பறந்து போ: திரை விமர்சனம்

பறந்து போ: திரை விமர்சனம்

“குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைந்து பாருங்கள்.. நீங்களும் வாழ்வீர்கள்” என்கிறது பறந்து போ திரைப்படம்.

மாதத் தவணைகள் துரத்தும் நடுத்தர குடும்பம். மளிகைப் பொருட்களை வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யும் கோகுலுக்கு, சொந்தமாக கடை வைக்க வேண்டும் என்பதே லட்சியம். அவரது மனைவி குளோரி, வெளியூரில் (தற்காலிக எக்ஸிபிசன்) கடை வைத்து இருக்கிறார். இவர்களது ஒரே மகன், சிறுவன் அன்பு.

அப்பா காலையில் வெளியில் சென்றுவிட்டு இரவு வருவார்.. அம்மா வெளியூரில் என தனிமையில் தவிக்கிறான் அன்பு.

இந்த சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக, அப்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் ஊர் சுற்றும் வாய்ப்பு கிடைக்கிறது அன்பு. அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் அன்புவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதுதான் கதை.

பொதுவாக அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கவுண்ட்டர் கொடுக்கும் காமெடியானாகத்தான் சிவா வருவார். ஆனால் இந்தப் படத்தில் அக்கறையான குடும்பத்தலைவன் – அன்பான கணவன் – பாசமான தப்பன் என உணர்வுகளை அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மகனிடம் படாதபாடுபட்டு.. கோபம் ஒரு பக்கம் என்றாலும் அதை வெளிப்படுத்த முடியாத நிலை மறுபக்கம்.. சிறப்பான நடிப்பு. வாழ்த்துகள் சிவா.

அவரது மனைவியாக நடித்து இருக்கும் குளோரி ஆண்டனியும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். உறவுகளை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட நிலையில் எப்படியாவது பொருளாதாரத்தில் முன்னேறிவிட வேண்டும் என்கிற துடிப்பு, அலைபேசியிலேயே மகனிடம் காட்டும் பாசம்.. என ஒரு குடும்பத்தலைவியை கண் முன் நிறுத்தி இருக்கிறார்.சிறுவன் அன்புவாக, அசத்தி இருக்கிறார் மிதுல் ரயான். பொதுவாக சினிமா சிறுவர்கள் ‘பெரிய மனுசத் தனத்துடன்’ பேசி – நடந்து, டார்ச்சர் செய்வார்கள். ஆனால் மிதுல் ரயானிடம் சரியான நடிப்பை வாங்கி இருக்கிறார் இயக்குநர் ராம். சிறப்பான கதாபாத்திரம்.

அஞ்சலி, அஜு வர்கீஸ் , விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அனைவருமே பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, சூரியகாந்தியாய் ஜொலிக்கிறது. மலை, குளம், தோட்டம் என அனைத்து இடங்களுக்கும் நம்மை நேரடியாகவே அழைத்துச் செல்கிறது. டிரோன் காட்சிகள் நம்மை பறக்க வைக்கின்றன.

சந்தோஷ் தயாநிதி இசையில் நிறைய பாடல்கள். ஆனாலும் அலுப்படைய வைக்காமல் ரசிக்க வைக்கின்றன. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் சிறப்பு.

பணத்தை நோக்கி ஓடும் பெற்றோர்கள், குழந்தைகளின் தனிமை… இதை மனதில் படும் படி சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராம்.அதே பாசத்துடன் பள்ளித் தோழி, அந்த நட்பை புரிந்துகொள்ளும் அவளது கணவன் என ராமின் டச்கள் நிறையவே உண்டு.

தவிர நம் தோளில் கைபோட்டு நட்புடன் பேசிவரும் நண்பனைப்போன்ற திரைக்கதை…

வாழ்த்துகளும் நன்றிகளும் ராம்!

Related Posts