சொர்க்கவாசல் : திரை விமர்சனம்
உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சம்பவம், 1999ம் ஆண்டு நவம்பர் 17ல் சென்னை (பழைய) மத்திய சிறையில் ஏற்பட்ட, பயங்கர கலவரம்.
குண்டர் சட்டத்தில் இங்கே அடைக்கப்பட்டு இருந்த தாதா பாக்சர் வடிவேலு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக சிறை நிர்வாகம் கூறியது. சிறையில் இருந்த அவரது சிஷ்யர்களோ சிறை அதிகாரிகள் அடித்துக் கொன்று விட்டதாக கலவரத்தில் ஈடுபட்டனர்.
ரவுடிகள் வெள்ளைரவி, பர்மா சீனு, கொடுக்கு, டிக்கி, திருவள்ளூர் விஜி உள்பட பலர் ஒன்று சேர்ந்து, துணை ஜெயிலர் ஜெயக்குமார் முன்பு நீதானே பாக்சர் வடிவேலை கொலை செய்தாய்” என்று கோஷமிட்டனர். அவர்களை ஜெயக்குமார் மற்றும் வார்டன்கள் துரை, அய்யப்பன், யுவராஜ் சமாதானப்படுத்தினர்.
ஆனால் ரவுடிகள் ஜெயக்குமாரை இழுத்துச்சென்று, சிறை அலுவலக அறையில் தள்ளினர். அங்கு அவரை அவரை பர்மா சீனு, அரிசி மூட்டையை தூக்கும் குத்தூசியால் குத்தினார். பின்னர் அந்த அறையில் இருந்த ஆவணங்களில் தீவைத்து, ஜெயக்குமாரை தீயினுள் போட்டனர். அவர் தீயில் கருகி இறந்தார்.
சுமார் 2 ஆயிரம் கைதிகள் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். கலவர கும்பலை நோக்கி கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கலவரம் அடங்கவில்லை. எனவே அதை அடக்குவதற்கு சென்னை நகர போலீசின் உதவி நாடப்பட்டது.
போலீஸ் துணை கமிஷனர் ஜஸ்பர் ராஜாசிங் தலைமையில் போலீசார், சிறைக்குள் புகுந்தனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜெயபால், மணி, பாபு, காதர் ஆகியோர் மரணமடைந்தனர். கலவரம் அடங்கியது.
இந்த கலவரத்தில் 40 போலீசார், 40 சிறை அலுவலர்கள், 63 கைதிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 96 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சிலர் தலைமறைவானார்கள்.
துப்பாக்கிச் சூட்டில் நான்கு கைதிகள் பலியானதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அப்போது சிறையில் இருந்தவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள்பலியானதாக கூறினார்கள்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை உண்மைக்கு நெருக்கமாக படமாக்கி, கண்களை விரிய வைக்கிறார் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.
கலவரம் தொடர்பான விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரிப்பதில் படம் துவங்குகிறது. தொடர்புடைய ஒவ்வொருவராக விசாரிக்கப்பட, அவர்களது பார்வையில் படம் விரிகிறது.
சிறையில் இருக்கும் ரவுடியான சிகா திருந்தி வாழ ஆசைப்படுகிறார். ஆனால், புதிதாக வரும் காவல் அதிகாரி, சுனில் சிகாவை டார்கெட் செய்து கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், செய்யாத குற்றத்துக்காக சிறைக்குள் வருகிறார் இளைஞர் பார்த்திபன். அவருக்கு பெயில் கிடைக்கும் இரு நாட்களுக்கு முன்பு, அந்த கொடூர கலவரம் நடக்கிறது.
அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.
ஆர்.ஜே.பாலாஜிதான் நாயகன். அவரது நடிப்புக்கு புதுப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது இப்படம்.
செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்கு வந்து ஆதங்கப்படுவது, குடும்ப நிலையை நினைத்து குமுறுவது, நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் பதற்றம் என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். அற்புதம்!
சிறை அதிகாரி கட்ட பொம்மனாக வரும் கருணாஸ், பேச்சில் நயம், கண்களில் விசம் என சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறி வருகிறது.
உயர் அதிகாரி சுனிலாக வரும் ஷராஃப் யு தீனும் கச்சிதமான நடிப்பு. கைதிகளிடம் திமிராக நடந்துகொள்வது, டார்ச்சர் செய்வது என உண்மையிலேயே எரிச்சலூட்டும் அளவுக்கு நடித்து இருக்கிறார்.
திருந்திய தாதாவாக ஆனால் சிறையையே கைக்குள் வைத்திருக்கும் கைதி சகாவாக செல்வராகவன். அவரது முகபாவம், பேச்சு, உடல் மொழி.. எதுவுமே செட் ஆகவில்லை.
