‘பொன்னியின் செல்வன் 3’ : மும்முடிச் சோழன் வெளியாகிறது!
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் இரண்டு பாகங்களாக இயக்கி வெளியிட்டார். இது அருண்மொழி வர்மன், தனது அரச பட்டத்தை, தனது சிற்றப்பா மதுராந்தகருக்கு அளிப்பதோடு நிறைவு பெறும்.
16 ஆண்டுகள் மதுராந்தகர் ஆட்சிக்குப் பிறகு, அருண்மொழி வர்மன் அரசராக பொறுப்பேற்றார். அது முதல், காந்தளூர் சாலை மற்றும் பாண்டிய நாட்டை வென்று மும்முடிச்சோழன் என பெயர் பெற்றது. பிறகு அண்டை நாடுகளை, போரிட்டும் – சமாதான உடன்படிக்கையின் பேரிலும் வென்று சோழ நாட்டை மேலும் விரிவாக்கினார்.
இந்த வரலாற்றுச் சம்பவங்கள்.. அதாவது பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்ட சம்பவங்களுக்கு பிறகான நிகழ்வுகள், தற்போது ‘மும்முடிச் சோழன்’ என்ற பிரம்மாண்ட நாடகமாக அரங்கேறுகிறது. இதை பொன்னியின் செல்வன் 3ம் பாகம் என்றும் சொல்லலாம்.
இந்த மும்முடிச்சோழன் நாடகத்தை, சென்னை ட்ராமாஸ் சார்பில் சித்த மருத்துவர் ஏ.பி. வைத்தீஸ்வரன் பிரம்மாண்டமாக தயாரித்து அளிக்கிறார்.
ஏ.பி. வைத்தீஸ்வரன் நம்மிடம், “இந்த நாடகம் முழுக்க முழுக்க வரலாற்று தரவுகளோடு, பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். இந்நாடகத்துக்கு திரைக்கதை – வசனம் எழுதி இருப்பவர், இயக்குநர் தஞ்சை ஆர்.கே. இவர், ‘உன்னோடு கா’ திரைப்படத்தை இயக்கியவர்.
ஆர்.கே. நம்மிடம், “ராஜராஜன் தனது ஆட்சிக்காலத்தில்மக்களுக்கு இலவச ஆடுமாடு அளித்தது, வங்கி துவங்கியது, ஆயிரக்கணக்கான ஏரிகளை வெட்டியது, நில சீர்திருத்தம் செய்தது, சாதி முறையை ஒழித்தது என பல நன்மைகளைச் செய்தார். இறுதிக்காலத்தில், அரச பதவியைத் துறந்து சிவனடியாராக வாழ்ந்து மறைந்தார். இவை எல்லாவற்றையும் சுவாரஸ்யமான நாடகமாக உருவாக்கி உள்ளோம்” என்றார்.
நாடகத்துக்கு ஏ.எஸ்.மணி இயக்க, தாஜ்நூர் இசை அமைக்க, பாடல்களை நெல்லை ஜெயந்தா எழுதி இருக்கிறார்.
இந்த நாடகத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றுடன் இணைந்து சென்னை ட்ராமாஸ் அளிக்கிறது.
வரும் ஜூன் 10ம் தேதி, மாலை ஆறு மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாடகம் நடைபெறுகிறது.
மதுராந்தகருக்கு அரசர் பட்டத்தை அளித்து பிறகு அரசரான அருண்மொழி வர்மன் ஆட்சி எப்படி இருந்தது என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இப்போது அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கிறுது. அந்த ஆர்வத்தை இந்நாடகம் பூர்த்திசெய்யும்.

