“ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது!”: ‘தங்கலான்’ நடிகை பார்வதி

“ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது!”: ‘தங்கலான்’ நடிகை பார்வதி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் பா.ரஞ்சித்  தயாரிப்பில்,  விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்  நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி பல ஊர்களில் நடந்துத. இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

நடிகர் விக்ரம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவன சி.இ.ஓ.வுமான தனஞ்செயன் ஆகியோர் பேசியது தனிச் செய்திகளாக வெளியிடப்பட்டு உள்ளன.

இதர கலைஞர்கள் பேசியது இங்கே….

நடிகை மாளவிகா மோகனன், ” தங்கலான் நான் நடிக்கும் நான்காவது தமிழ் படம். இது எனக்கு மிகவும் முக்கியமான படம். அதுவும் இந்த தருணம் உணர்வுபூர்வமானது.

கடந்த பத்து நாட்களாக இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம்.

ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ரம் சிறந்த சக நடிகர். பொதுவாக அனைத்து நட்சத்திர நடிகர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருப்பர். ஆனால் விக்ரம் இந்த விசயத்தில் தாராளமாக சக கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். உடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மீது அக்கறை செலுத்துபவர். இது மிகவும் அரிதான தகுதி. இதைப் பெற்றிருக்கும் சீயான் விக்ரமை பாராட்டுகிறேன். இதற்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.நடிகை பார்வதி, ” பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை தங்கலான் படத்தில் நிறைவேறி இருக்கிறது. தங்கலான்- இயக்குநர் பா.ரஞ்சித்தின் கற்பனை படைப்பு.‌ அவர் உருவாக்கிய உலகம் இது.

நடிப்புக்கு அலங்காரம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு துணையாக இருந்த ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர் -ஆடை வடிவமைப்பாளர்- ஒப்பனையாளர் – அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது. இதற்கு தேவையான உளவியல் வலிமையை வழங்கிய படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி.

சீயான் விக்ரமின் அன்பு- நட்பு -உழைப்பு இதை நேரில் கண்டு வியந்து விட்டேன். ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கு எல்லையில்லை. ஆனால் அதனை ஏற்று நடித்து நடிப்பிற்கு எல்லையே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறீர்கள். உங்களுடைய நடிப்பு எனக்கு முன்மாதிரியாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் உங்களுடைய நடிப்பு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் , ” சீயான் விக்ரம் என் மீது நம்பிக்கை வைத்தார். அவருடன் பணிபுரிந்ததை பெருமிதமாக கருதுகிறேன். இவரைப் போன்ற ஒரு திறமையான நட்சத்திர நடிகருடன் பணியாற்றும்போது நாம் எழுதுவதை துல்லியமாக திரையில் செதுக்கி விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

நேற்று இப்படத்தின் இறுதி பிரதியை பார்க்கும் போது நடித்திருக்கும் அனைத்து கலைஞர்களும் அவர்களது கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருப்பதை பார்த்து வியந்தேன். இதுபோன்ற கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்ததையே நான் பெருமையாக கருதுகிறேன் இவர்களால் தான் இந்த படைப்பு தரமான படைப்பாக உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்கள் நடிக்கும் போது எனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவர்களாகவே நடிப்பை வழங்கினார்கள்.

இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ்  நான் எழுதிய கதையின் தன்மையை.. அது சொல்லவரும் விசயத்தை புரிந்து கொண்டு.. அதனை இசை வடிவில் மாற்றுவதற்கான அனைத்தும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.

இந்த படைப்பிற்கு ஜீ..வி பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் பரிந்துரை செய்தார். ஜீவியுடனான முதல் சந்திப்பிலேயே அவருக்கும் எனக்குமான புரிதல் எளிதாக இருந்தது.‌ அவர் இந்த திரைக்கதைக்கு என்ன மாதிரியான ஒலி வேண்டும் என்பதை ஆர்வத்துடன் விவரித்தார். இப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்று பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இதுவே படத்தின் வெற்றியை தீர்மானிப்பதற்குகாரணியாக அமைந்து விட்டது. அத்துடன் படத்தின் பின்னணி இசைக்காக அவருடைய கடின உழைப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கடினமாக உழைத்து வருகிறார். அதிலும் படத்தின் வெளியீட்டிற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ‘அட்டகத்தி’ காலகட்டத்தை விட அவருடன் பழகிய போது அவரை சரியாக புரிந்து கொண்டது இந்த காலகட்டத்தில் தான்.

அவர் என் மீது வைத்த நம்பிக்கை. படத்தைப் பற்றி விவாதம் எழும் போது கலந்து ஆலோசித்த பாணி… தற்போது கூட படத்தின் விளம்பரத்திற்காக ஒரு சிறிய விசயத்தை செய்ய திட்டமிட்டு இருந்தேன். அதற்கு கூட சம்மதம் தெரிவித்தார். இந்த படத்திற்காக அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் நிபந்தனை இன்றி வழங்கி வருகிறார்.‌ இதற்காகவே அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக தனஞ்ஜெயனின் ஒருங்கிணைப்பு பணி சிறப்பாக இருந்தது. தங்கலான் படத்தை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய செய்திருக்கிறார்” என்றார்.

 

Related Posts