‘சார்’: பிற்போக்கு மகாவிஷ்ணு – முற்போக்கு சங்கர் கதையா?
அரசுப் பள்ளபியில், பிற்போக்கு பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர், ‘பிறவி – பாவம் – மாற்றுத் திறனாளி’ என்றெல்லாம் மூட நம்பிக்கையை வலியுறுத்திப் பேசியதாக பரபரப்பு எழுந்தது; மேலும் மாற்றுத் திறனாளி ஆசிரியரை இழிவு படுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில், மகாவிஷ்ணுவிடம் பகுத்தறிவுடன் முற்போக்கான கேள்விகளை எழுப்பிய ஆசிரியர் சங்கரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி (பெரும்பாலான) ஆசிரியர்களுக்கும் அறிவியல் – பகுத்தறிவு பாடத்தை நடத்த வேண்டி உள்ளது என்கிற கருத்தும் எழுந்திருக்கிறது.
இந்த சர்ச்சை நிகழ்வை(யும்) உள்ளீடாக வைத்து, ‘சார்’ படம் உருவாகி உள்ளது என்பது, படத்தின் டீசர், டிரெய்லர், விழா நிகழ்வு பேச்சுக்கள் உணர்த்துகின்றன.தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்ப்பவர், போஸ்வெங்கட். இவர் முதன் முறையாக இயக்கிய, ‘கன்னிமாடம்’ திரைப்படத்தில், ஆணவக்கொலை – சாதி வெறிக்கு எதிரான கருத்தினை முன் வைத்தார்.
தற்போது, ‘சார்’ என்கிற படத்தை இயக்கி முடித்து உள்ளார். எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ். சிராஜ் தயாரித்திருக்கிறார். கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.
விமல் – சாயா தேவி ஜோடியாக நடிக்க, சிராஜ், ஜெயபாலன், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திங்களில் தோன்றுகின்றனர்.
சித்து குமார் இசையமைத்துள்ளார்.படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் ஆகியவை, மக்களுக்குத் தேவையான சமூக நீதியை வலியுறுத்துவதாக உள்ளன.
படத்தில் இடம் பெற்றுள்ள, ‘படிச்சிக்கிறோம்…’ என்கிற பாடல், கல்வியின் அவசியத்தை, இனிமையான ராகத்தில் – ரசிக்கவைக்கும் காட்சிகளில் உணர்த்துகிறது. “படிச்சிக்கிறோம்… ஊரே தடுத்தாலும் ஒதுங்கக்கூடாது..” என்பது உள்ளிட்ட பாடல் வரிகள் சிறப்பு.
இந்த பாடலை, அனைத்துத் திரையரங்கங்களிலும் – அங்கே எந்த படத்தை வெளியிட்டாலும் – தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிட வேண்டும்.
அதே போல டீசர், டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சமூக நீதியை வலியுறுத்துவதோடு, சமூக அநீதியை படம் பிடித்துக் காட்டுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும், ட்ரைலர், துவங்கும்போதே, ஆசிரியராக வரும் சரவணன், ‘ஆசிரியர் என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா’ என்று கேட்டு, விளக்கம் கொடுக்கிறார்.பிறகு பள்ளியில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் ஆசிரியராக வரும் விமலுக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாயா தேவிக்கும் இடையேயான காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
“பார்ப்பணர்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும்; பிறர் கல்வி கற்க முற்பட்டால், அவர்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும்’ என்கிறது மனு நீதி.
அந்த, மனு நீதிக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சி உள்ளது.
‘மனு நீதிய ஒழிக்க சொன்னா… மக்கள் நீதி கேட்டு கொடுக்கிற மனுவை ஒழிக்குறானுக’ என்ற வசனம், பின்னணியில் – காலத்தின் குரலாக – ஓங்கி ஒலிக்கிறது.
இறுதியில், வேல் கம்புடன் ஆவேசமாக வரும் விமல், ‘நான் சொல்லி கொடுக்கனும்னு தைரியமா இங்க வந்து நிக்கிறது உங்கள மாத்த இல்ல உங்க சந்ததிய மாத்த’ என்று சொல்லும் காட்சி சிலிர்ப்பூட்டுகிறது. டீசரிலும், கவனிக்கத்தக்க காட்சிகள் இடம் பெற்று இருந்தன. குறிப்பாக, ‘என்னால் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்’ (i can not teach anybody any thing i can only make them thinks) என்ற, அறிஞர் சாக்ரடிஸின் வார்த்தைகள் இடம் பெற்று இருந்தன.
ஆசிரியர் பணி என்ன என்பதை உணர்த்தும் இந்த வாசகம், ஆசிரியர்களின் கடமையை உணர்த்துவதாக அமைந்தது.
2014 – 2015 கல்வியாண்டு முதல் 2021 – 2022 வரை, ஒன்றிய பாஜக அரசு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ரூ.74 கோடி ஒதுக்கியது; அதே காலகட்டத்தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி, ரூ.1,488 கோடி!
