சீமான் விவகாரம்: வாய்தாக்களை ஆதரிக்கலாமா நீதிபதி அவர்களே!

சீமான் விவகாரம்: வாய்தாக்களை ஆதரிக்கலாமா நீதிபதி அவர்களே!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அழர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசி, வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

மனு இன்று (06.02.2025) நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  சீமான் தரப்பு வழக்கறிஞர், “ஒவ்வொரு நாளும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.  நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. இது சிரமமாக உள்ளது” என்றார்.

அவரிடம் நீதிபதி வேல்முருகன்,  “ ஒவ்வொரு நாளும் உங்கள் மனுதாரர் சீமான் அவதூறாகவும் திமிராகவும் வரம்பு மீறி பேசுகிறார் அப்பொழுது வழக்குப்பதிவு செய்ய தானே வேண்டும். நீதிமன்றம் அதில் தலையிட முடியாது. வழக்கு வேண்டாம் என்றால் வாயை கட்டுப்படுத்த சொல்லுங்கள். ஜனநாயக நாட்டில் குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் Article 19 இன் படி எந்த அவதூறை வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என்று சீமான் கணக்கு போட வேண்டாம். தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார். சமுதாயத்தில் பதட்டம் ஏற்படுத்துகிறார்.

இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை. கையில் எடுக்க வைத்து விடாதீர்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது.

குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும். தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார். நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல் எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார்” என்றார் நீதிபதி வேல்முருகன்.

இது குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்து வருகிறது

அவரது பதிவு:

“நீதிபதி வேல்முருகன், “சீமான் மீதான குற்றச்சாட்டில்முகாந்திரம் உள்ளது. வழக்கை தள்ளுபடி செய்ய இயலாது. அவர் நிதானத்துடன் பேச வேண்டும்” என்றது சரியே.ர். இது

அதே நேரம், “தொடர்ந்து 4 முறை நீதிமன்ற படி ஏறினால் தான் சீமானுக்கு நிதானம் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தீர்வல்ல. “உரியகாலத்தில் உரிய தீர்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டு்ம்” என்பதே சரியாக இருக்கும்.
அதாவது, “தொடர்ந்து நீதிமன்ற படிகள் ஏறுவது வலி மிகுந்தது” என்கிற அர்த்த்தில் சொல்லி இருக்கிறார், நீதிபதி வேல் முருகன்.
ஆனால், தன் மீதான பாலியல் வழக்கில் காவல் நிலைய விசாரணைக்கே மனைவி மற்றும் தம்பி, தங்கை மார்களை கூட்டமாக அழைத்து வந்தவர்தான் அவர். ஆக, நீதிமன்றம் வருவது அவருக்கு ஓர் அரசியல் பணி (!) ஆகிவிடும். அவ்வளவே!
அதே நேரம், “நான்கு முறை நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கும்” பாதிக்கப்பட்ட எளியோர்கள்தான் வதைக்கப்படுகிறார்கள்.
ஆம்… வாய்தாக்களால் வதைபடுவது, ஆள் பலமும், பொருளாதார பலமும் இல்லாத எளியவர்களே.
வாய்தாக்களால் நிலுவையில் கிடக்கும் வழக்குகள்தான் எத்தனை எத்தனை!
கடந்த ( 2024) வருட பிப்ரவரி நிலவரத்தின்படி, இந்தியாவில் கீழமை நீதிமன்றங்களில், 4.47 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில், 62 லட்சம்; உச்ச நீதிமன்றத்தில், 80,000 வழக்குகள்!
‘இந்தியாவில் உள்ள வழக்குகளில் 60% க்கும் அதிகமான வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன; உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை’ என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளி விபரம்.
இதனால் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் எத்தனை பேர்… வாய்தாக்களால் வதைபடும் அப்பாவிகள் எத்தனை பேர்!
ஒரு முறை, “நீதித்துறையில் வாய்தா கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்” என்றார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
வழக்குகள் நிலுவையில் கிடக்க காரணம், நீதிபதி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது மட்டுமல்ல… நீதிமன்றங்களுக்கு அளிக்கப்படும் அதீத விடுமுறைகளும்தான்.
உயர் நீதிமன்றங்கள் வருடத்துக்கு சராசரியாக, 210 நாட்கள்தான் இயங்குகின்றன. சனி, ஞாயிறு, பொது விடுமுறைகள், பண்டிகை விடுமுறைகள் தவிர்த்து, 30 நாட்கள் கோடை விடுமுறை!
“எல்.கே.ஜி., படிக்கும் சிறுமி பள்ளிக்கு செல்லும் நாட்களை விட குறைந்த நாட்களே, இந்திய கோர்ட்டுகள்செயல்படுகின்றன” என்று ஒரு முறை ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.
இது குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு சில பரிந்துரைகளை அளித்தது.
நீதிமன்றங்களுக்கான விடுமுறை தொடர்பாக, சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழுவும் பரிந்துரை அளித்தது.
அதாவது, நீதிமன்றங்கள் ஆண்டு முழுதும் இயங்குவது தொடர்பாக பரிந்துரை அளிக்கப்பட்டது; தலைமை நீதிபதிகள் மாநாட்டில்கூட விவாதிக்கப்பட்டது.
குறைந்தபட்சம், நீதிமன்றங்களுக்கு அளிக்கப்படும் கோடை விடுமுறையாவது நீக்கப்பட வேண்டும்.
இந்த நிலை மாறாதவரை, – வாய்தாக்கள் குறையாதவரை – பாதிக்கப்படும் எளியோர்கள்தான் நீதிமன்ற படிக்கட்டு ஏற பயப்படுவார்கள்.
சீமான்கள் கவலைப்படவே மாட்டார்கள்!” – இவ்வாறு பத்திரிகையாளர்  டி.வி.சோமு, பதிவிட்டு உள்ளார்.

Related Posts