தாய்நிலம்: ஈழத் தமிழரை ஏதிலி ஆக்கியோர்.. ஏதிலியாகவே வைத்திருப்போர் பார்க்க வேண்டியப டம்!யும் மனித நேயத்தையும் பேசும் மாற்று சினிமா!
இலங்கைத் தீயில் மூண்ட போரின் கோரத்தாண்டவம் விட்டுச்சென்ற வடுக்கள் எத்தனை? உடமைகளையும் சொந்த மண்ணையும் தொலைத்துவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ராமேஸ்வரம் கடற்கரையில் அகதிகளாக வந்து இறங்குகிறார்கள் சேதுராமனும் அவரது அன்பு மகள் தமிழினியும்! புதிய பூமி, அறிமுகமில்லாத மனிதர்கள், மூச்சுமுட்டும் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்து நகரும் சவால்களை எதிர்கொண்டு, இந்தத் தந்தை-மகள் ஜோடி எப்படித் தங்களது வாழ்வைத் தொடங்குகிறது? அவர்கள் எதிர்பார்க்கும் அரவணைப்பும் சுதந்திரக் காற்றும் கிடைத்ததா? இந்தக் கேள்விகளுக்கான அழுத்தமான பதில்களைத் தேடித் தருகிறது இந்தத் திரைப்படம்.
நடிகர்களின் பங்களிப்பு:
-
சேதுராமனாக மிரட்டியுள்ளார் மலையாள நடிகர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மகள் மீதான அளவிலா பாசம், இழந்த மண்ணின் ஏக்கம், எதிர்காலம் குறித்த பயம் என அத்தனை கனமான உணர்வுகளையும் வெறும் கண்கள் மூலமே கடத்தி வியக்க வைக்கிறார்; உடல்மொழியும் அச்சு அசலாகப் பொருந்துகின்றது.
-
போரின் கோர முகத்தை நேரடியாகப் பார்த்த சிறுமியாகக் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் தனது துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் சிறுமி குருதஷினா (தமிழினி).
-
உடன் நடித்துள்ள நேகா அமர், நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன், பத்மஜா, தளபதி ஆனந்த் மற்றும் சரவணன் உள்ளிட்டோரின் பங்களிப்பு படத்திற்கு எதார்த்தமான பலம் சேர்த்துள்ளது.
-
குறிப்பாக, ஆட்டோ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொள்ளும் காட்சி, மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையேயான சில நொடிகளில் உணரும் தவிப்பு, புறந்தள்ளப்பட்ட உலகில் மகளுடன் சோகமாக நடந்து செல்லும் தருணம், மின் கம்பத்தில் சாய்ந்து மகளுடன் நிற்கும் காட்சி என ஒவ்வொன்றும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவு :
பிரசாந்த் பிரணவத்தின் கேமரா ஒட்டுமொத்தப் படத்திற்கும் ஒரு தனித்துவமான ஆன்மாவைத் தந்துள்ளது. ராமேஸ்வரத்தின் அழகிய கடற்கரைப் பகுதிகள் ஒருபுறம் கண்களுக்கு விருந்தாக, அகதி முகாம்களின் இறுக்கமான சூழல் தரும் வலி மறுபுறம் மிரட்டுகிறது; கடலோர மற்றும் மலைக் காட்சிகளும், ஆளில்லா சாலையில் தந்தை-மகள் சைக்கிளில் செல்லும் காட்சியும், பனை மரங்களுக்கு இடையே நாயகன்-நாயகி வலம்வரும் லென்சுக்களும் மனதை ஈர்க்கின்றன.
இசை:
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஔசேப்பச்சனின் பின்னணி இசை அகதிகளின் அவல நிலையை அப்படியே உள்வாங்கி நம் இதயத்தைத் தொடுகிறது. ‘வாடா என் செல்லக்குட்டி’, ‘தலைவாரி பூச்சூடி’, ‘நான்கு திசையிலும்’, ‘ஆகாயம் மேலே’ போன்ற கவிஞர் தாமரை உள்ளிட்டோர் எழுதிய பாடல்கள் நேசம், ஏக்கம், உற்சாகம் என மாறி மாறி உணர்வுகளின் கலவையாக நம்மைத் தாலாட்டிச் செல்கின்றன.
இயக்கம்: அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் (மூத்த இயக்குநர் ஐ.வி.சசியின் பட்டதாரி!), போரின் கொடூரமான குண்டுவெடிப்புகள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வன்கொடுமைகள் போன்ற காட்சிகளைப் பெரிதாகக் காட்டிக்கொண்டிருக்காமல், சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெறும் அளவிற்குத் தந்தை – மகள் உறவின் ஆழம் வழியாகவே மனித நேயத்தைப் பேசியிருக்கிறார். தாய்நிலம் பறிபோன வலியின் கண்ணீர் சாட்சியாக இப்படம் உருவெடுத்துள்ளது.
ஃபைனல் கமெண்ட்: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்து வரும் இந்த ‘தாய்நிலம்’, வெறும் அகதிகளின் கதையல்ல; மனிதாபிமானமிக்க ஒவ்வொரு மனிதரும், உலக சினிமாக்களைத் தேடித் தேடிப் ரசிக்கும் ரசிகர்களும் கட்டாயம் பார்த்துத் தவறவிடக் கூடாத ஒரு அற்புதம்!

