“இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சர்வதேச விருது பெறுவார்!”

“இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சர்வதேச விருது பெறுவார்!”

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் பா.ரஞ்சித்  தயாரிப்பில்,  விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர்  நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து உள்ளார். இவரது இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தவிர டீசர், டிரெய்லரில் பின்னணி இசையும் அசத்தலாக உள்ளன.இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் பல ஊர்களில் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். நேற்று  சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

(கலைஞர்களின் முழுப் பேச்சு, தனிச் செய்திகளாக வெளியாகி உள்ளன.)நிகழ்வில், இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றுவது போல் இல்லை.‌ நான் எழுதிய கதையின் தன்மையை.. அது சொல்லவரும் விசயத்தை புரிந்து கொண்டு.. அதனை இசை வடிவில் மாற்றுவதற்கான அனைத்தும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.

இந்த படைப்பிற்கு ஜீ..வி பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் பரிந்துரை செய்தார். ஜீவியுடனான முதல் சந்திப்பிலேயே அவருக்கும் எனக்குமான புரிதல் எளிதாக இருந்தது.‌ அவர் இந்த திரைக்கதைக்கு என்ன மாதிரியான ஒலி வேண்டும் என்பதை  ஆர்வத்துடன் விவரித்தார். இப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்று பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இதுவே படத்தின் வெற்றியை தீர்மானிப்பதற்கு காரணியாக அமைந்து விட்டது.  அத்துடன் படத்தின் பின்னணி இசைக்காக அவருடைய கடின உழைப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், ”இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமான இசையமைத்த இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு பிரத்யேகமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்”‘ என்றார்.

தொடர்ந்து அற்புதமான அசையை அளித்துவரும் ஜி.வி.பிரகாஷ், உயரிய விருதுகள் பெறுவார் என்பது அனைவரது நம்பிக்கை. அதை, மிகச் சிறந்த நடிகரான விக்ரம் வெளிப்படுத்தி உள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

Related Posts