செம்பியன் மாதேவி: விமர்சனம்
காதலையும், சாதீய வன்மத்தையும் அதைத் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளையும் கிராமத்து மனிதர்களை உலவவிட்டு ரத்தமும் சதையுமாய் சொல்லும் படம், செம்பியன் மாதேவி.
வட தமிழ்நாட்டில் இருக்கும் செம்பியன் என்ற சிறு கிராமம். இங்கு 2004 ஆம் வருடம் பட்டியல் இன இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். அவரை படுகொலை செய்தவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை மாதேவியை, நாயகன் வீரா காதலிக்கிறார். சாதி பாகுபாட்டுக்கு பயந்து அந்த காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி. ஆனால் நாயகனின் தூய்மையான காதலை உணர்ந்து இவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஈருடல் ஓருடல் ஆக.. நாயகி கர்ப்பமாகிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனை வற்புறுத்துகிறார். நாயகனோ, குழப்பமடைந்து, தனது சாதி நண்பர்களிடம் ஆலோசனை கேட்கிறார். நண்பர்களோ, இது தங்கள் சாதிக்கு இழுக்கு என நினைத்து, நாயகியை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
படத்தை இயக்கி, தயாரித்து, இசையமைத்திருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் லோக பத்மநாபன்.
இவரது வீரா கதாபாத்திரம், எதார்த்தமான கிராமத்து இளைஞரை கண்முன் நிறுத்துகிறது. காதல் காட்சிகளில் மட்டுமின்றி, மோதல் ( சண்டைக்) காட்சிகளிலும் முத்திரை பதித்து உள்ளார். சாதி ரீதியான உணர்வை கடுமையா எதிர்க்கும் காட்சிகளிலும் கவனத்தை கவர்கிறார்.
நாயகி மாதேவியாக வரும் அம்சரேகவுக்கு வழக்கமான கதாநாயகிகிளுக்கான ‘கவர்ச்சி'(!) இல்லைதான். ஆனால், இயல்பான கிராமத்து பெண்ணாக கவனத்தை ஈர்க்கிறார். குடும்ப சூழல்நிலையை கருதி காதலை மறுப்பது.. நாயகனின் மனதை அறிந்து காதலை ஏற்பது என சிறப்பாக நடித்து உள்ளார்.
இன்னொரு நாயகி கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினாவும் இயல்பான நடிக்கை அளித்து உள்ளார்.
ஜெய்பீம் மொசக்குட்டி, காமெடி என்கிற பெயரில் நடத்தும் லீலைகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
சாதி வெறியுடன், சங்கத் தலைவராக வரும் வில்லன் மணிமாறன் நன்றாகவே நடித்து உள்ளார்.
ஒளிப்பதிவாளர் கே.ராஜசேகர், கிராமத்து காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து உள்ளார்.
நாயகன் லோகு பத்மனாபனின் இசையில், வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். ஏ.டி.ராம் அமைத்துள்ள பின்னணி படத்துக்கு பலம்.
படத்தொகுப்பாளர் ராஜேந்திர சோழனின் பணியும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி ஆகியோரின் நடன வடிவமைப்பு, மெட்ரோ மகேஷ் அமைத்துள்ள சண்டைக் காட்சிகள் இரண்டுமே ரசிக்க வைக்கின்றன.
முதல் படத்திலேயே நடிப்பு, இசை, இயக்கம், தயாரிப்பு என பல தளங்களில் தடம் பதித்திருக்கும் லோக பத்மநாபனை பாராட்டலாம். தவிர, இந்த நவீன காலத்திலும் தொடரும் சாதிய வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதையும் பாராட்டலாம்.
எவரையும் குற்றம்சாட்டாமல், நடந்த சம்பவங்களை மக்கள் முன் வைத்து, நியாயம் கேட்டிருக்கும் முறையில் வெற்றி பெற்று இருக்கிறது படம்.