ஆகக்கடவன: திரைப்பட விமர்சனம்

ஆகக்கடவன: திரைப்பட விமர்சனம்

நல்லதை நினைத்து நல்லதை பேசினால் நல்லதே நடக்கும் என்பதை, திகில் மர்மம் கலந்து சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூன்று பேரும், மெடிக்கல் ஷாப் ஒன்றில் வேலை பார்க்கிறார்கள். கடை உரிமையாளர் தனது மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்பதால், இந்த மூவரிடம் கடையை அளிக்க விரும்புகிறார். அதற்காக ரூ. ரூ.6 லட்சம் கேட்கிறார். இவர்களும் பணத்தைத் தயார் செய்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் களவு போய்விடுகிறது.

அடுத்தகட்ட முயற்சியாக, சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு செல்கிறார்கள். அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, அத்துவான காட்டுப் பகுதியில் இருக்கும் பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள்.அங்கே, கடத்தல், கொள்ளை, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.  சிறுவன் ஒருவன் பஞ்சர் போடும் வேலை செய்கிறார். பஞ்சர் போட வந்தவர்களை, அந்த கும்பல் டீஸ் செய்துகொண்டே இருக்கிறது.

ஒரு கட்டத்தில் அங்கே மர்மமான, திகில் சம்பவங்கள் நடக்க… நண்பர்கள் மூவரும் தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை.

நண்பர்கள் மூவர், அவர்களை டார்ச்சர் செய்யும் வில்லன்கள் மூவர், மற்றும் மூவர் என பத்து பேருக்குள்தான் கதாபாத்திரங்கள். அதிலும் அனைவரும் ஆண்கள். படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம்கூட கிடையாது. அதே போல டைட்டில் பாடல் மட்டும்தான். இப்படி புதுமையாக முயற்சி செய்ததற்கே பாராட்டலாம். அதை சரியாகச் செய்ததற்காக சபாஷ் போடலாம்.

நண்பர்களில் லீட் ரோல் செய்திருக்கும் ஆதிரன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். எப்போது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என நண்பர்களுக்கு விளக்குவதோடு, தானும் அப்படியே நடந்துகொள்வது என மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது நண்பர்களாக வரும் சி.ஆர்.ராகுல், ராஜசிவன் ஆகியோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

எதிர் நாயகர்களாக வரும் வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் ஆகியோரின் நடிப்பை குறித்து ஒரே வார்த்தையில் சொன்னால் – மிரட்டல்!

அதுவும் பட்டாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ், அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு ஆளை காலி செய்வது…  அதிரவைக்கிறார்.பஞ்சர் கடை பையனாக நடித்திருக்கும் தஷ்ணா, ஆதிரனின் அப்பா, காவலர் வேடத்தில் நடித்திருப்பவர், என படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் இயல்பாக நடித்து உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, பொட்டல் காட்டையும், அமைதியான அந்த பஞ்சர் கடை இடத்தையும் பயமுறுத்தும் வகையில் காட்சிப்படுத்தி மிரட்டி இருக்கிறார்.  அதுவும் அந்த காட்டுப் பாதை… திகிலின் உச்சம். சாலை காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

சாந்தன் அன்பழகனின் இசையில் டைட்டில் பாடல் ரசிக்க வைக்கிறது. அதே போல  பின்னணி இசையும் அபாரம்.

சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸின் படத் தொகுப்பு கச்சிதம்.

, நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு என்பதை உணர்த்தும் வகையிலான கதைக்கருவை வைத்துக் கொண்டு, சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை கொடுத்து இருக்கிறார், எழுதி இயக்கியிருக்கும் தர்மா.

சின்ன பட்ஜெட்டில், பிரம்மாண்டமான படம்!

ரேட்டிங் 3.6/5

Related Posts