4K தரத்தில் மீண்டும் ‘கேப்டன் பிரபாகரன்’: 34 வருடங்களாக தெரியாத ரகசியம்!

4K தரத்தில் மீண்டும் ‘கேப்டன் பிரபாகரன்’: 34 வருடங்களாக தெரியாத ரகசியம்!

தமிழ் சினிமாக்களின் பெஞ்ச் மார்க்குகளில் ஒன்று,  ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன்.

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க காட்டுக்குள் செல்லும் அதிகாரி பற்றிய கதை இது. ஆச்சரியம் என்னவென்றால், சந்தன வீரப்பனின் முதல் பேட்டி வெளியானது 1993ம் ஆண்டு.  நக்கீரன் இதழில், பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன்தான் முதன் முதலாக வீரப்பனை பேட்டி கண்டார். அதன் மூலம்தான்,  வீரப்பன் உருவமே வெளியில் தெரிந்தது.

ஆனால் இந்தத் திரைப்படம்  வெளியானது, அதற்கு முன்பே,  1991ம் ஆண்டு. அந்த வருடத்தில் சித்திரை 1 (ஏப்ரல் 14)ஆம் தேதி திரைக்கு வந்தது.

சந்தன வீரப்பனாக, வீரபத்திரன் என்கிற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் அறிமுகமானார். வீரபத்திரனை பிடிக்க சத்ிதயமங்கலம் காட்டுக்குச் செல்லும் அதிகாரியாக விஜயகாந்த் நடித்தார்.  விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அவருக்கு இருந்த பற்றினை வெளிப்படுத்தும்படியாக, அவரது கதாபாத்திரத்துக்கு பிரபாகரன் என்றே பெயர் வைக்கப்பட்டது.

விஜயகாந்தின் நூறாவது படமான இதில், இசைஇளைராஜா,  ஒளிப்பதிவு ராஜராஜன், வசனம் லியாகத் அலிகான் என்று பல ஜாம்பவான்கள் இணைந்தனர்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும் ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன. அதுமட்டுமல்ல காட்சிக்கு காட்சி, பின்னணி இசையிலும் மிரட்டி இருந்தார் இசைஞானி. குறிப்பாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் அறிமுகக் காட்சி, அவர் காடுகளுக்குள் பயணிக்கும் காட்சி, வீரபத்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு என குறிப்பிடத்தக்க பிரத்யேக பின்னணி இசையை படம் முழுக்க கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்..

இந்த படத்திற்கு கிடைத்த இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர் ராஜராஜன். தனது ஒளிப்பதிவில் மேற்குத் தொடர்ச்சி மலையை, அதன் அடர்ந்த காடுகளை பிரம்மாண்ட வனப் பரப்புகளை, பிரமிக்க வைக்கும் ரயில் சண்டை காட்சிகளை என எதை பாராட்டுவது என்று திகைத்துப் போகும் அளவிற்கு படம் முழுக்க ஒரு அழகியல் பாடம் எடுத்திருந்தார் என்று சொல்லலாம்,

லியாகத் அலிகானின் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், அதை கேப்டன் விஜயகாந்த் பேசும்போதும் சரி, ஒரு அறிமுக நடிகரான மன்சூர் அலிகான் பேசும்போதும் சரி தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டல் பறந்தது. படம் வெளியான சமயத்தில் இந்த வசனங்களுக்காகவே ஆடியோ கேசட்டுகள் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் விற்பனை செய்து சாதனை படைத்தது என்பது இன்னொரு வரலாறு.

வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெறும் விதமாக சரத்குமார், அறிமுக மிரட்டல் வில்லனாக வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் பக்கபலமாக அமைந்ததுடன் இந்தப்படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர்.

இந்த படத்தின் சிறப்பே 90களில் மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் 2K இளைஞர்கள் பார்த்தாலும் கூட இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை எப்படி அப்போது எடுத்தார்கள் என பிரமிக்க வைக்கும் விதமாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இன்று செம்மர கடத்தல் பின்னணியில் உருவான ‘புஷ்பா’ படத்தை கொண்டாடும் இளைஞர் கூட்டம், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பார்த்தால் புஷ்பாவுக்கு எல்லாம் முன்னோடியாக அப்போதே இப்படி விஜயகாந்த் நடிப்பில் கேப்டன் பிரபாகரன் என்கிற ஒரு அதிரடி படம் கொடுத்திருக்கிறார்களே என்கிற ஆச்சரியம் காட்சிக்கு காட்சி அவர்களுக்கு ஏற்படும்.

இப்படம்  அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து,  பெரும்பாலான திரையரங்குகளில் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கும் மேல் ஓடி பெரும் வெற்றி பெற்றது.

இந்தத் திரைப்படம்  வெளியாகி 34 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில்  மிகப்பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. பிலிம் விஷன் கம்பெனியின் ராமு படத்தினை 4K தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்து கொடுத்துள்ளார்.

இப்படி கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ல ‘கேப்டன் பிரபாகரன்’ தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.

அந்த வகையில் ஆந்திராவுக்கு இப்போது ஒரு ‘புஷ்பா’ என்றால் தமிழ்நாட்டுக்கு அப்போதே ஒரு ‘கேப்டன் பிரபாகரன்’ என அடித்து கூறலாம்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கேப்டன் பிரபாகரனாக வரும் விஜயகாந்த் சில கேள்விகளை எழுப்பி இருப்பார். அதற்கு 34 வருடங்களாக விடை கிடைக்கவில்லை.  படத்தைப் பாருங்கள்.. உங்களுக்குள்ளும் அந்த கேள்விகள் நியாயம் என்கிற எண்ணம் எழும்!

Related Posts