‘சார்’ படத்தில் நீக்கப்பட்ட ‘சமஸ்கிருத’ காட்சி!: போஸ் வெங்கட் குமுறல்!
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சார்’. எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரித்திருக்கும் இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படம்- அக் 18 – நாளை, திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இயக்குநர் போஸ் வெங்கட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், tamilankural.com இதழின் சார்பாக, “படத்தின் டீசரில் கவனித்துப் பார்த்தால் ஒரு காட்சியில், பள்ளி கரும்பலகையில், ‘வழக்கொழிந்த மொழி சமஸ்கிருதம்’ என்று எழுதப்பட்டு இருக்கும். அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளதே! மொத்தம் எத்தனை காட்சிகளை சென்சார் போர்டு நீக்கியது..” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த போஸ் வெங்கட்,”குறிப்பிட்ட அந்தக் காட்சியுடன் மொத்தம் 26 காட்சிகளுக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்தது. முக்கியமான பல காட்சிகளை நீக்கச் சொன்னது… சில காட்சிகளை மியூட் செய்யச் சொன்னது. இது எனக்கு வருத்தம்தான்.
ஆனால் சினிமா ஒரு வியாபாரம். நான் வீம்பாக நின்றால், தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார். அவர் வட்டிக்கு வாங்கி படம் எடுக்கிறார். ஆகவே சென்சார் கொடுத்த கட் கட் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். ” என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவுக்கு மட்டும்தான் கட் கொடுக்க முடியும். குறிப்பிட்ட பல காட்சிகள் சார் பட டீசர், டிரெய்லரில் உள்ளன” என்றும் தெரிவித்தார்.