ஆட்டி: விமர்சனம்

ஆட்டி: விமர்சனம்

பெண்களின் பாதுகாப்பு, கல்வி என பெண்ணுரிமை பேசும் சமூகப் படம். அதே நேரம், வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழ் மரபில் பெண்கள் போர்க்கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்றும் சொல்கிறது.

அழகான மலைக் கிராமம். இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் பள்ளிக்கூட வசதி இல்லை. அங்கே தானாகவே முயன்று படித்த, அழகி என்ற இளம் பெண், சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறாள். பள்ளி இருந்தாலும், ஆசிரியர்கள் நிரந்தரமாய் வருவதில்லை. இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் வருகிறார். இன்னொரு பக்கம், அந்தப் பகுதி காவல் நிலையத்துக்குப் புதிய இன்ஸ்பெக்டரும் வருகிறார். அதன் பிறகு அதிரடியான மர்ம சம்பவங்கள் நடக்கின்றன.

அந்த சம்பவங்கள் என்ன… மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததா என்பதே கதை.

கதை நாயகி, அழகியாக, அபி நக்ஷத்ரா. கதாபாத்திரத்தின் பெயருக்கேற்ப அழகிதான். அதே போல அற்புதமான நடிப்பு. தன் கிராமத்துக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வம்.. புதிதாக வரும் ஆசிரியரை எதிர்கொள்ளும் விதம் என அசத்தியிருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன், காவல் அதிகாரியாக வருகிறார். இனி வரும் படங்களில் தயாரிப்பாளராக மட்டும் இருந்தால், இன்னும் உயர்வார். வாழ்த்துகள்.

கான்ஸ்டபிளாக வரும் காதல் சுகுமார், தூங்கித் தூங்கி கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார். போஸ்ட்மேனாக சவுந்தர் வந்து போகிறார்.

படத்தின் மிகப் பெரிய பலம், கேமரா. ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம், மலைக் கிராமத்தின் அழகை அள்ளித் தந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.

தீசன் இசை, படத்துக்குப் பலம்.

சில காட்சிகளில் காணப்படும் நாடகத்தனம், மெதுவான திரைக்கதை ஆகியவை கொஞ்சம் இடிக்கிறது. ஆனாலும், மலைக் கிராம மக்களின் வாழ்க்கை, அவர்களது பாதுகாப்பு, கல்வி எனப் பேசும் படம் என்பதால், இந்த மைனஸ்களை மறக்கலாம்.

இந்தப் படத்தையும் சமூக அக்கறையுடன் கொடுத்து இருக்கும் இயக்குநர் தி.கிட்டுவுக்கு வாழ்த்துகள்.

வணிகப் பூச்சுகள் இல்லாத, தீவிரமான சமூகக் கருத்துகளையும் பெண் உரிமைகளையும் பேசும் எதார்த்தமான படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.