பரத் – ராஜேஷ் மாதவன் கூட்டணியில் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்!
தமிழ் சினிமாவின் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத்தும், மலையாளத் திரையுலகின் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த ராஜேஷ் மாதவனும் முதல்முறையாகக் கைகோர்க்கும் புதிய திரைப்படம் கோலாகலமான பூஜையுடன் மிகச்சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படைப்பை அறிமுக இயக்குநர் M. குரு எழுதி இயக்குகிறார். சிரிப்பு, காதல், குடும்ப உறவுகள், சென்டிமென்ட் எனத் திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் அத்தனை அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் விருந்தாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் எனப்படும் வைஷாலி ராஜ், முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், பிரபல இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்துப் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வெள்ளித்திரையில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பரத் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, மலையாளத்தில் கலக்கிய ராஜேஷ் மாதவனின் கூட்டணியும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகை சிவேஷ்தா ராஜ், ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மீனாட்சி தினேஷ் மற்றும் ரக்ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பும் முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துத் திரையை அலங்கரிக்கின்றனர்.
பல்துறை திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக அணிதிரண்டுள்ளனர். S.R. சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அருள் E. சித்தார்த் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தையும், தினேஷ் காசி சண்டைப் பயிற்சியையும் கவனித்துக்கொள்ள, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை மற்றும் விளம்பர வடிவமைப்புப் பணிகளைச் சிறந்த குழுவினர் கவனித்து வருகின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
சென்னை மற்றும் கேரளாவின் எழில்மிகு ஆலப்புழா உள்ளிட்ட பல அழகிய பகுதிகளில் நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும், மனதை நெகிழ வைக்கும் பாசமும் நிறைந்த கலகலப்பான திரைக்கதையோடு உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் சுவாரஸ்யமான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ளன!

