“சல்யூட்!”: ‘பாராசூட்’ டீமுக்கு கிடைக்கும் தொடர் பாராட்டு!

டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி இருக்கும் பாராசூட் வெப் தொடருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஃபீல் குட் + சுவாரஸ்யமான த்ரில்லர் என டபுள் டமாக்காவாக உருவாகி இருக்கும் இத்தொடர், குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது.
இத்தொடரை பார்த்து பலரும் சமூகவலைதளங்களில் பாராட்டி எழுதி வருகின்றனர். அவர்களின் ஒருவரான “இயற்கை” என்கிற பெயரில் பேஸ்புக்கில் இயங்கும் ஒரு ரசிகரின் பதிவு இது.
“#பாராசூட் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. ஏன் இந்தத் தொடர் பரவலாகப் பேசப்படவில்லை, எங்கும் எழுதியிருப்பதைக் கூட பெரிதாகக் காணமுடியவில்லை. ஒருவேளை நமக்குத்தான் கண்ணில்படவில்லையா ?!
ஆனால் அப்படி பரவலாகப் பேசப்படவேண்டிய, பேசியே ஆகவேண்டிய அருமையான தொடர் #parachute
எங்கேனும் சின்ன லாஜிக்கல் எரர் ல் மாட்டிக் கொள்வார் என்று கண்களை வலைபோல வீசிக் காத்திருந்தாலும் பெரிதாக ஒன்றும் தென்படவில்லை. இயக்குனர் அந்த வேலையை முன்னமே செய்துவிட்டிருப்பார் போலிருக்கிறது. மிக நேர்த்தியான திரைக்கதை. ஒரு சின்ன பிள்ளை நடிக்கிறான் என்பதைக் கூட மறந்து அந்தப் பாத்திரத்தின் மேல் வாய்விட்டுத் திட்டும் அளவிற்குக் கோபம் வருகிறதென்றால் திரைக்கதையின் வெற்றிக்கு வேறெந்த உதாரணமும் தேவையில்லை.
ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் லௌகீக வாழ்க்கைமுறை அன்றாடங்களை பிரச்சாரம் போல் இல்லாமல் மிக எதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒரு கடுமையான தந்தைக்கான அறிவுரைகள் நமக்குள் துளிர்த்தாலும் அந்தக் கடுமைக்கான பின்னணியைக் காட்சியால் சொல்லிவிடும்போது, ஒரு நொடி கூட நமது அறிவுரைகளை நாமே கடைபிடிப்போமா என்ற கேள்வி எழும்பிவிடுகிறது.

மூன்று மாடி முழு சிலிண்டரைத் தூக்கிச்சென்று டோர் டெலிவரி செய்யும் குடும்பஸ்தனை 20 ரூபாய் டிப்ஸுக்காக பிச்சை எடுக்கற என்று அவமானப்படுத்துவார் ஒரு நுகர்வாளி. அப்படியொரு தந்தைக்கு அந்த வாழ்க்கையை தன் பிள்ளையை வைத்து வென்று மண்டியிடச் செய்யவேண்டும் என்ற சங்கல்பம் தோன்றி பின்னர் அது பிள்ளைகள் இந்தக் கடினமான சூழலுக்குள் வந்துவிடவே கூடாதெனும் கடமையாக மாறிவிடும் போது பிள்ளைகளோடு நிலா பார்த்து இரசித்துவிடமுடியாது என்பதை வசனங்களால் இல்லாமல் காட்சிகளால் உணர்த்துகிறார் இயக்குனர்.
அதே நேரம் குழந்தைகளின் உலகம் அந்தந்த நேரத்திற்கான எதிர்பார்ப்புகளாலும் கற்பனைகளாலும் ஆனது. தாய் தந்தை பற்றின அவர்களின் தீர்மானங்கள் மிக எளிமையானது. எத்தனை கடுமையையும் வைத்துக்கொள்ளுங்கள் சிரித்து நிதானமாய்ப் பேசுங்கள் அவ்வளவு தான்.
இந்த இரு துருவங்களையும் சமன் செய்யும் காலத்தின் திருப்பங்கள் எதை அல்லது யாரது இருப்பை நியாயப்படுத்துகிறது என்பதான #கேஸ்ரீதரின் கதைச் சரட்டை தெளிந்த துல்லியமான இயக்கத்தால் எங்கும் அறுபடாமல் நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் #RasuRanjith
படத்தின் அல்லது தொடரின் ஐந்து பாகங்களில் மனதை விட்டு நீங்காத காட்சிகளென இரண்டைச் சொல்கிறேன்.,
முதல் ஒன்றில் தந்தை மனவியோடு அததற்கென்று தனியறைகள் இல்லாத அந்த வாடகை வீட்டின் சமையலறையில் குடித்தபடி பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது தன் இரண்டாவது குழந்தையான மகள் அறைப் பக்கமாகத் திரும்புகிறாள் என்றறிந்து அவள் ஏதும் பார்த்துவிடக் கூடாதென்று அனிச்சையாகச் சரக்கென இழுத்து மதுபுட்டியை மறைத்துக் கொள்கிறான். குழந்தை உள்ளே வந்துவிடாமல் சமாளித்து மனைவி வெளியே சென்று குழந்தையின் கவனத்தை மாற்றுகிறாள்.
