மாஸ்!: ஸ்டேஜில் இயக்குநர் பேரரசு என்ன செய்தார் தெரியுமா?!
ஶ்ரீ சித்ரா பௌர்ணமி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிக்க, சகாயநாதன் இயக்கி உள்ள திரைப்படம், ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்துக்கு, சிற்பி பின்னணி இசை அமைக்க, டி.எஸ். முரளிதரன் மூன்று பாடல்களுக்கு இசை அமைத்து உள்ளார். ‘தொலைந்து போனாளே..’ என்ற பாடலுக்கு கணேஷ்ராம் பி.எஸ்., இசை அமைத்து உள்ளார்.
இன்று படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “விஷால் நடித்த முதல் படமான, செல்லமே பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. அதுபோல இந்த செல்ல குட்டி படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பின்னணி இசை அமைக்க ஒப்புக்கொண்ட சிற்பி அவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
காட்சிகளை ஸ்பீடா சொல்றது மேக்கிங் இல்லை… நல்லா பண்ணனும்! நாம பீல் செய்யறதை மக்களும் உணரணும்! அழற மாதிரி சீன்ல மக்கள், அடப்போயானு இருந்தா பயனில்லை. இந்த பத்தில உணர்வுகளை சரியா கடத்தி இருக்காங்க… இயக்குநருக்கு வாழ்த்துகள். டிரெய்லரும் நன்றாக உள்ளது” என்று படக்குழுவினரை வாழ்த்தினார்.மேலும், “அன்று பணக்காரர்கள் படம் எடுத்தார்கள். அதை ஏழைகள் பார்த்து மகிழ்ந்தார்கள். இன்றோ படம் எடுத்த பின் தயாரிப்பாளர்களே ஏழைகள் ஆகிவிடுகிறார்கள். இதுதான் இன்றைய சினிமா உலகின் நிலை!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்! கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்தாலும், அவர் நம்முடன் நடிகராக பயணித்தவர். நமக்கு அவரை நடிகராகத்தான் அறிமுகம். அந்த நடிகர் துணை முதலமைச்சர் ஆகி இருப்பது நமக்கு மகிழ்ச்சி.!
இசையமைப்பாளர் கணேஷ்ராம் பி.எஸ்.( வலது ஓரம்)
இப்போ இருக்கிற தியேட்டர்கள்ல ஜிஎஸ்டி உள்ளிடட வரிகளை குறைக்க முடியாது! ஏழைகள் பார்க்கிற மாதிரி தியேட்டர்கள் வேணும். அது குறித்து உதயநிதி அவர்களிடம் பேச வேண்டும். அம்மா உணவகம ்போல… ஏழைகள் படம் பார்க்க தியேட்டர்கள் வேணும்” என்றார் பேரரசு.
இதற்கிடையே, படத்தில் இடம் பெற்ற பாடல்கள் குறித்து பேசினார். அப்போது, “இங்கே திரையிடப்பட்ட, ‘தொலைந்து போனாளே..’ பாடல் சிறப்பா இருக்கு. அந்த பாடலைக் கேட்கும்போது, ‘அவள் பறந்து போனாலே… எனை மறந்து போனாளே..’ என்ற பாடலுக்கு மனசு போகுது. ‘இது மாதிரி வேணும்’னு டைரக்டர் கேட்டு இருப்பாரு.. அந்த பாட்டை இசை அமைத்த கணேஷ்ராமுக்கு வாழ்த்துகள்” என்று மேடையில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்தார் பேரரசு.
மேடையில் கணேஷ்ராம் இல்லை. கூட்டத்தில் இருந்த இசையமைப்பாளர் கணேஷ்ராம் எழுந்து நின்று பேரரசுக்கு நன்றி கூறினார்.
உடனே பேரரசு, “விழா நாயகன் நீங்கதான்.. நாங்க ஏன் இங்க மேடையில உக்காந்துகட்டு..” என்றார்.
இசையமைப்பாளரை அழைக்க மறந்த – மேடையில் இருந்த – தயாரிப்பாளரும் படக்குவினரும், “அடடா மறந்துட்டோமே” என்கிற மாதிரி திடுக்கிட்டனர்.
இசையமைப்பாளர் கணேஷ்ராம் தயங்க, “அட வாங்க” என்று அன்புடன் அதட்டி அழைத்தார் பேரரசு.
இதையடுத்து மேடை நோக்கிச் சென்றார், கணேஷ்ராம்.
உடனே பேரரசு, “கணேஷ்ராமுக்கு கைதட்டிருவோம்” என்று சொல்ல… அரங்கமே அதிர்ந்தது.
மேடைக்கு வந்த இசையமைப்பாளர் கணேஷ்ராமை தயாரிப்பாளர் அழைத்து, அமரைவைத்தார்.
அந்த இசையமைப்பாளருக்கு – கலைஞனுக்கு – உரிய அங்கீகாரத்தை அளித்தார் பேரரசு. அவரது இந்த செயல், கூட்டத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பேரரசின் நல்ல மனதை நாமும் பாராட்டுவோம்!
– டி.வி.சோமு