‘உலகம் முழுதும் பத்து கோடி பேருக்கு மேல் பேசும் தமிழ் மொழிக்கு இவ்வளவு குறைந்த நிதி… மிகச் சிலபேர் மட்டுமே பேசும்… செத்த மொழி, சமஸ்கிருதத்துக்கு ஆயிரத்து நானூறு கோடியா’ என்ற ஆதங்கம் அப்போது எழுந்தது.இதை உணர்த்தும்படியாக ஒரு காட்சி, ‘சார்’ பட டீசரில் உள்ளது.
மாணவன், “சார், நான் ஏழுக்கு நூறு” என்கிறான். ஆசிரியர், “டேய்.. நூத்துக்கு ஏழுடா” என்கிறார். ரசிக்க வைக்கும் இந்த காட்சியின் பின்னால் கரும்பலகை தெரிறிது…
அதில்..
‘அழிந்த மொழிகள்: லத்தீன், கிரேக்கம், எரேபியம்,
மறைந்த மற்றும் பேச்சு வழக்கற்ற மொழி சமஸ்கிருதம்,
அழியா மொழி… தமிழ், சீனம்..’ என்று எழுதப்பட்டுள்ளது.
மிகச் சிறப்பான – அவசியமான காட்சி இது.
‘மூன்று தலைமுறை ஆசிரியர்களின் கதை இது’ என இப்பட பட விழாவில் வெற்றிமாறன் கூறினார். இதிலிருந்து, தற்போதைய கல்வி – ஆசிரியர் பிரச்சினைகளை மட்டுமின்றி, கடந்த கால பிரச்சினைகளையும் படம் அலசுகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.‘உன் கையை வைத்தே உன் கண்ணை குத்துவார்கள்’ என்கிற ஒரு வழக்கு மொழி உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்க… அந்த இனத்திலிருந்தே சிலரை பயன்படுத்துவது ஆதிக்கவாதிகளின் காலங்காலமான யுக்தி.
இந்தப் பட டீசரிலும் அது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆதிக்க வெறியர் (ஜெயபாலன்) “பள்ளிக்கூடத்தை இடிக்கணும்.. அதை நம்ம ஊர் சனங்கள வச்சே இடிக்கணும்..” என்று சொல்லும் காட்சிதான் அது.
இந்த ஆதிக்க வெறி கதாபாத்திரத்துக்கு சாமி என்றும், இதை எதிர்த்துப் போராடும் (விமல்) கதாபாத்திரத்துக்கு ஞானம் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர்.டீசரின் இறுதிக் காட்சியில்… “சாமியை கொண்ணுட்டேன்..” என்று ஆவேசமாக சொல்லுவார் ஞானம்.
‘பக்தி வந்தால் புத்தி போச்சு’ என்பார் தந்தை பெரியார். அதற்கு, ‘ஞானம் (கல்வி) வந்தால் ( சாமி) பக்தி போச்சு’ என்பதும்தானே அர்த்தம்! அதை சிறப்பாக உணர்த்துவதாக இந்தக் காட்சி அமைந்துள்ளது!
ஆனால் சாதியை ஒழிப்பதாக படம் எடுக்கும் இயக்குநர்கள், தங்கள் படங்களில் கடவுள்- பக்தி காட்சிகளை வைக்கின்றனர். இது சாதியத்துக்கு ஆதரவாகவே முடியும். ஆனால் இந்தப் படத்தில் கடவுளை, ஞானம் அழிக்க்கிறது.
இப்படி பட்டவர்த்தனமாக – அவசியான கருத்தைச் சொன்ன படம், வேலு பிரபாகரன இயக்கிய கடவுள் திரைப்படம்தான். அதன் பிறகு பகுத்தறிவு படம் என்றால் அது சார் படமாகத்தான் இருக்கும்.
இப்பட டீசரின் இறுதியில், “மானமும் அறிவும்தான் மனுசனுக்கு அழகு.. ” என்கிற பெரியாரின் வார்த்தைகளிலேயே டீசர் நிறைவு பெறுகிறது.
மொத்தத்தில், சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினையை… மிகச் சிறப்பாக.. அதே நேரம் இரசிக்கத்தக்க சினிமாகா சார் உருவாகி இருக்கிறது என்பதை, பாடல்கள், டீசர் ஆகியவை உணர்த்தின. தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லரும் படம் மீதான ஆர்வத்தை அதிகரித்து உள்ளது.
மக்களுக்கான கதையை – திரைப்படத்தை சிந்தித்த இயக்குநர் போஸ் வெங்கட், தயாரிப்பாளர் எஸ். சிராஜ் , வெளியிடும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.
– டி.வி.சோமு
டிரெய்லர் லிங்க்: SIR – Official Trailer
டீசர் லிங்க்: sir offical teaser
‘பூவாசனை…” பாடல் லிங்க்: Sir – Poovasanai Lyrical Video
‘பனங்கருக்கா..’ பாடல் லிங்க்: sir Panangarukka Lyrical Video
‘படிச்சிக்கிறோம்…’ பாடல் லிங்க்: sir – Padichikurom Lyric Video