‘நந்தன்’ : விமர்சனம்: பெரியாரின் தேவை இன்னும் இருப்பதை உணர்த்தும் படம்!

பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களது வலியைப் பேசும் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ‘அட.. இந்தக் காலத்தில இப்படி எல்லாம் நடக்குதா..’ என்று அலுத்துக்கொள்பவர்களைப் பார்க்க முடிகிறது.
இந்தக் கேள்விக்கான விடையா, படத்துவக்கத்திலேயே, ‘இந்தக் காலத்திலும் இப்படி நடக்கிறதா என்று கேட்டீர்களானால்… உங்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று நேரடியாக காட்டுகிறேன்.. ’ என்கிற அறிவிப்பின் மூலம் பதில் சொல்லி விடுகிறார் இயக்குநர் இரா.சரவணன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து, பொதுப் பட்டியலில் இருந்து ரிசர்வ் தொகுதியாக மாறுகிறது. அதுவரை அங்கு பஞ்சாயத்துத் தலைவராக, கோலோச்சி வந்த ஆதிக்க சாதி புள்ளி தவித்துப்போய்விடுகிறார். பிறகு, தன்னிடம் அடிமையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த அம்பேத்குமார் என்பவரை தேர்தலில் நிறுத்துகிறார்.
அம்பேத் குமார் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து சில மக்கள் பணிகளைச் செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் முன்னாள் தலைவர், ஊர் முன்னிலையில் அம்பேத் குமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து உதைக்கிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார். அடுத்து பட்டியலினத்தைச் சேர்ந்த வேறு ஒரு நபரை, போட்டியின்றி தலைவராக்க முயற்சி செய்கிறார்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது ‘நந்தன்’ திரைப்படம்.நட்புக்கும், காதலுக்கும் வசனம் பேசுவது, அதிரடி ஆக்சன் காட்டுவது என்று வலம் வருபவர் சசிகுமார். அவருக்குள் இத்தனை நடிப்பாற்றலா… அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படியோர் நடிப்பு!
‘அடிமையாக இருக்கிறோம்’ என்கிற உணர்வே இன்றி, பஞ்சாயத்துத் தலைவரின் காலடியில் கிடப்பது… பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஊர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து முயற்சிப்பது… உண்மை உணர்ந்து சீறி எழுவது… அற்புதம்.
கருப்பான தோற்றத்தில், அழுக்கான உடையில் நடிக்கவும் துணிச்சல் வேண்டும்.
அற்புதம் சசிகுமார்!பஞ்சாயத்துத் தலைவராக, நடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். மிகச் சிறப்பான நடிப்பு. சாதி வெறி, பதவிகவெறி என ஆதிக்கவெறியின் உருவமாகவே மாறி இருக்கிறார். அதே போல, சமுத்திரகனியும் எப்போதும்போல இயல்பான நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
சசிகுமார் மனைவியாக நடிக்கும் ஸ்ருதியும் சிறப்பாக நடித்து உள்ளார். பஞ்சாயத்துத் தலைவரின் சாதி வெறி உணராமல், தனது கணவன் அடிமையாக இருக்கிறாரே என ஆதங்கப்படும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.
சிறு வேடங்களில் வந்து முத்திரை பதித்தவர்களையும் குறிப்பிட்டாக வேண்டும்.
முக்கியமாக, பஞ்சாயத்து தலைவரின் உறவினராக வந்து, பிறகு கெத்து காட்டும் பாத்திரத்தில் சுதாகர் சிறப்பாக நடித்து உள்ளார். தனக்கு சரிசமமாக ( வேண்டுமென்றே) ஒடுக்கப்பட்ட நபரை சாப்பிட அமரவைக்கும்போது அவரது முகபாவணை, தானும் ஒரு வேட்பாளரை கொண்டுவந்து பஞ்சாயத்துத் தலைவரை செல்லமாக மிரட்டுவது… என்று இயல்பாக நடித்து வழக்கம்போல் கவர்கிறார்.
அதே போல பஞ்சாயத்துத் தலைவரின் கையாட்களில் ஒருவராக வரும், சரவணனும் கவனத்தை ஈர்க்கிறார்.
இசை, ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
தனித்தொகுதி என்பாதால் ( வேறு வழியின்றி!)) பட்டியல் இனத்தவர் தேர்தல் மூலமாக உள்ளாட்சி பொறுப்புக்கு வருவதும், அங்கே தேசிய கொடி ஏற்றுவதோ, நாற்காலியில் அமர்வதோ, மக்கள் பணிசெய்வதோ முடியாத நிலை இருப்பதையும் சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.
பட்டியல் இனத்தவர் சாலையில் நடக்கக்கூடாது, பிற இனத்தவர் போல் ஆடை உடுத்தக்கூடாது, பேருந்தில் பயணிக்க்கூடாது என்பதெல்லாம் அநீதிகள் இருந்தன. அதை ஒழித்தது நீதிக்கட்சி… திராவிட சித்தாந்தம்.
இன்றும், பட்டியல் இனத்தவர் மீதான ஒடுக்குமுறைகள் சில வடிவங்களில் தொடரவே செய்கின்றன.
இது, திராவிட சித்தாந்தம்.. பெரியாரின் வழிகாட்டல்… இன்னமும் தேவைப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றன.
சாதியின் பெயராலேயே இந்த ஒடுக்கு முறைகள் நடக்கின்றன.
பெரியார், ‘எந்தவகையான ஒடுக்குமுறையாக இருந்தாலும் – யார் மீதான ஒடுக்குமுறையாக இருந்தாலும் எதிர்ப்பேன்’ என்று உறுதியுடன் போராடிய தந்தை பெரியார், சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை முழு வீச்சோடு எதிர்த்தார்.
‘ எனக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறா என்ன… சாதி ஒடுக்குமுறையை எதிர்க்கிறேன்.. சாதிக்குக் காரணம் மதம்.. மதத்துக்குக் காரணம் கடவுள்.. அதான் கடவுள் வேண்டாம் என்கிறேன்.. இல்லாத கடவுள்.. நன்மை செய்யாத கடவுள் எதற்கு’ என்றவர் பெரியார்.
இதைச் சொல்லாமல், சாதி ஒடுக்குமுறை குறித்து முழுமையான திரைப்படம் எடுத்துவிட முடியாது.
ஆனால் படத்தின் முதல் காட்சியே கோவிலில்தான் துவங்குகிறது.
இதை, இரா.சரவணன் உள்ளிட்ட சமூக அக்கறை உள்ள இயக்குநர்கள் உணர வேண்டும்.
– டி.வி.சோமு