திருட்டுப் புகார்! வாக் அவுட் செய்த இயக்குநர்! ‘ஜாலியோ ஜிம்கானா’ பிரஸ் மீட்டில் பரபரப்பு!

திருட்டுப் புகார்! வாக் அவுட் செய்த இயக்குநர்! ‘ஜாலியோ ஜிம்கானா’  பிரஸ் மீட்டில் பரபரப்பு!

டிரெண்ட்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் தயாரிக்க, சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா, அபிராமி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘ஜாலியோ ஜிம்கானா’.

இயக்குநர் சக்தி சிதம்பரம்

அஷ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ள இப்படம் நவ 22ம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் பாடல்களை ஜெகன் கவிராஜ் எழுதியதாக போஸ்டர்களில் பெயர் வெளியானது. விகடன் இதழுக்கு படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் பேட்டி அளித்தபோதும் இதையே தெரிவித்தார்.

ஆனால் லிரிக் வீடியோ வெளியான போது, பாடல்களை சக்தி சிதம்பரமே எழுதியதாக பதிவாகி இருந்தது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tamilankural.com இதழின் சார்பில் சக்தி சிதம்பரத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “நான் தான் எழுதினேன்” என்றதோடு முடித்துக்கொண்டார். “விகடன் இதழில் நீங்கள் பேட்டி அளித்தபோது, ஜெகன் கவிராஜ் பாடல்களை எழுதியதாக தெரிவித்தீர்களே” என்று கேட்டதற்கு பதில் இல்லை.

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜிடம் கேட்டபோது, “உண்மையை மறைக்கலாம்.. அழிக்க முடியாது” என்று மட்டும் கூறினார்.

இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது.

வெளியேறினார் சக்தி சிதம்பரம்…

இந்தப் பாடல் விவகாரம் பற்றி செய்தியாளர்கள், குரல் எழுப்பினர். படக்குழு சார்பில், “சக்தி சிதம்பரம் பேசும்போது பதில் அளிப்பார்” என்று கூறப்பட்டது.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக பேச.. சக்தி சிதம்பரமும் வந்து பேசினார். ஆனால் பாடல் விவகாரம் குறித்து பதில் அளிக்க வில்லை.

ஆகவே செய்தியாளர்கள் இது குறித்து பதிலளிக்கும்படி தொடர்ந்து கூறவே, மவுனமாகவே இருந்தார் சக்தி சிதம்பரம். பிறகு மேடையைவிட்டு இறங்கி, கிளம்பிவிட்டார்.

இந்தப் பாடல் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்று செய்தியாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, பாடல்களை எழுதிய ஜெகன் கவிராஜ் மேடை ஏறினார்.

மேடையேறிய பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்

“நான் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தில் ஆஃபிஸ் பாயாக சேர்ந்தேன். இப்போது அந்த கம்பெனியில் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினேன். அந்த அளவுக்கு என்னை உயர்த்தியது எங்கள் நிறுவன முதலாளிதான். என் குடும்பமா, முதலாளியா என்று கேட்டால், முதலாளியைத்தான் சொல்வேன். அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் முக்கியமானவர் அவர். அவரது மனது புண்பட்டுவிடக்கூடாது” என்றார்.

விகடனில் சக்தி சிதம்பரம் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், “முதலில் இந்தப் பாடல் எப்படி உருவானது என்று சொல்லிவிடுகிறேன். வேண்டுமென்றே போடவில்லை: இந்தப் பாடல் ஜானரில் ஏற்கனவே சில்க் ஸ்மிதாவுக்கு ஒரு பாடல் வந்திருக்கிறது. அதேபோல் மலையாளத்திலும் வந்திருக்கிறது. அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தப் பாடலை உருவாக்கினோம்.

நான் இந்தப் பாடலை எழுதினேன். நேரடியாக இசையமைப்பாளருக்கு வரிகளை நான் அனுப்பமாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் வரிகள் இசையமைப்பாளரிடம் போகும். அப்படி நான் அனுப்பியது என்னிடம் இருக்கிறது.

இந்தப் படத்தை 8 கோடி ரூபாய் பட்ஜெட் என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் 15 கோடி ரூபாய்வரைக்கும் செலவு ஆனது. இதுதொடர்பாக எங்கள் தயாரிப்பாளரிடம் நான் சில விஷயங்களை சொன்னேன். அது இயக்குநர் சக்தி சிதம்பரத்தை கோபப்படுத்திவிட்ட்து. அப்போதே அவர் தயாரிப்பாளரிடம், ‘பாடலில் ஜெகனின் பெயரை போடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். எங்கள் தயாரிப்பாளரோ வளர்ந்து வரும் பையன் ஜெகன்; அவர் பெயரை போடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. இத்தனை காலமும் நான் ஏன் அமைதியக இருந்தேன் என்றால் இந்தப் படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதால்தான்” என்றார்.

பிறகு பேசிய தயாரிப்பாளர், “இது குறித்து விரைந்து நல்ல முடிவு எடுத்துவிட்டு உங்களை சந்திப்பேன்” என்று கூறினார்.

Related Posts