பீனிக்ஸ் – வீழான்: திரை விமர்சனம்
மோசமான அரசியல்வாதியை சாதாரண இளைஞன் பழி வாங்குவதும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் பீனிக்ஸ்.
தனது சகோதரனை கொலை செய்த, எம்எல்ஏ கரிகாலனை, பொது இடத்தில் வைத்தே அரிவாளால் தாக்கி கொடூரமாக கொலை செய்கிறார், நாயகன் சூர்யா. இதையடுத்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார்.
அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கும் எல்எல்ஏ மனைவியான வரலட்சுமி, அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் பீனிக்ஸ் ; வீழான் படத்தின் கதை.
பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதிதான் நாயகன். துடிப்பான நாயகனாக சண்டைக் காட்சிகளில் துவம்சம் செய்திருக்கிறார். அவரது கடும் உழைப்பு தெரிகிறது. காதல் காட்சிகள் இல்லை. குத்து டான்சில் கவர்கிறார். நடிப்புக்கு என்ன… சிறந்த நடிகரான அப்பா விஜய் சேதுபதியிடமே பயிலலாம். வாழ்த்துகள்.
நாயகனின் தாயாக வரும் தேவதர்ஷினி வழக்கம்போல் வாழ்ந்துகாட்டி இருக்கிறார். மகனை நினைத்து கதறுவது, எம்.எல்.ஏ.விடம் கெஞ்சுவது என நிமான தாயை கண் முன் நிறுத்திவிட்டார்.
எம்.எல்.ஏ. கரிகாலனாக வரும் வரும் சம்பத், அவரது மனைவி – வில்லி வரலட்சுமி, அஜய் ஜோஷ் ஆகியோர்மீட்டருக்கு மேல் நடித்து இருக்கின்றனர். நரேன், ஹரீஷ் உத்தமன் ஆகியோரும் ( போலீசாக) நடித்து உள்ளனர்.
சூர்யா சேதுபதி அண்ணனாக வருபவர் இயல்பாக நடித்து இருக்கிறார். அவரது காதலியாக வரும் அபிநட்சத்திராவும் நடிப்பில் கவர்கிறார்.
அதே போல, சிறை அதிகாரியாக வரும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயல்பான நடிப்பு ஈர்க்கிறது.
சாம் சி.எஸ்சின் பின்னணி இசை படத்துக்கு பலம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதம். அதுவும் சிறை காட்சிகள், அசரடிக்கின்றன. சிறையின் உணவுக்கூடம், சிறையில் இருக்கும் வெளிச்சம் குறைவான அறை… இப்படி நிஜ சிறையிலேயே படம் எடுத்தார்களோ என நினைக்க வைத்து இருக்கிறது ஒளிப்பதிவு.
இந்திய திரையுலகில் பிரபல சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் முதல் படம் இது. சண்டைக் காட்சிக்குச் சொல்ல வேண்டுமா…. விதவிதமான அதிரடியான சண்டைக் காட்சிகளை வைத்து இருக்கிறார். அதற்கேற்ற நாயகனை (சூர்யா சேதுபதி) நடிக்க வைத்து இருக்கிறார்.
அதுவும் படத்தின் முற்பாதியில் அடிதடி, சண்டை, துரத்தல், ரத்தம், கொலை ரத்தம் தெறிக்கிறது.
அதே நேரம், நாயகனின் சகோதர பாசம், அவரது அண்ணனின் காதல் என பல்வேறு உணர்வுகளுக்கும் இடம் கொடுத்து இருக்கிறார் இயக்குநர்.
நாயகனின், “நாங்க ஜெயிக்கக்கூடாதா” என்கிற வாசனம், ஏழை மக்களின் குரலாக ஒலிக்கிறது.

