‘மொத ராத்திரி’: மிஸ் ஆன அது.. ப்ளஸ் ஆன படம்!

‘மொத ராத்திரி’: மிஸ் ஆன அது.. ப்ளஸ் ஆன படம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாக்யராஜ் பாணியிலான நகைச்சுவை, சரியான குடும்ப உணர்வுகள் மற்றும் சமூகக் கருத்தை ஒருங்கிணைத்து வந்திருக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படம் ‘மொத ராத்திரி’.

கதைக்களம்

துபாயிலிருந்து ஊருக்கு வரும் நாயகன் ரிஷிகாந்திற்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்யக் குடும்பத்தினர் முடிவு செய்கிறார்கள். ஆனால், அவருக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. மறுபுறம், மணப்பெண்ணான நாயகி அனிஷ்மாவுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. முதல் இரவுக்கு முன்பாகத் தன் காதலனோடு ஓடிப்போக அவர் திட்டம் தீட்டுகிறார். ஆனால், அந்தக்காதலன் ஒரு மங்குனி இளைஞனாக இருப்பது கதையின் நகைச்சுவையான திருப்பம். இந்த அமளிதுமளிக்கு நடுவே அந்த முதல் இரவு என்ன ஆனது என்பதைச் சுவாரஸ்யமாகவும் சுடச்சுடவும் சொல்கிறது திரைக்கதை.

நடிப்பும் கதாபாத்திரங்களும்

கதைக்குத் தேவையான இயல்பான நடிப்பை வழங்கித் தனக்கான இடத்தை ரிஷிகாந்த் கச்சிதமாகத் தக்கவைத்துக்கொள்கிறார். நாயகி அனிஷ்மா ‘ஒன் வுமன் ஆர்மி’யாக நின்று படம் முழுவதும் மாஸ் காட்டியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது துடிப்பான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். அப்துல் லீ, வெங்கடேஷ், பக்ஸ், சேத்தன் எனப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு துணைக்கதாபாத்திரங்களும் அளவான, நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் ராஜா கருப்பசாமி தன் பங்களிப்பில் அசத்தியுள்ளார்.

இசையும் ஒளிப்பதிவும்

கதையின் ஓட்டத்தையும் உணர்வுகளையும் சரியாகப் புரிந்து கொண்டு இசையமைத்துள்ளார் பரத் சங்கர். பாடல்கள் ரசிக்கும்படியும், பின்னணி இசை காட்சிகளின் தன்மையை உயர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்ஜோதியின் நேர்த்தியான ஃபிரேமிங் தென்மாவட்டப் பின்னணியைக் கண்முன்னே அழகாகக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

இயக்கம் மற்றும் மேக்கிங்

தென்மாவட்டப் பின்னணியில் கதையை அமைத்து, ‘மொத ராத்திரி’ என்ற தலைப்பை வைத்துக்கொண்டு எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்தோடு ரசிக்கும்படி படத்தைக் கொண்டு சென்றதில் இயக்குநர் ராஜா கருப்பசாமி ஜெயிக்கிறார். கிராமங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிவெறி, வர்க்கப் பாகுபாடு ஆகிய அழுத்தமான சமூகப் பிரச்சினைகளைப் படத்தின் போக்கில் திணிப்பு எதுவுமில்லாமல் சரியாகப் பேசியிருப்பது இயக்குநரின் மு மு மு முத்திரை!

மொத்தத்தில்…

இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சிறிய வேகத்தடை இருந்தாலும், கலகலப்பான நகைச்சுவை, அளவான உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் என அரங்கைச் சிரிக்க வைக்கும் அம்சங்கள் இதில் ஏராளம்.

மொத ராத்திரியின் முக்கிய விசயம் மிஸ் ஆகி இருக்கிறது.. ஆனால் படம் முழுக்க கலகல சிரிப்பு, குடும்பத்தினர் பாசம், மோதல்.. என ஜாலி ப்ளஸ்கள்தான்.

திரையரங்கிலும் சரி, குடும்பத்தோடு பார்க்கும்போதும் சரி, ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்கு விருந்தாக அமைந்திருக்கிறது இந்த ‘மொத ராத்திரி’. தைரியமாக நம்பிச் செல்லலாம்!

Related Posts