‘ஒன்’: உலக அளவில்மிரட்டும் தமிழ்ப் படம் ! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஒன்’: உலக அளவில்மிரட்டும் தமிழ்ப் படம் ! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திரைப்பட உருவாக்கத்தில் 24 பிரிவுகள் உள்ளதாகக் கூறப்படுவது உண்டு. தற்போது அனிமேஷன், மிக்ஸிங் & மாஸ்டரிங் என புதிய பிரிவுகளும் சேர்ந்துள்ளன. இவை அனைத்தையும் ஒருவரே செய்து உலக சாதனை படைத்துள்ள தமிழ்த் திரைப்படம், ‘ஒன்’.

இப்படத்தில் பல வேடங்களிலும் நடித்துள்ளார் சங்ககிரி ராஜ்குமார்.

யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்?

சேலம் மாவட்டம் சங்ககிரியில் வசிக்கும் பாரம்பரியத் தெருக்கூத்துக் கலைஞரும், ‘சேத்துமான்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான எஸ்.எம். மாணிக்கத்தின் மகன், ராஜ்குமார்.ரத்தத்திலேயே கலை ஊறியிருந்ததால், சினிமா மீது கொண்ட தீராத காதலால் மறைந்த மூத்த இயக்குநர் வேலு பிரபாகரனிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

அதன்பின்னர் எளிய மக்களின் வாழ்வியலையும், சமூகப் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு  ‘வெங்காயம்’ திரைப்படத்தை இயக்கினார். இது பெரும் வரவேற்பு பெற்றது.

அடுத்து, ‘பயாஸ்கோப்’ என்கிற திரைப்படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்தார்.

திரைப்படம் என்பது பெரிய விசயம் அல்ல.. மக்களுக்கான எளிய கலைதான் என்பதை சுவாரஸ்யமாக அளித்தார். இரு படங்களுமே, இவருக்குத் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

‘ஒன் மேன்’ உருவான பின்னணி

தனது மூன்றாவது திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் உருவாக்கத் திட்டமிட்டபோதுதான் வித்தியாசமான யோசனை தோன்றியது:

விளம்பர உத்தி: பெரிய நட்சத்திரங்களை வைத்து அதிக பொருட்செலவில் படம் எடுத்து விளம்பரம் செய்வதை விட, இதுவரை யாருமே செய்யாத ஒரு அசாத்திய முயற்சியைச் செய்தால், அந்த முயற்சியே படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாக மாறும் என யோசித்தார்.

அனைத்துமே தனி ஒருவன்: கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, ஒளிப்பதிவு, லைட்டிங், கிரேன்-ட்ராலி இயக்கம், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, டப்பிங், இசை, 3டி மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட் மற்றும் கலர் கரெக்ஷன் என அத்தனை துறைகளிலும் இவரே பணியாற்றினார்.

அவதூறுகளும் நம்பிக்கையும்: உதவிக்குக் கூட ஒரு ஆளை வைத்துக்கொள்ளாமல் அத்தனையையும் தானே செய்தபோது, சுற்றியிருந்தவர்கள் இவரைப் பைத்தியக்காரன் என்றும் ‘சைக்கோ’ என்றும் உதாசீனப்படுத்தினர். ஆனால், அனைத்துப் புதிய முயற்சிகளும் தொடக்கத்தில் உதாசீனப்படுத்தப்படும் என்பதில் உறுதியாக இருந்து உழைத்தார்.

உலகளாவிய படப்பிடிப்பும் கதைக் களமும் இப்படத்தின் கதைக் கரு “உலகத்தின் கடைசி மனிதன்” என்பதாகும்.

சர்வதேசப் படப்பிடிப்பு: இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, வாடிகன் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ரகசியப் படப்பிடிப்பு: படக்குழு என்று யாருமே இல்லாமல் ஒரே ஒரு மனிதர் மட்டுமே கேமராவுடன் நின்றதால், அந்தந்த நாடுகளில் யாருக்கும் இது படப்பிடிப்பு என்றே தெரியவில்லை. கதைக்கு ஏற்ப தனிமையான சூழல் அமைய இதுவே பெரும் உதவியாக இருந்தது.

உண்மைக்கும் ஆதாரம்: இந்த உலக சாதனையைத் தான் உண்மையிலேயே தனி ஒருவனாகத்தான் செய்தேன் என்பதை நிரூபிக்க, படம் உருவான விதம் முழுவதையும் மற்றொரு கேமராவில் ஆரம்பம் முதல் இறுதி வரை பதிவு செய்து வைத்துள்ளார்.இது குறித்து சங்ககிரி ராஜ்குமார், “நான் ஒரு தெருக்கூத்துக் கலைஞனின் மகன். தெருக்கூத்துக் கலைஞர்கள் தங்கள் ஆடை, ஒப்பனை, நடிப்பு, இசை என அத்தனை வேலைகளையும் தங்களையே அர்ப்பணித்துத் தானே செய்துகொள்வார்கள். அந்த மரபில் வந்த எனக்கு இது பெரிய விஷயமல்ல” என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

சுமார் 6 ஆண்டு காலம், தனி ஒரு மணிதனின் அசுர உழைப்பில், மார்டன் டெக்னாலஜியில் உருவான,  ஒன் மேன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு பெரிய அளவில் நிலவுகிறது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத்தேதி நாளை மாலை  ஆறு மணிக்கு அறிவிக்கப்படும் என சங்ககிரி ராஜ்குமார் அறிவித்து உள்ளார்.

இது எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.