இந்தக் காட்சியில் கேமரா க்ளோசப் வைத்து தந்தை செய்ததை ஒரு அருஞ்செயல் போல ஒரு செண்டிமண்ட் பிரசங்கமே செய்திருக்க முடியும் ஆனால் அப்படி எந்தத் துயரமும் நடக்கவில்லை. எந்த ஆர்பாட்டமுமில்லாமல் காட்சி கதையின் அடுத்த நகர்தலுக்குச் சென்றுவிடுகிறது.
இரண்டாவதான அந்தக் காட்சி டைரக்டர் ட்ச்-ன் கவித்துவமான உச்சம். ப்ரிவியஸ் கொடுத்துக் கொடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். தொலைந்த குழந்தைகளை மொழியறியா வேறொரு மாநிலத்தின் கலவர பூமியில் பெரும்பாடுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் அங்கும் பையன் தந்தையைக் கண்டதும் அடிக்குப் பயந்து ஓடி பதுங்கிக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் மேற்கொண்டு ஓடமுடியாத இடத்தில் மாட்டிக் கொண்டு அப்பாவைப் பார்த்து அப்பா, தெரியாமக் செஞ்சுட்டேன் பா சாரி பா அடிக்காதிங்கப் பா என்று கேவுகிறான். முன்னமே தனது கடுமை குணம் என்கிற தவற்றை உணர்ந்திருந்த தந்தை அதை அவனுக்கு உணர்த்தமுடியாமல் அடிக்க மாட்டேன் டா என்ன மன்னிச்சிடு டா என்று விம்முகிறார்.

என்றாலும் பிள்ளை பயத்தில் கால்சட்டையிலேயே சிறுநீர் போகிறான் அது அவன் மறைந்திருக்கும் பேரலுக்குப் பின்னிருந்து நெளிந்து வருகிறது. அதைப் பார்த்த தந்தையின் கண்களில் முட்டியிருந்த கண்ணீர் மன்னிப்புக் கோருவதைப் போல வழிந்து வருகிறது. இன்னொரு பக்கம் அம்மாவிடம் அடைக்கலமான பென்பிள்ளை விக்கலில் தவிப்பதை கலவரத்தால் அடைக்கப்பட்ட ஒரு வீட்டின் சன்னல் வழியே பார்க்கும் அந்த ஊர்க் குழந்தை துணிச்சலாக கதவு திறந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து குடி என்று கன்னடத்தில் சொல்கிறது.
இந்த அழுத்தமான அழகிய காட்சியில் நீர் யாவற்றையும் சமப்படுத்துவதான இயற்கையின் பேரியல்பு ஓர் நிகழ்த்துக் கலையைப் போல காட்சியாகிறது. கர்நாடகத் தண்ணீரில் விக்கலின் தவிப்பு நிற்க, தந்தையின் கண்ணீரில் அவரது அதுவரையிலான இருப்பு கரைய, மகன் ஆடையோடு போன சிறுநீரில் அவனது தந்தைமை குறித்தான ஏக்கம் தீர தொடர் நிறைவாகிறது.
தவித்தால் தண்ணீர் தருவது மனிதம் என்பதை கர்நாடக மண்ணிலேயே சென்று சொல்வதைப் போலான அந்தக் காட்சியில் நீர் அரசியலையும் சமமாக்குகிறார் இயக்குனர்.
தொடரின் முதல் பகுதி தொடங்கி கடைசிப் பகுதி வரையிலும் மனிதம் என்கிற அர்த்தப் பூர்வமான உணர்வு எல்லா மனிதர்களிடத்தும் ஆடும் கண்ணாமூச்சியாட்டங்களும் பிறகு அதையே ஒவ்வொருவரும் கண்டுபிடித்து நெகிழ்வதும் எந்தவித ஆர்ப்பாட்டங்களின்றி காட்சியாகியிருக்கின்றன.
