“பல தயாரிப்பாளர்கள் ‘பத்தா’ கதையை நம்பவில்லை!”: வெற்றி விழாவில் உடைத்த விஜய் சேதுபதி!

“பல தயாரிப்பாளர்கள் ‘பத்தா’ கதையை நம்பவில்லை!”: வெற்றி விழாவில் உடைத்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், அட்லீ வழங்க  ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

விஜய் சேதுபதி::

“இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். படம் எடுத்துவிட்டு உங்களிடம் காட்டிவிட்டு காத்திருப்பது, மனைவியைப் பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும். நீங்கள் மலர்ந்த முகத்துடன் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்தது போல் மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை, அட்லீதான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான், அதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால், ‘பத்தா’ என்பது வெறும் அடிதடிப் படம் அல்ல; மனதில் உள்ள உண்மையான உணர்வுகளைச் சொல்லக்கூடிய படம். இதில் நடிக்கும்போது சிறுவன் சாய் உடன் நான் சரியாகப் பேசவோ பழகவோ இல்லை. ஏனென்றால் அவன் எனக்குப் பயந்த மாதிரி நடிக்க வேண்டும்; சகஜமாகிவிட்டால் அது மாறிவிடும் என்று இறுக்கமாக இருந்தேன். அவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறான். அவனுக்குப் பெரிய புகழ் வந்திருக்கிறது, ஆனால் திசை மாறிச் சென்றுவிடாமல் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அவனிடம் தொடர்ந்து சொல்வேன். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என்றார்.

சிறுவன் சாய் பேச்சு:

“இது எனக்கு முதல் படம் மற்றும் முதல் பயணம். படப்பிடிப்பின் போது பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருந்தது. செட்டில் அங்குமிங்கும் நான் திரிந்து கொண்டிருந்தாலும், அந்த அறுபது நாட்களும் என்னை அனைவரும் மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர். இயக்குநர் என்னை அழகாக நடிக்க வைத்தார். சேது சார் உடன் நடிக்கும் போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் கேமராவிற்கு முன் நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் பயந்து கொண்டே நடித்தேன். ஆனால் சேது சார் ஒரு நண்பரைப் போல பழகினார்; ஜாலியாக இருந்தார். சில நேரம் திட்டியிருந்தாலும், நன்றாகப் படிக்க வேண்டும் என்று என்னை எப்போதும் அரவணைத்துக் கொண்டே இருப்பார்” என்று கலகலப்பாகப் பேசினான்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன்: “என்னிடம் இல்லாத நேர்நிலை எண்ணம் அட்லீயிடம் அதிகம் உள்ளது. விஜய் சேதுபதி இயக்குநர்களின் நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சாய் அப்யங்கர் தனது இசையால் படத்திற்குப் புதிய உயரத்தைத் தந்துள்ளார்” என்றார்.

தயாரிப்பாளர் அட்லீ: “விஜய் சேதுபதி நல்ல மனிதர், அவரை இந்தியா முழுக்க இன்னும் மேலே கொண்டு செல்வேன். சாய் அப்யங்கர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக மாறுவார். மக்கள் தேடிச் சென்று கொண்டாடும் அளவுக்கு இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் சாய் அப்யங்கர்: “ஆரம்பத்தில் இயக்குநர் என்னை நம்பவில்லை என்றாலும், ஒவ்வொரு பாடலின் மூலமும் என் திறமையை நிரூபித்தேன். சேது அண்ணாவும் லிஜோ அக்காவும் அற்புதமாக நடித்திருந்தனர்” என்றார்.

கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ்: “கன்னிமா பாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதில் பெருமை. விஜய் சேதுபதியுடன் பணியாற்றியது ஒரு மேஜிக் போன்ற அனுபவம்” என்றார்.

  • ஒளிப்பதிவாளர் செல்வகுமார், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ், பாடலாசிரியர் கரன் கார்க்கி மற்றும் சக நடிகர்களும் தங்களது அனுபவங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டனர்.

சினிமாவின் வணிகத்தைத் தாண்டி, மனித உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள ‘பத்தா’ படத்தின் இந்த வெற்றிச் சந்திப்பு கோலாகலமாக நிறைவடைந்தது.