வி.சி.க.வின் வீழ்ச்சி!: டி.வி.சோமு

வி.சி.க.வின் வீழ்ச்சி!: டி.வி.சோமு

என்னை அறியாதவர்கள் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், நான் ஏதோ வி.சி.க.வுக்கு எதிர் நிலைப்பாடு கொண்டவன் என நினைக்கக் கூடும்.

அவர்கள் கீழே உள்ள எனது கட்டுரையைப் படித்துவிட்டு, தொடருங்கள்.

https://tamilankural.com/thirumavalavan-vck-tv-somu-adhav-arjuna-ambedkar-book-vijay/

மற்றவர்கள் வாருங்கள்…

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்விழ் வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தி.மு.க.வை எதிர்த்து வார்த்தைகளால் களமாடினார். அவர் சார்ந்த கட்சியின் நிலைபாடுக்கு எதிரான அந்த பேச்சுக்கள் ஆச்சரியம் அளிக்கவில்லை. போகட்டும்… தேர்தல் அரசியல் குறித்த அந்த விவகாரங்கள் அவர்களது கட்சி விவகாரம்.

நான் கவனத்தில் கொண்டது வேறு ஒரு விசயம்.

போகிற போக்கில் அவர், “காஞ்சி சங்கராச்சாரியார் மகாபெரியவா, நல்ல சாமியார்” என்றார்.

தற்போதைக்கு (உயிருடன் இருக்கும்) விஜயேந்திர சங்கராச்சாரியார், அவருக்கு முன் பெரியவர் 2018ல் மறைந்த ஜெயேந்திர சரஸ்வதி. இருவரைப் பற்றியும் (பாலியல், கொலை புகார், தமிழுக்கு எதிர்ப்பு, பெண்களை இழிவு படுத்தியது என்று விமர்சனங்கள்) அனைவரும் அறிவர்.

இந்த இருவருக்கும் முந்தையவர்தான், மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார்.

அவரது கருத்துக்களைக் கொண்ட தெய்வத்தின் குரல் என்கிற நூலை படித்தாலே அவரது மனநிலை தெரியவரும்.

“இன்னமும் முழுக்க அணைந்து போகாமல், ஒரு சில பெரியவர்களிடமாவது சனாதன தர்மம் இருக்கிறது. இந்த சனாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்ய வேண்டும் என்பது என் பேராசை.

எல்லாரையும் சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டுபோயிருக்கிறது. ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் உயிர்வாழ்கிறது.

ஒட்டுமொத்த சமுதாயத்தை கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிப்பதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு சாதி என்று பிரித்தார்கள். அந்தந்த சாதிக்கு உரிய தொழிலை அவரவர் செய்ய வேண்டும். இந்த ஒழுங்கு தவறினால் அவர்களை சாதியை விட்டு நீக்க வேண்டும்” – இதுதான் சனாதனம், சாதி குறித்தெல்லாம் மகாபெரியவா கருத்து.

இந்த பெரியவாவும் தமிழ் பேசினால் தீட்டு என்றவர். கைம்பெண்களை, தலித்களை பார்த்தாலே தீட்டு என்று வாழ்ந்தவர்.

இதையெல்லாம் அறிய சில நூல்களை ஆதவ் அர்ஜூனா படிக்கலாம்.

அவை… சனாதனம்: பெண்களை ஒடுக்கும் கருத்தியல், பெரியார் பிறவாமல் இருந்தால், பவுத்தம் மானுட விடுதலைக்கான கோட்பாடு, பவுத்தம் – சனாதனத்தை வேரறுக்கும் ஆயுதம், மதமும் மதமாற்றமும்..

இந்த புத்தகங்களை ஆதவ் அர்ஜூனா பெறுவது மிக எளிது. உங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் எழுதிய புத்தகங்கள்தான் இவை.

தவிர, சனாதனம் குறித்து விசிக இலவசமாக விநியோகித்த புத்தகத்தை ஆதவ் அர்ஜூனா படிக்கலாம்.

அல்லது திருமாவளவன் பேசிய வீடியோக்கள் சிலவற்றையும் அவர் பார்க்கலாம்.

ஒரு வீடியோவில் திருமா, “என்று சங்கராச்சாரியார் எங்களை அழைத்து மார்போடு கட்டித்தழுவி நீயும் என் சகோதரன்தான் என்று சொல்கிற நாள்தான் புரட்சியாளர் அம்பேத்கர் வெற்றிபெறுகிற நாள்; செயின் ஜார்ஜ் கோட்டை திறக்க வேண்டும் என்பதல்ல நம் நோக்கம்.. செங்கோட்டை கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்பதல்ல நம் நோக்கம்..கோயில் கருவறை கதவுகள் திறக்கப்படவேண்டும்.. சங்கர மடத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.. அதுதான் நமது நோக்கம்” என்று ஆக்ரோசமாக பேசி இருப்பார்.

காஞ்சி ரயில் நிலையத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டு பெரியவா சங்கராச்சாரியார் படம் வைக்கப்பட்டபோது திருமா கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்தார்.

தன் மீதான கைது நடவடிக்கைக்குக் காரணம் காஞ்சி சங்கராச்சாரியார், (அப்போதைய முதலமைச்சர்) ஜெயலலிதாவுக்குக் கொடுத்த அழுத்தம் என்றார், திருமா.

மதுரையில் நடைபெற்ற அவரது மணிவிழாவே “சனாதன சக்திகளை தனிமைப் படுத்துவோம்” என்கிற தலைப்பில்தான் நடந்தது. அப்போது அவர், “சனாதன சக்திகள் நாட்டை பாழாக்கும் நாசகார சக்திகள். அவர்களோடு யாரும் தேர்தல் உறவு வைத்துக்கொள்ள கூடாது. இது அதிமுகவுக்கும் விடுக்கும் கோரிக்கை” என்றார்.

அந்த சனாதனமாகவே வாழ்ந்த சங்கராச்சாரியார் மகா பெரியவாவைத்தான் நல்லவர் என்கிறார் ஆதவ் அர்ஜூனா.

இப்படிப்பட்டிப்பட்டவர்தான் வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் என்பதுதான், அக்கட்சியின் வீழ்ச்சி!

தேர்தல் வெற்றி வாய்ப்பை இழப்பது, வெற்றிக் கூட்டணி அமைக்க முடியாதது, அமைத்தாலும உரிய இடங்களைப்பெற முடியாதது என்று தேர்தல் அரசியலில் ஏற்படுவது தோல்வி. அந்தத் தோல்விகளில் இருந்து மீண்டெழ முடியும். வி.சி.க.வும் அப்படிப்பட்ட தோல்விகளைக் கடந்து – எழுந்து வந்திருக்கிறது.

ஆனால் தற்போது வி.சி.க. கண்டிருப்பது வீழ்ச்சி.

ஆம்… சனாதனத்துக்கு எதிராக வேறெந்த கட்சியையும் விட களமாடிய வி.சி.க., அது குறித்த புரிதலே இல்லாத நபரை துணைப் பொதுச்செயலாளராக கொண்டிருப்பதும், அவரது பேச்சுக்கு உரிய எதிர்வினை இல்லாததும் வீழ்ச்சியே.

தோல்வியில் இருந்து முயன்று மீளலாம்.. வீழ்ச்சியில் இருந்து எழுவது கடினம்.

தவிர இந்த வீழ்ச்சியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவனால் மீள முடியுமா என்பதைவிட மீள விரும்புகிறாரா என்பதே முக்கிய கேள்வி!

எப்படி இருந்தாலும் நமக்கு வருத்தமே.

  • டி.வி.சோமு

Related Posts