ஆனால் அற்புதமான பாத்திரவடிவமைப்பு, இக்குறையை கடந்து செல்ல வைக்கிறது. அது இயக்குநரின் வெற்றி.
தாதாவின் கூட்டாளியாக வரும் ஹக்கிம் ஷாவின் ஆக்ரோஷ நடிப்பு நடுங்க வைக்கிறது.
விசாரணை அதிகாரியாக வரும் நட்டி நடராஜன், காதலியாக வரும் சானியா ஐயப்பன், கைதிகளாக வரும் ஷோபா சக்தி, பாலாஜி சக்திவேல், மௌரிஷ், சாமுவேல் ராபின்சன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
பெரும்பாலாம் சிறைக்குள்ளேயே நடக்கும் கதை. ஆனாலும் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளைக் கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன். பின்னாலேயே ஓடிவரும் செல்ல நாய்க்குட்டி போல, காட்சிகளைத் ஆர்வத்துடன் தொரும் அவரது கேமராவின் பங்களிப்பு சிறப்பு.
இதற்கு முக்கிய காரணம், எஸ்.ஜெயசந்திரனின் கலை இயக்கம்! அருமையான பங்களிப்பு!
நான்-லீனியராக நகரும் திரைக்கதை. ஆனால் எந்தவித குழப்பமும் இல்லாத வைகையில் தொகுத்திருக்கிறார்.
இதற்கு அடிப்படையான தமிழ் பிரபா, அஷ்வின் ரவிசந்திரன், சித்தார்த் விஸ்வநாதன் ஆகியோரின் திரைக்கதை பங்களிப்பையும் சொல்ல வேண்டும்.
நிறைய கதாபாத்திரங்கள்.. ஆனாலும் எவரை ரசிகன் பின்தொடர வேண்டும் என்கிற சிக்கல் இன்றி, என்ன நடக்கப்போகிறது – என்ன நடந்தது என்கிற கேள்வியைப் பின்தொடர வைக்கும் அற்புதமான திரைக்கதை.
“நரகத்தில் ராஜாவாக இருக்க போகிறீர்களா இல்லை சொர்க்கத்தில் மண்டியிடப்போகிறீர்களா”, தேவைப்படும் போது பொம்பள, தேவைப்படாதபோது ஆம்பள’, ‘வன்முறைதான் உலகில் மிகப்பெரிய கோழைத்தனம்’, ‘நீங்க எவ்ளோ பெரிய அறிவாளியா இருந்தாலும் எதிர்ல இருக்கறவனை முட்டாள்ன்னு நினைக்காதீங்க’ என வசனங்கள் கூர்மை.
பாடலும், பின்னணியும் ஒரு கதாபத்திரமாகவே படம் முழுதும் பயணிக்கின்றன. அதுவும் கலவர காட்சியில் ஒலிக்கும் ‘தி எண்ட்’ என்கிற ஆங்கிலப் பாடல் அற்புதம். சோகத்தை, மெல்லிய அலறலை, துக்கத்தை அளிக்கும் இசை. இசையமைப்பாளர் செல்வா ஆர்.கே. கிறிஸ்டோ சேவியருக்கு பாராட்டுகள்.
தினேஷ் சுப்புராயனின் சண்டைக் காட்சிகள் அதிர வைக்கின்றன.
அப்பாவிகளை குற்றவாளிகளாகவும், குற்றவாளிகளை இன்னும் குற்றம் செய்யத் தூண்டும் விதத்திலும் இருக்கும் சிறை கட்டமைப்பு, நெருக்கடியிலேயே இருக்கும் கைதிகளின் மனநிலை, செல்வாக்குள்ள கைதிகளின் ஆதிக்கம், அதிகாரிகளின் திமிர் நடவடிக்கை, இதற்கிடையில் அத்த பூத்த மாதிரி சில அன்பு முகங்கள் என சிறையை செல்லுலாய்டில் அற்புதமாக வரைந்து அளித்து இருக்கிறார் இயக்குநர்.
அதிகார வர்க்கம், சிறைக்கைதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்கினறன என்பதையும், கைதிகளுடன் (வெளியில் இருக்கும்) அதிகார வர்க்கம் எப்படி தொடர்பில் இருக்கிறது என்பதையும் கூர்மையாகச் சொல்லி இருக்கிறார்.
சொர்க்கவாசல் – வெறும் பரபரப்பு, கலவர படம் அல்ல.. மாற – மாற்றப்பட வேண்டிய சிஸ்டம் குறித்தான பார்வை!
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்.. தமிழ்த் திரையுலகுக்கு ஓர் நல்வரவு!
– டி.வி.சோமு