‘ராம் அண்ட் லீலா’: விமர்சனம்: ராம், ராமி! லீலா, லீலன்!
காதலும் நகைச்சுவையும் கலந்து கட்டி அடிக்கும் ‘ரொம்காம்’ ஜானரில், இளமைத் துள்ளலோடு வந்திருக்கும் ஒரு கலக்கலான திரைப்படம் தான் ‘ராம் அண்ட் லீலா’. அதே மாதிரி, எதிர்பாராத டபுள் ட்விஸ்ட் இருக்கிறது. அதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்..!
கதைக்களம்
ஒரு வழக்கமான காதல் கதையாகத் தொடங்கி, டிரெய்லரில் கூட வெளிப்படுத்தப்படாத ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் திருப்பத்தோடு (நகர்வது தான் படத்தின் முக்கியக் கரு. எதிர்பாராத அந்த ஒரு திருப்பம், கதையின் போக்கை அப்படியே மாற்றி, பார்வையாளர்களுக்குச் செம சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.
நடிப்பு
நாயகனாக நடித்திருக்கும் ரியோ ராஜ், தனக்கே உரித்தான இயல்பான பாணியிலும் டைமிங் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். ‘விசயம்’ தெரிந்த பிறகு, நண்பனிடமும், காதலியிடமும் அவர் பேசும் முறை, முகபாவம் கூடுதலாக ரசிக்க வைக்கிறது.
புதுமுக நாயகியாக அறிமுகமாகியுள்ள வர்திகா ஜைன், துடிப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அழகிலும் ஈர்க்கிறார். ரியோ – வர்திகா இருவருக்குமிடையேயான அந்த ஆன்-ஸ்கிரீன் ‘கெமிஸ்ட்ரி’ படம் முழுக்க செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இருவருக்கும் இடையே வரும் சுவாரஸ்யமான மோதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களைச் சிரிக்க வைக்கின்றன.
இசை
படத்திற்குப் பெரிய பலம் இசையமைப்பாளர் அங்கித் மேனன்! கதையின் கலகலப்பான மூடைத் தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். பாடல்கள் காதுகளுக்கு இனிமையாகவும், பின்னணி இசை ஒவ்வொரு நகைச்சுவை மற்றும் காதல் காட்சிகளின் எமோஷனை அழகாக உயர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இயக்கம்
அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கருப்பொருளைக் கையில் எடுத்துத் துணிச்சலாக ஜெயித்திருக்கிறார். கதையின் சர்ப்ரைஸ் திருப்பத்தைக் கையாளும் விதத்திலும், படம் முழுக்க எங்கும் தொய்வில்லாமல் நகைச்சுவைத் தருணங்களை அடுக்க அடுக்காக அமைத்த விதத்திலும் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார்.
மொத்தத்தில்…
படத்தின் ஒட்டுமொத்தப் பாசிட்டிவ் எனர்ஜியும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும் தான் இதன் மிகப்பெரிய பிளஸ்! எந்தவிதச் சலிப்பும் இல்லாமல், தியேட்டருக்கு வரும் ரசிகர்களை முழுமையாக அட்ராக்ட் செய்யும் ஒரு பக்காவான ‘ஃபன் ரைடு’ (Fun Ride) இந்த ‘ராம் அண்ட் லீலா’!

