“அந்த ரெண்டு நடிகைங்களுக்கு ரெட் கார்டு!”: ‘தில்ராஜா’ விழாவில் பிரபலங்கள் ஆவேசம்!
ஷெரீன், சம்யுக்தா ஆகிய இரு நடிகைகளுக்கு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என, தில்ராஜா பட விழாவில் பிரபலங்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிக்க, சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும்திரைப்படம், தில் ராஜா.
விஜய் சத்யா, ஷெரீன், மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அம்ரீஷ் இசையமைத்துள்ளார். மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, சிறப்பாக நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் ஏ வெங்கடேஷ். “இப்படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், இருவருக்கும் முக்கியமான ரோல். ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இது தான் சினிமா” என்று ஆதங்கப்பட்டார்.அதே போல தயாரிப்பாளர் திருமலை, “ஷெரீன் இந்தப்படத்திற்கு வந்து கலந்துகொண்டிருக்க வேண்டும். வராமல் இருப்பது கேவலம். பணம் வாங்கித் தானே நடிக்கிறீர்கள். இனிமேல் இது நடக்காமல் இருக்கத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்று ஆவேசமாக பேசினார்.
அதே போல தயாரிப்பாளர் கே ராஜன், “நாயகிகள் ரெண்டு பேர் வரவில்லை, என்கிறார்கள். பேக்கப் பண்ணிய ஹீரோயினை ஏன் படத்தில் நடிக்க வைத்தீர்கள், இனிமேல் அந்த இரண்டு பேருக்கும் தமிழில் யாரும் வாய்ப்பு தரக்கூடாது” என்று காட்டமாக பேசினார்.