‘sir’: “திராவிட படத்தை சீமான் பாராட்டியது ஏன்?”: போஸ் வெங்கட்
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்திருக்கும் இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகி உள்ளது.
இத்திரைப்படம் நாளை அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டினர்.
அவர், “என் அன்புக்குரிய தம்பி போஸ் வெங்கட் சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரம் கன்னிமாடம் என்கிற சிந்த படத்தை இயக்கினார். தற்போது அவரது இரண்டாவது படம் ’சார்’.
கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், எல்லாம் 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் தம்பி இந்த திரைப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மருத்துவம் போய்ச் சேராத மக்களுக்கு எப்படி சேகுவாரா மருத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதேபோல் கல்வி அறியாத மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க நினைக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவை தான் இந்த திரைப்படம். இறுதியாகத் திரைப்படத்தை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் அவருடைய குரலே நமக்கு சிலிர்ப்பூட்டுகிறது.
நம் தாய் பத்து மாதம், நம்மைக் கருவறையில் சுமந்தாள் ஆனால் ஆசிரியர் பெருமக்கள் 20 ஆண்டுகள் கல்விக் கருவறையில் நம்மை சுமக்கிறார்கள், என்பதைப் போஸ் வெங்கட் இப்படத்தில் மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனாக, இந்த திரைப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்” என்று சீமான் பாராட்டினார்.
படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களுக்காக படம் திரையிடப்பட்டது.
இந்த படத்தில், ஞானம் என்கிற கதாபாத்திரம், கல்வியை தடுக்கும் சாமி என்கிற கதாபாத்திரத்தை அழிக்கிறது. இது ‘பக்தி வந்தால் புத்தி போச்சு’ என்கிற தந்தை பெரியாரின் கருத்தின் ஒரு வடிவமாகவே இருக்கிறது.
அதே போல, “நான் அண்ணாதுரை பேரன்டா” என்கிற வார்த்தையை சில முறை அழுத்தமாகச் சொல்கிறார் நாயகன்.
இது மறைந்த முதலமைச்சரும் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவருமான அண்ணா அவர்களை நினைவுபடுத்தி புகழஞ்சலி செய்வதாக உள்ளது.
இந்நிலையில் இயக்குநர் போஸ் வெங்கட்டிடம் இதைச் சுட்டிக்காட்டி, “திராவிட இயக்கத்தை – கொள்கையை கடுமையாக எதிர்க்கும் சீமான், எப்பிடி இந்தப் படத்தைப் பாராட்டினார்” என்று tamilankural.com இதழின் சார்பாக கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த போஸ் வெங்கட், “படத்தில், கல்வியைச் சொல்லி இருக்கிறோம். அதாவது அனைவருக்கும் கல்வி தேவை என்பதை ஆழமாகச் சொல்லி இருக்கிறோம்.
இதற்கு நிச்சயம் அனைவரும் ஆதரவு தெரிவிப்பார்கள். ஏனென்றால் சொன்ன விசயம் அப்படிப்பட்டது.. கடினமானது.
ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியைச் சொல்லும் இத்திரைப்படத்தை, தங்களது கொள்கை, கருத்துக்களை ஒரு புறம் வைத்துவிட்டு அனைவரும் ஆதரிப்பார்கள்.
அப்படித்தான் சீமான் அவர்களும் ஆதிரித்தார். இது ஆசிரியர்களை உயர்த்திப் பிடிக்கும் படம்… ஆசிரியர்களைப் போற்றிக்கொண்டே இருக்க வேண்டும்! இந்தப் படம் அனைவருக்குமானது” என்றார் போஸ் வெங்கட்.