ஆளுநரின் ‘ஜெய் ராம்’ கோசத்துக்கு எதிராக ‘ஜெய் பீம்’ முழக்கத்துடன் பள்ளியில் படப்பிடிப்பு!

ஆளுநரின் ‘ஜெய் ராம்’ கோசத்துக்கு எதிராக ‘ஜெய் பீம்’ முழக்கத்துடன் பள்ளியில் படப்பிடிப்பு!

மதுரை தியாகராஜர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் போட வைத்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளத்தில் பலரும் ஆளுநரை கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரவியின் பிரிவினை கோசத்துக்கு எதிராக, சமூக நீதியை வலியுறுத்தும் ஜெய் பீம் முழக்கத்தோடு ஒரு படத்தின் படப்பிடிப்பு, பள்ளியில் நடந்துள்ளது.

மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்க மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், “சாணி”.

இத் திரைப்படத்தின் பூஜை  இன்று – 14 ஏப்ரல் 2025 –  டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது. அதுவும்,  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, விழா துவங்கியது.

இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர்.

மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேனா மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டு,  கல்விக்கும் கலைக்கும் இடையே பாலம் அமைக்கும் முயற்சியாக இந்த நிகழ்வு அமைந்தது.

அப்போது ஜெய்பீம் முழக்கம் எழுப்பப்பட்டது.

பிறகு பேசிய இயக்குநர் சி. மோகன்ராஜ், “தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு இது.  கல்வி இல்லையெனில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னால் எழுதவோ, படிக்கவோ, சிந்திக்கவோ சாத்தியமில்லை. ஆகவே, எனது முதல் படத்தை பள்ளியில் கல்விக்காக போராடிய தலைவர்களின் முன்னிலையில் மாணவ மாணவிகளின் ஆசீர்வாதத்துடன் திரைப்பட பயணத்தை தொடங்கவேண்டும் என்று நினைத்தேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் மற்றும் இந்த கதையின் நாயகனுமாகிய அண்ணன் மருது பாண்டியன் அவர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சியை பள்ளியில் நடந்த அனுமதி தந்த பள்ளியின் முதல்வர்,மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

பள்ளிக்கூடத்தில் ஒரு திரைப்படத்தின் துவக்கவிழாவை துவங்கியிருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம் இந்த திரைப்படம் எதை பேசவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது. கலையின் ஒரு வடிவம் தான் சினிமா,  நல்ல திரைப்படங்கள் மாணவர்களுக்கு பாடமாகக்கூட அமைந்திருக்கின்றன.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் திண்டிவனம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது”  என்றார்.

 

Related Posts