“தங்கலான் ஜனரஞ்சகமான திரைப்படம்!”: நடிகர் விக்ரம்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில், விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி பல ஊர்களில் நடந்துத. இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
விக்ரம் பேசுகையில், ” தங்கலான் படத்தின் முதல் புகைப்படம் வெளியானதிலிருந்து ஊடகங்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. படத்தை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தையும் அளித்தது. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போது ஆயிரம் ஆண்டிற்கு முன்னதான தமிழகத்தின் வரலாறு தொடர்பான கதை. அரசர்கள் -ஆடம்பரம்- வீரம் -வெற்றி- தோல்வி- போர்- ஆகியவற்றை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால் தற்போது அதே இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் வறுமையில் இருந்தோம். கஷ்டப்பட்டோம். இது வேறு உலகம். இதை மையமாக வைத்து பா ரஞ்சித் உருவாக்கிய கதைதான் தங்கலான்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்வையிட்டதிலிருந்து இந்த திரைப்படத்தை ஜனரஞ்சகமாக உருவாக்கி இருக்கிறோம் என அனைவருக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு மக்களை மனதில் வைத்து இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கலை படைப்புகள் போல் அல்லாமல் இந்த படத்திற்கு முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பை பா. ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார். இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கடந்த பத்து நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிற்கும் பயணிப்பதற்கான பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனஞ்ஜெயனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள்- நடிகர்கள் -நடிகைகள்- என அனைவரும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமான இசையமைத்த இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு பிரத்யேகமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் பா. ரஞ்சித் கடினமாக உழைத்து இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் அதை போன்றது.. இதைப் போன்றது.. என்று சொல்வார்கள். ஆனால் இது வேற மாதிரியான படம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். படத்தை பார்த்துவிட்டு உங்களின் மேலான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.