’தோழர் சேகுவேரா’ : திரைப்பட விமர்சனம்
ஒடுக்கப்பட்ட மக்கள், மீண்டெழ கல்விதான் ஆயுதம்! ஆனால், ‘அந்த கல்வியை அவர்கள் பெற்றுவிடக்கூடாது’ என்பதில் ஆதிக்க சக்திகள் எவ்வளவு முனைப்புடன் இருக்கின்றன என்பதைச் சொல்லும் படம், ’தோழர் சேகுவேரா’ .
அடக்குமுறை காரணமாக, துவக்க கல்வியையே முடிக்க முடியாத சமூகத்தில் இருந்து, முயன்று படித்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார் நாயகன் நெப்போலியன். அதற்கு மேல் படிக்க முடியாத நிலையில், வாகன பழுதுபார்ப்பவராக பணியாற்றுகிறார்.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ், அங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதன்படி, நாயகன் அலெக்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் இடம் பெறுகிறார்.
ஆனால், கல்லூரியின் முதல் நாளில் இருந்தே சக மாணவர்கள், சில ஆசிரியர்களால் சாதிய வன்முறைக்கு ஆளாகிறார்.
ஒருகட்டத்தில் எதிர்த்து நிற்க ஆரம்பிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ் இயல்பாக நடிக்க முயற்சித்து இருக்கிறார். சேகுவேரா என்கிற கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், எப்போதும் போல கேலி, கிண்டல், ஆவேசம் என கவர்கிறார்.
கலியபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த நடிகர் கவனம் ஈர்க்கிறார். நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
சாம் அலனின் ஒளிப்பதிவு, பி.எஸ்.அஸ்வினின் அசை, கௌதமின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.
இந்த நவீன யுகத்திலும் சாதிய அடக்குமுறை தொடர்வதையும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் சொல்லியிருக்கும் படம், தோழர் சேகுவாரா.