின்றன. பெரும்பாலும் தனக்கு மாப்பிள்ளை முறை உள்ளவர்களில் ஒருவரையே நரிக்குறவ பெண்கள் காதலிக்கிறார்கள். இதை பஞ்சாயத்தில் பேசி அனைவரும் ஏற்கிறார்கள்.
 
பிற சாதி இளைஞரை திருமணம் செய்வது என்பது நடக்காத விசயம். விதிவிலக்காக ஓரிரண்டு சம்பவங்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களை தங்களது சமுதாயத்தில் சேர்க்காமல் விலக்கி வைத்துவிடுவார்கள்.
 
திருமணத்தில் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் ஏகப்பட்ட மரியாதை செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில், பரிசப்பணம், 250 ரூபாயாக இருந்தது. இன்று, 25 ஆயிரத்துக்கு மேல் ஏறிவிட்டது.
 
திருமணத்துக்குப் பிறகு, ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒத்துப்போகாத நிலையில் வெகு எளிதாக அந்த பந்தத்தில் இருந்து வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சாயத்துக் கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒன்று சேர்க்க முயற்சிக்கும். முடியாத பட்சத்தில் எளிய தீர்வு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக்கோலை எடுத்து மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடவேண்டும். . பிறகு இருவருமே புதுவாழ்க்கையை தொடங்கலாம்!
 
இந்த அளவுக்கு எளிமையான வாழ்க்கை முறையை கொண்ட நரிக்குறவர் இனத்தினரை.. குறிப்பாக பெண்களை இழிவாக நினைக்காதீர்கள்..” என்கிறார்கள்ச சமூகவியல் அறிஞர்கள்.

Related Posts