தியாகி அஞ்சலை அம்மாளின் மகன் தியாகி ஜெயவீரனுக்கு பென்ஷன் மறுப்பு!

தியாகி அஞ்சலை அம்மாளின் மகன் தியாகி ஜெயவீரனுக்கு பென்ஷன் மறுப்பு!

நாளை மறுநாள் (அக். 27) நடிகர் விஜயின்,த.வெ.கழக மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டு திடலில், சுதந்திரப்போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அறியாத பலரும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள்; அன்னை அஞ்சலை அம்மாளின் தியாகத்தை போற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

(அந்த அம்மையாரின் தியாகத்தை அறிய:  https://tamilankural.com/anjalai-ammal-vijay-maanadu-vijays-plan-to-bend-the-people-of-vanniar/)

இப்படி அறிந்துகொள்வது நல்ல விசயம்தான்.

அதே நேரம், அஞ்சலை அம்மையாரின் மகன்களில் ஒருவர், அவரும் சுதந்திரபோராட்ட தியாகிதான்… அவர் தியாகி பென்சன் கேட்டு விண்ணப்பித்தும் மறுக்கப்பட்ட சோகம் தெரியுமா?

அஞ்சலை அம்மாள் -முருகப்பா இணையருக்கு அம்மாக்கண்ணு, காந்தி, ஜெயவீரன், கல்யாணி உள்ளிட்ட ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

இவர்களில் 1931ல் பிறந்த ஜெயவீரன் அவர்களுக்கு தனிச் சிறப்புகள் உண்டு.

கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள், சுந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரசவ நாள் நெருங்கவே..பரோலில் வெளியில் வந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்தார். அடுத்த பதினைந்தாவது நாள்.. கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார்.

அப்படி ஒரு வீரப்பெண்மணி அவர்!

சிறையில் இருந்து பரோலில் வந்து பெற்றெடுத்த மகன் என்பதால், குழந்தைக்கு “ஜெயில் வீரன்” என்று பெயர் சூட்டினார். பிறகு அந்த குழந்தை ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டது.

1933 ஆம் ஆண்டில் அந்நியத் துணி எதிர்ப்புப்போராட்டத்தின் போது அஞ்சலை அம்மாளுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அப்போதும், கைக்குழந்தையாக இருந்த ஜெயவீரனுடன் தான் வேலூர் சிறைக்குச் சென்றார்.

தன் குடும்பத்தைவிட நாட்டின் விடுதலையே முக்கியம் என்று ஓயாது போராடியவர் அஞ்சலை அம்மாள். தனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்றும் அடகு வைத்தும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களுக்கு அளித்தவர்.

பலரும் சொல்லியும், சுந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதற்கான தியாகிகள் பென்சன் பெற அவர் விண்ணப்பிக்கவே இல்லை.

குழந்தைப் பருவத்திலேயே சிறை புகுந்த ஜெயவீரனும் இதை விரும்பவில்லை.

ஆனால் ஒரு கட்டத்தில் வறுமை பிடித்தாடியது. தியாகிகள் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, ஜெயவீரனுக்கு தியாகிகள் உதவித்தொகை மறுக்கப்பட்டது.

அந்த நிலையிலேயே கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, 89ம் வயதில் மறைந்தார்.

அவருக்கு புகழஞ்சலி செலுத்திய சி.பி.எம். கட்சியின் கே.பாலகிருஷ்ணன், பென்சன் மறுக்கப்பட்ட சம்பவத்தையும் சொல்லி வருந்தி இருந்தார்.

நாட்டிற்கு உழைத்தோருக்கு நாம் காட்டும் மரியாதையை நினைத்தால்… நெஞ்சு பொறுக்குதில்லையே!

– டி.வி.சோமு

Related Posts