‘மைசூர் புலி’: மறைக்கப்பட்ட ரகசியம்.. பார்த்திபனின் தேடல்!
படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்ற இயக்குநர் ரா.பார்த்திபன், அங்கு மைசூர் புலி, மன்னர் திப்பு சுல்தான் வாரிசை சந்தித்து உள்ளார்.
மைசூர் மன்னராக புகழ் பெற்று இருந்த, தந்தை ஹைதர் அலியின் மரணத்துக்குப் பிறகு, 1782-ல் தனது 32 வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார்,திப்பு சுல்தான்.
ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து தீரத்துடன், நான்கு போர்களில் ஈடுபட்டார். உலகில் முதன் முதலாக பீரங்கியை உருவாக்கிப் பயன்படுத்தியது இவர்தான். இதைப் பார்த்துதான் பின்னாட்களில் ஆங்கிலேயர்கள், நவீன பீரங்கியை உருவாக்கினர்.
ஆங்கிலேயே ஆட்சியை எதிர்ப்பதில் உறுதியாக இருந்த திப்பு சுல்தான், அதே நோக்கம் கொண்ட தமிழ் அரசர்களான வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் உள்ளிட்டோருக்கு ஆயுதங்களையும், போர் வீரர்களையும் அளித்து உதவினார்.
அதே நேரம் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த தஞ்சை மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரை எதிர்த்து போரிட்டார்.
மே 4, 1799 அன்று ஸ்ரீரங்கப்பட்டினத்தில் தனது கோட்டையைப் பாதுகாக்கும் போரில் வீரத்துடன் போரிட்டு உயிர் துறந்தார்.
இந்து கோயில்கள் பலவற்றை பாதுகாத்து, புனரமைத்தவர் திப்பு சுல்தான்.
ஒரு உதாரணம்…
1790-1792 ஆண்டுகளில், மராட்டியப் படைகள் ஆங்கிலேயர்களுடன் கூட்டணி அமைத்து மைசூர் மீது போர் தொடுத்தன. மராட்டிய படையின் பரசுராம் பாவ், ரகுநாத் ராவ் பட்வர்தன் ஆகியோர் சிருங்கேரி மடத்தைத் தாக்கி, சூறையாடினர். மடத்தில் இருந்த தங்க நகைகள், விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் தானியங்களைக் கொள்ளையடித்தனர். அங்கிருந்து சிருங்கேரி சாரதா தேவியின் சிலையை பீடத்திலிருந்து அகற்றி சேதப்படுத்தினர். மேலும், மடத்தில் இருந்த பல சாதுக்கள் கொல்லப்பட்டனர்.
மராட்டியப் படைகள் வெளியேறிய பிறகு, அப்போதைய சிருங்கேரி ஜகத்குரு மூன்றாம் சச்சிதானந்த பாரதி சுவாமிகள், மடத்தைப் புனரமைக்க உதவி கோரி திப்பு சுல்தானுக்குக் கடிதம் எழுதினார்.
தகவல் அறிந்த திப்பு மிகுந்த வேதனையடைந்தார். அவர் தனது பதில் கடிதத்தில், “யார் தவறு செய்தார்களோ அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்ல.. சிலையை மீண்டும் நிறுவவும், மடத்தின் அன்றாடச் செலவுகளுக்கும் திப்பு சுல்தான் பெரும் தொகையை (சுமார் 200 ராகாட்டிகள்) அனுப்பினார். அத்துடன் துணிகள், அரிசி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.
மேலும், மடம் மீண்டும் தாக்கப்படாமல் இருக்கத் தனது ராணுவ வீரர்களைப் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கு ஆதாரமாக, அவர் எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் இன்றும் மடத்தில் பாதுகாப்பாக உள்ளன.
ஆனால் இவரைத்தான் இந்துத்துவ ஆட்கள் – பாஜகவினர், “இந்து விரோதி” என பிரச்சாரம் செய்கின்றனர். கர்நாடகாவில் கொண்டாடப்பட்டு வந்த, திப்பு ஜெயந்தியை நிறுத்தினர்.
உண்மை என்னவென்றால்….
சிருங்கேரி மடத்தை கொள்ளையடித்தது, இந்து காவலர்கள் என (தவறாக) கருதப்படும் மராட்டிய படை. அந்த மடத்துக்கு உதவியது திப்பு சுல்தான்.
தவிர, ஆங்கிலேயரை ஆதரித்தனர் என்பதால், ஆற்காடு நவாப் மீது போர் தொடுத்தவர் திப்பு சுல்தான்.
அவரது மரணத்துக்குப் பிறகு, வாரிசுகள் கொல்கத்தாவில் குடியேறினர். அதே நேரம், தற்போது பெங்களூருவில் வசிக்கும் தொழிலதிபர் மன்சூர் அலி, தான் திப்பு சுல்தானின் ஏழாம் வாரிசு என்கிறார்.
மேலாண்மைப் படிப்பில் பட்டம் பெற்ற இவர், திப்பு சுல்தானின் வாழ்க்கை மற்றும் வரலாறு குறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமூகப்பணிகள் செய்து வருகிறார்.
தெஹ்ரிக்-இ-குதாதாத் என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வரும் இவர், திப்பு சுல்தானின் வரலாறு மற்றும் பங்களிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதாக கூறுகிறார்.(இவர் நேரடி வாரிசு அல்ல என கொல்கத்தாவில் வசிக்கும் திப்பு வாரிசுகள் கூறிவருகின்றனர்.)
“கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மீண்டும் திப்பு ஜெயந்தியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள, திப்பு சுல்தானின் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களை மீட்டு வக்ஃப் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இவற்றை செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தவேன்” என அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில்தான், வரலாற்றுத் தேடலில் ஆர்வம் உள்ள, திரைப்பட இயக்குநர் பார்த்திபன், திப்பு சுல்தான் சமாதிக்கு சென்றதோடு, மன்சூர் அலியை சந்தித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘திப்பு சுல்தான்: பள்ளிப்பாட புத்தகத்தில் படித்தது. அவரது சுடப்பட்ட உடலை தேடிக் கண்டுபிடித்த இடத்தை நேற்று பார்த்தேன். அவரது வம்சாவளி திரு மன்சூர் அலியின் அலைபேசியை நான் தேடிப்பிடித்து அவரோடு பேசினேன்.ஆச்சர்யப்பட்டார்.
“கூட்டம் கூட்டமாக சமாதியை பார்த்துவிட்டுப் போவார்களேத் தவிர, யாரும் என்னிடம் பேசியதில்லை.நீங்கள் முற்றிலும் வேறுபட்டவராக இருக்கிறீர்”என்றார். அவர் குடும்பத்துக்கு உரிய உரிமையைப் பெற அரசாங்கத்துடன் போராடி வருவதாகக் கூறினார். என்னை சந்திக்க சென்னை வருவதாகவும் கூறினார்.
சரித்திர பாட புத்தகத்தின் மடக்கி வைக்கப்பட்ட ஒரு பக்கத்திலிருந்து திப்பு டப்புன்னு என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி “ஒழுங்கா படிக்காமலேயே இதெல்லாம் செய்றீயே? இன்னும் படிச்சிருந்தா?” என பார்த்திபன் குறிப்பிட்டு உள்ளார்.
பார்த்திபனின் தேடல்கள் சுவாரஸ்யமானவை.. அவசியமானவை!
– டி.வி.சோமு