நடிப்புப் பற்றிச் சொல்வதானால், குழந்தைகள் இருவரும் தாங்கள் எந்த உயரத்தில் சஞ்சரிக்கிறோம் என்று தெரியாமலேயே அசத்தியிருக்கிறார்கள். அம்மாவாக வரும் கனி ஆஹா… இது அவரது முதல் நடிப்பு என்பதை வெள்ளிவிழா இயக்குனர் திரு Ahathian Sannasi அவர்களது தன் மகளை உச்சிமுகரும் பதிவின் வழிதான் தெரிந்துகொள்ள முடிந்தது. அந்தப் பாத்திரத்தில் சுமந்துப் பெற்ற அசல் தாயாகவே மாறிப் போயிருக்கிறார். ஒருவேளை தூக்கத்தில் கனவில் கூட தாய்மை பிரம்மை கொண்டவராக அவர் இருந்திருக்கக் கூடும். வாழ்த்துகள் சகோதரி. தோழர் கிஷோர் அதுவரை அவரைப் பார்த்திராத முற்றிலும் புதிய கோணத்தில் மனதை நெகிழ்த்துகிறார்.
போக்குவரத்து காவலராக கிருஷ்ணா.. என்று ஒவ்வொருவரும் தொடரை தொடர்போல பார்க்கவைக்காமல் தொடர்ச்சியாக அடுத்தடுத்துப் பார்க்க வைக்கிறார்கள். தாத்தாவாக அன்பு அண்ணன் Bavachelladurai Bava காவல் நிலையத்தில் உடைந்து போகும் காட்சியில் நம்முள்ளும் ஏதோ உடைகிறது. மிகக் குறைவான தோற்றம் என்றாலும் சல்யூட் ணா. இதற்கு முன்புவரை கோழிப்பண்ணைசெல்லதுறை தான் அண்ணனுக்குப் பொருந்தியிருந்தது என்றிருந்தேன் ஆனால் பாராசூட் தொடர் அதற்குப் போட்டியில் நிற்கிறது.

கோலா வாக இயக்குனரே நடித்திருக்கிறார். அசத்தல்தான். பாறைக்குள் ஈரம் போல அவரது உருவத்திற்குள் இப்படி மனித மனங்களை அசைத்துப்பார்க்கும்படியாக ஒரு படைப்பைத் தரும் மனிதம் வாழ்ந்து வருவருகிறது என்பது ஓர் ஆச்சர்ய உண்மை.
மொத்தத்தில் எல்லோரும் குடும்பத்தாருடன் எல்லா இடையூறு சாத்தியங்களையும் அடைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய., அல்லது இப்படிக்கூட சொல்லலாம் குடும்பத்துடன் பார்த்தே ஆகவேண்டிய அற்புதமான தொடர் பாராசூட்.
ஏனெனில் இந்த வகைமையான படங்களில்/தொடர்களில், ஒன்று குழந்தைகளுக்கான கருத்து முதன்மைப்படும் அல்லது பெற்றோருக்கான கருத்து முதன்மைப்படும் ஆனால் பாராசூட் விதிவிலக்காக இரு தரப்பிலுமான எதார்த்த நியாயங்களைப் பேசி இரு பக்கங்களுக்கும் Humanistic தர்க்கங்களால் தீர்வைத் தந்து மனதை நிறைக்கிறது.
குறையே இல்லையா என்றால், இசை யுவன் என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் அது எதிர்பார்ப்பைப் பொறுத்து மாறுபடலாம். குழந்தைகள் தாங்கள் கடத்தப்பட்டிருக்கும் கண்டெய்னரில் பர்த்டே கொண்டாடுவது, பக்கா சினிமாத் தனம். அது கூட தொடரின் எல்லா பகுதிகளும் பெரும்பாலும் எதார்த்தத் தளத்தில் இயங்குவதால் தெரிவது. பிறகு… கடைசியில் வாகனத்துடன் கடத்தல் காரர்கள் மாட்டுவதும் சினிமாதான் ஆனால் நிறைவோடு முடிக்க வேண்டுமாயின் அங்கே அது தேவை.
தொடரின் பெயர் என்னதான் கதைப்படி குழந்தைகள் சூட்டும் பைக்கின் பெயர் என்றாலும் பொருத்தமாக இல்லையோ என்று தோன்றுகிறது ஒட்டவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் அழகாக ஆர்டிஸ்டிக் ஆக வைத்திருக்கலாம். ப்ரமோ போஸ்டர்கள் கூட ஆக்ஷ பட போல தோற்றமளிக்கிறது. இந்த நடிகர்களை மட்டும் வைத்து என்ன ஆக்ஷன் படம் என்பது போல கடக்கலாம். இதெல்லாம் ஒரு குறையா என்றால் குறை அல்ல ஒரு நல்ல படைப்பின் மீதான கூடுதல் எதிர்பார்ப்பு அவ்ளோதான். மற்றபடி…
சல்யூட் த டீம் பாராசூட்.