தடுமாறும் திருமா!: பத்திரிகையாளர் டி.வி.சோமு

தடுமாறும் திருமா!: பத்திரிகையாளர் டி.வி.சோமு
விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்,  தனது முடிவுகளில் சமீப நாட்களாக (ஆதவ் அர்ஜூனா விசயங்களில்) தடுமாறுவதாக, பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அந்தக் கட்டுரை…
“வி.சி.க. தலைவர் திருமாவளவன் அவர்களின் அரசியல் பயணம் ஆச்சரியகரமான ஒன்று.
எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை.. அரசியலைத் தவிர்த்த பிரபலமும் இல்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து அதன் மூலமாக இயக்கம் கட்டி, ஆரம்பத்தில் விரும்பாமல் பிறகு தேர்தல் அரசியலுக்கு வந்தவர்.
நான்கைந்து முறை அவரை பேட்டி கண்டிருக்கிறேன்.
முதல் முறை, கே.கே. நகர் பகுதியில் உள்ள அலுவலக மாடி. இரவு ஒன்பது மணிக்கு நேரம் கொடுத்து இருந்தார். அவர் வரும்போது நேரம் இரவு பதினொன்று. காரணம், பொதுக்கூட்டம் முடிந்து வரும் வழியெங்கும் தொண்டர்கள் அன்பால் அவரது காரை நிறுத்த… தவிர்க்க முடியாமல் தாமதம்.  அடுத்து அவரது தி.நகர் அலுவலகத்தில்.. அதற்கடுத்து – சில வருடங்கள் முன்பு – அவரது வேளச்சேரி அலுவலகத்தில்.
வழக்கம்போல அவரிடமும் எதிர்மறை கேள்விகள்தான் என்றாலும், அவர் மீது மிகுந்த மதிப்பு உண்டு.
ஆரம்பத்திலேயே சொன்னது போல சுயம்புவாக உருவானவர்…
துவக்க காலத்தில் அவரது மேடைப் பேச்சுக்களில் சில சர்ச்சைக்கிடமானவையாக இருந்தாலும் பிறகு கனிந்தவர்… அவரது நாடாளுமன்ற உரைகள் மட்டுமல்ல, மேடைப் பேச்சுக்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை, குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டியவை..
பேச்சும், எழுத்தும் ஒருங்கே அமைவது அபூர்வமே. அவர் எழுதிய, அமைப்பாய் திரள்வோம், காந்தியம் ஓர் உரையாடல், தந்தை பெரியார் பிறவாமல் இருந்தால் உள்ளிட்ட நூல்களைப் படித்தவர்களுக்கு இது புரியும்.
அவரது பிறந்தநாள் மலருக்கு என்னிடமும் வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு கட்டுரை கேட்டார்.  மருத்துவமனையில் இருந்ததால் எழுத முடியவில்லை. அந்த வருத்தம் இன்றும் உண்டு.
எல்லாம் கடந்து… எந்தவொரு முடிவையும் யோசித்து… ஆனால் தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடியவர் என்பதால் திருமாவளவன் அவர்கள் மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு.
தற்போது அவர் தடுமாடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
அவரது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆட்சியில் பங்கு என்கிற விசயத்தை முழங்க… தொடர்ந்து திருமா அவர்கள் தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டு அழித்து வெளியிட்டு அழித்து தடுமாறினார்.
அடுத்து… “தேர்தல் நேரத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்களை கொண்டுவந்து வார்டு வாரியாக குவிக்கிறீர்களே… வெள்ள நிவாரணத்துக்கு அப்படி செயல்பட வில்லையே” என்று அதே ஆதவ் அர்ஜூனா புதிய புயலை கிளப்ப..
பதிலுக்கு, “தேர்தல் என்பது நீண்ட காலம் முன்பே அறிவிக்கப்படுவது.. அதை உணர்ந்து செயல்படலாம். புயல் வெள்ளம் அப்படியா.. தவிர விழுப்புரம் வெள்ள சேதத்துக்கு தொகுதி எம்.பி. மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் தொண்டர்கள் எத்தனை வந்தனர்” என்கிற பதில் கேள்வி எழுந்தது…
திருமாவிடமிருந்து பதில் இல்லை!
இதற்கிடையே, அதே ஆதவ் அர்ஜூனா தொகுத்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா குறித்த விவகாரம்.
இது குறித்து விஜய், ஆனந்தவிகடன், தினமலர், இதர ஊடகங்கள் என அனைவரின் மீதும் குற்றம் சாட்டுகிறார் திருமா. அவரது அறிக்கையை அவரே மீண்டும் படித்தால் நிச்சயமாக வருத்தப்படுவார்.
“புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் திருமா அவர்கள் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள்” என்றார் வி.சி.க.வின் இன்னொரு துணைப் பொதுச் செயலாளரான வன்னி அரசு.
“அம்பேத்கர் பற்றிய புரிதல் இல்லாதவரை.. பாயாசம் கிண்டுகிறவரை ஏன் அழைத்தாய்” என நூல் ஆக்கத்துக்கு காரணமான இன்னொரு துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனாவை கட்சித் தலைவரான திருமா கேட்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இப்போது, ‘திருமா கலந்துகொள்ள ‘தகுதி’ இல்லாத விழாவில், அவரது கட்சி துணைப் பொதுச்செயலாளர் கலந்துகொள்ளலாமா’ என்ற கேள்வியும் எழுகிறது. அட… அந்த துணைப் பொதுச் செயலாளரின் நிகழ்வு தானே அது!
ஏற்கெனவே சொன்னதுபோல.. ஆழ்ந்து யோசித்து தீர்க்கமாக முடிவெடுக்கக்கூடியவர் திருமா.  ‘ஆதவ் அர்ஜூனா தனிப்பட்ட சுதந்திரம்’ என் சொல்லி இருக்கலாம்.
ஆனால்  தடுமாறுகிறார்…
இது ஆதவ் அர்ஜூனா வி.சி.க.வுக்குள் வந்த பிறகுதான் என்றே தோன்றுகிறது.
காரணம் என்னவென்று தெரியவில்லை…
திருமா எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கட்டும்… அது அவர் உரிமை.
ஆனால் அவர் குழம்பும் நிலையில் அவர் இருப்பது… தடுமாறுவது.. பரிதாபமாக இருக்கிறது!
– டி.வி.சோமு” – இவ்வாறு தனது சமூகவலைதள பக்கத்தில டி.வி.சோமு தெரிவித்து உள்ளார்.

Related Posts