‘லிப்ட்’ படத்தில் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன்! நடிகை எமோஷ்னல் டாக்
சென்னை; ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம்’ லிப்ட்’. இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி ரெட்டி. இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்ததைத் தொடர்ந்து தற்போது ’லிப்ட்’ படம் தனக்கு இன்னும் சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . இந்தப் படத்தின் கதை திரில்லர் படமாக எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.
இப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,
“இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து டெக்னிக்கல் டீம் வரைக்கும் அனைவருமே மிக நேர்த்தியாக செயல்படக் கூடியவர்கள். முக்கியமாக படத்தின் இயக்குநர் வினித் வரபிரசாத் எங்கள் டீமிற்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செட்டில் துளி குழப்பம் கூட இல்லாமல் பணியாற்றுவார். அவரது திரைக்கதை பல மேஜிக்கைப் படத்தில் நிகழ்த்தும். படம் பார்க்கும் போது அதை நீங்கள் உணர முடியும்.
மேலும் இந்தப்படத்தில் என்னுடைய கதாப்பாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நான் காயத்ரி ரெட்டியாக இல்லாமல் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்டேன். காரணம் அந்தக் கேரக்டரை அவ்வளவு அழகாக வடிவமைத்திருந்தார் இயக்குநர். படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷ்னலாக இருக்கும். நடிக்கும் போதும் டப்பிங் பேசும் போதும் அதை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் ’லிப்ட்’ படம் வெளியான பின் கரியரில் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றார்.
எஸ்.யாழினி சோமு