ஸ்கூல்: திரைப்பட விமர்சனம்
தான் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பள்ளியை இரண்டாம் இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு கொண்டுவர துடிக்கிறார் பகவதி பெருமாள். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களை ஊக்கப்படுத்த ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால், இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள். அதாவது ஈகோ தலைக்கேறுவதுடன் சாதி, மத பிரிவினை எண்ணங்களுக்கு ஆட்பட்டு மோதிக்கொள்கிறார்கள்.
இந்த நிலையில், குறிப்பிட்ட புத்தகங்கள் மர்மமான முறையில் எரிகின்றன. அதோடு பள்ளி மாணவர் ஆசிரியர் என சிலர் பலியாகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி ஊழியர்கள் பயப்படுகிறார்கள். காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை நடத்துகிறார்.
இதற்கிடையே, பள்ளியில் இருக்கும் அமானுஷ்யமான சம்பவங்கள் தொடர்கின்றன. காரணத்தைக் கண்டுபிடிக்க சாமியார் ஆர்.கே.வித்யாதரன் வருகிறார். அப்போது அதிர்ச்சிகரமான சில விசயங்கள் தெரிய வருகின்றன.
மர்மமான மரணங்கள் நிகழ காரணங்கள் என்ன, அமானுஸ்ய சம்பவங்கள் நின்றனவா என்பதுதான் மீதிக்கதை.
ஆசிரியர் கனகவேல் என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார் யோகி பாபு. வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரத்தில் வந்தாலும் தனது ஸ்லாங், உடல் மொழியை மாற்ற மாட்டார் போல. “இஸ்கூல்” என்கிறார். இப்படி அறியாத பாமர கதாபாத்திரம் சொன்னால் ஏற்கலாம்.. ஆசிரியர் கதாபாத்திரத்தில் வந்து இப்படி பேசலாமா. யோகிபாபு சிந்திக்க வேண்டும்.
தலைமை ஆசிரியராக வருகிறார் பூமிகா சாவ்லா. எப்போதும்போல அமைதியாக, அழகாக வந்துபோகிறார். ஒரு நல்லாசிரியரை நேரில் பார்த்த நிறைவு.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, உலகநாத சுவாமியாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன் என மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து உள்ளது.
இளையராஜாவின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன.
பள்ளி வளாகத்திலேயே முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தாலும், வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்து ரசிக்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ்.
ராகவ் அர்ஸின் படத்தொகுப்பு கச்சிதம்.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே வித்யாதரன், பேய், நாத்திக பேய் என்றெல்லாம் ஏதேதோ சொல்லி இருந்தாலும், “மாணவர்களுக்குள் ஈகோவை வளர்க்காதீர்கள்.. மதிப்பெண்களைவிட வாழ்க்கையே முக்கியம். வெற்றி, தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பயணிக்காமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டு பயணித்தால், படிக்கவில்லை என்றாலும் சாதிக்க முடியும்” என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். அதனால் பாராட்டலாம்.
ரேட்டிங்: ரேட்டிங் 2.5/5
