சோனி மியூசிக் – ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்”: இன்னொரு ‘ஆட்டோக்காரன்..’! வைத்த பாடல்!
மலேசியாவின் முன்னணி தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளரான கிட் சாந்தே (Kidd Santhe) அவர்களின் புதிய ஆல்பம் “நா வேற லெவல்”. சோனி மியூசிக் சவுத் மற்றும் சோனி மியூசிக் மலேசியா இணைந்து வெளியிட்டுள்ள இப்பாடலின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா குறித்த செய்திக் தொகுப்பு:
பின்னணியும் உலகளாவிய வளர்ச்சியும்: தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளைக் கலந்து புதுமையான ராப் ஸ்டைலில் அசத்துபவர் கிட் சாந்தே. சிறு வயதிலேயே பீட்பாக்ஸிங் மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட இவர், சவுண்ட்க்ளவுட் வழியாகத் தன் பயணத்தைத் தொடங்கி இன்று உலகளாவிய “தேசி ஹிப்-ஹாப்” இயக்கத்தின் முக்கிய இளம் கலைஞராக வளர்ந்துள்ளார். இவரது முந்தைய படைப்புகளான “API”, “SAMPAH”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. அந்த வரிசையில், இந்திய கலாச்சார பின்னணியில் உருவான “நா வேற லெவல்” பாடல் தற்போது சென்னையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநரின் நெகிழ்ச்சி: விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன் ரவி, இது தமக்குக் கிடைத்த முதல் சர்வதேச ஆல்பம் வாய்ப்பு என்று நெகிழ்ந்து கூறினார். சோனி மியூசிக் நிறுவனத்திற்கும், தமது கற்பனையைத் திரையில் உயிர்ப்பிக்கக் காரணமான கிட் சாந்தே, திலீபன், குணா மற்றும் ரே ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஒவ்வொரு டிராக்கிற்கும் பின்னால் இருக்கும் ஒட்டுமொத்தக் குழுவின் உழைப்பையும் அவர் பாராட்டினார்.
மலேசியா டூ சென்னை – சோனி மியூசிக் பெருமிதம்: சோனி மியூசிக் சார்பாகப் பேசிய ரேவதி மாரியப்பன், இப்பாடலை மலேசியாவில் படமாக்கத் திட்டமிட்டிருந்த போதிலும், சென்னையில் எடுக்கலாம் என்று கிட் சாந்தே தான் விரும்பியதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பாமல், நூற்றுக்கணக்கான உள்ளூர் கலைஞர்களின் உண்மையான உழைப்போடு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த மாறாத அன்பும் வரவேற்பும் மலேசியாவில் உள்ள பல இளம் தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்குப் புதிய பாதையைத் திறந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆட்டோ ஓட்டுநர்களே உண்மையான ஹீரோக்கள் – கிட் சாந்தே உருக்கம்: ராப்பர் கிட் சாந்தே மேடையில் பேசும்போது, இப்பாடலின் பின்னணியில் உள்ள சுவாரசியமான கதையைப் பகிர்ந்துகொண்டார். ஆட்டோ ஓட்டுநர்கள், மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலில் வந்தபோது கார் டயர் பஞ்சராகி நிற்க, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தமக்கு உதவ ஓடிவந்த அந்த நெகிழ்ச்சியான தருணமே இப்பாடலின் கருவாக மாறியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு, பைக் டாக்ஸி போட்டி போன்ற அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களைப் போற்றும் வகையிலேயே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
“நா வேற லெவல்” என்பது தம்மைக் குறிப்பதல்ல, தினமும் மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் நம் அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்களான ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் குறிக்கிறது என்று உணர்வுப்பூர்வமாகக் கூறினார். மேலும், தமக்கு நடனம் கற்றுக்கொடுத்த மாஸ்டர் ஆகாஷ், இன்ஸ்டாகிராம் நட்பு மூலம் இணைந்து பாடலை உருவாக்கிய ராவண ராம் மற்றும் இயக்குநர் ரவி ஆகியோருக்குத் தன் நன்றிகளைச் சமர்ப்பித்தார்.
மலேசிய இளைஞனின் இந்தத் துள்ளலான இசைப் படைப்பிற்குத் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் பேராதரவைத் தருமாறு படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். சோனி மியூசிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் இப்பாடலைக் கண்டுகளிக்கலாம்.

