மாயா எஸ். கிருஷ்ணனின் மாயக்கூத்து! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்… சிந்திக்க வைத்த நையாண்டி!

மாயா எஸ். கிருஷ்ணனின் மாயக்கூத்து! சிரிப்பில் அதிர்ந்த அரங்கம்… சிந்திக்க வைத்த நையாண்டி!

நடிகை, மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பல முகங்களைக் கொண்ட மாயா எஸ். கிருஷ்ணன், இப்போது ஸ்டாண்ட் அப் காமெடியிலும் இறங்கி அடித்துத் தனக்கென ஒரு கெத்தான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இதற்குச் சான்றாக அமைந்தது சென்னை மியூசிக் அகாடமியில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற இவரது ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சி! ஆயிரத்து ஐநூறு இருக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய அரங்கம், நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகிப் புதிய சாதனை படைத்தது. நிகழ்ச்சி நாளன்று அரங்கம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இருக்கும் பாகுபாடு, வெறுப்பு பிரச்சாரம், ஆதிக்க மனப்பான்மை போன்ற கனமான விஷயங்களை, தனது ‘மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரம் மூலம் நையாண்டியாகப் பேசி டிஜிட்டல் உலகில் ஏற்கெனவே லைக்ஸ்களைக் குவித்து வருகிறார் மாயா.

அதே பாணியில், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி மாலை நடைபெற்ற ‘பொம்ப்ளேள்’ மேடையில் தனி ஆளாக நின்று பார்வையாளர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். கூத்து மற்றும் மேடை நாடகங்களில் தனக்கிருக்கும் அனுபவத்தை இதிலும் கச்சிதமாகப் பயன்படுத்தி, ரசிகர்களோடு நேரடியாக உரையாடும் ஒரு அட்டகாசமான மேடை மொழியைக் கையில் எடுத்திருந்தார்.ஒரு நொடி அரங்கம் சிரிப்பால் அதிர்கிறது; அடுத்த நொடியே மாயா வீசும் சர்ப்ரைஸ் நையாண்டி வசனத்தில் ரசிகர்கள் வாயடைத்துப் போகிறார்கள்! அதன்பின் மஞ்சுளா டீச்சருடன் இணைந்து ரசிகர்கள் பாடி ஆடும் கொண்டாட்டத் தருணம் என நிகழ்ச்சி முழுவதும் செம த்ரில்லிங்காக நகர்ந்தது.

வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், வந்திருந்த ரசிகர்களையும் தன் ஆட்ட பாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டார் மாயா! ஒரு கட்டத்தில் இந்த ஷோ, காமெடி எல்லையைத் தாண்டி ஒரு திருவிழா போல மாறியதுதான் ஹைலைட்.

மொத்தத்தில் சிரிப்பு, அதிர்ச்சி, சிந்தனை, பாட்டு, ஆட்டம் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா ‘கூத்து’ அனுபவத்தைக் கொடுத்துள்ளது ‘பொம்ப்ளேள்’.

இப்படித் தாயகத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சியை, அடுத்து உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று அரங்கேற்றத் தயாராகி வருகிறார் மாயா எஸ். கிருஷ்ணன்!

Related Posts