வன்னிய மக்களை வளைக்க விஜய் போடும் திட்டம்?!

நாளை மறுநாள் ( அக்.27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது.
மாநாட்டின் ஒவ்வொரு விசயமும் பேசுபொருள் ஆகி இருக்கிறது. அதில் ஒன்று, அங்கே இடம் பெற்று இருக்கும் சுந்திரப்போராட்ட தியாகி அஞ்சலை அம்மா கட் அவுட்!மாநாட்டில் தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் ஆக்யோரின் பிரம்மாண்டமான கட் அவுட்களும் இடம் பெற்றுள்ள நிலையில், அஞ்சலை அம்மாளின் கட் அவுட் மட்டும் பேசுபொருள் ஆகி இருப்பது ஏன்?
மறக்க முடியாத – கூடாத தியாகி அஞ்சலை அம்மாள்!
மாநாட்டில் கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கும் பிற ஆளுமைகள் குறித்து பரவலாக அறிவோம். ஆனால் அஞ்சலை அம்மாள் பற்றி பலருக்கும் தெரியாதது சோகம்தான்.
அப்படிப்பட்ட உயர்ந்த ஆளுமை அவர்!
இவர், கடலூர் மாவட்டத்தில் 1890ல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அஞ்சலை அம்மாள், சிறு வயதிலேயே, அக்கால அரசியலையும் ஆங்கிலேயரின் அடக்குமுறையும் நன்கு அறிந்துவைத்து இருந்தார்.
1908ல் முருகப்பா என்பவரை திருமணம் செய்த அஞ்சலை அம்மாள் கணவரின் ஆதரவோடு சுதந்திரப்போராட்ட களத்தில் துணிந்து முன் நின்றார்.
ஆம்.. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி நெசவுப்பணியை மேற்கொண்ட அஞ்சலை அம்மாளும் அவரது கணவர் முருகப்பாவும், காங்கிரஸ் கட்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். தாங்கள் நெசவு செய்த துணிகளையும் தந்தை பெரியாருடன் சென்று ஊர் ஊராக விற்பனை செய்தனர். ( அப்போது தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார்.)
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் – 1921ம் ஆண்டு – இணைந்து போராட்டத்தில் களம் இறங்கினார் அஞ்சலை அம்மாள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது சிப்பாய்களையும் பொதுமக்களையும் கொன்று குவிக்க காரணமாக இருந்தவர், ஆங்கிலேயே படைத்தளபதி ஜேம்ஸ் நீல். சென்னை மவுண்ட் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது. இதிலும் அஞ்சலை அம்மாள் – முருகப்பா தம்பதி தங்களின் மகளுடன் பங்கேற்றனர். அந்த சத்தியாகிரகத்தில் நீல் சிலையை உடைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார் அஞ்சலை அம்மாள்.
கர்ப்பிணியாக இருந்த போது உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று 6 மாதம் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார், அஞ்சலை அம்மாள். நிறை மாத கர்ப்பிணியான அஞ்சலை அம்மாள், சிறை விடுப்பில் வெளியே வந்து குழந்தை பெற்றார். பின்னர் 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்கு சென்றார்.
பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அஞ்சலை அம்மாள் பலமுறை கடுங்காவல் தண்டனையும் பெற்றுள்ளார்.
அஞ்சலை அம்மாளின் வீரத்தையும் தீரத்தையும் கண்டு வியந்த காந்தியடிகள் அவரை தென்னாட்டு ஜான்சி ராணி என புகழ்ந்தார்.
1937, 1946, 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.தன்னுடைய பதவிக்காலத்தில் கடலூர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார் அஞ்சலை அம்மாள்.
காங்கிரஸ் கட்சிக்காக தனது வீடு உள்ளிட்ட சொத்துக்களை விற்று செலவழித்தவர் அவர்.
தனது இறுதிக்காலத்தில், சிதம்பரம் அடுத்துள்ள சி. முட்லூர் என்ற சிற்றூரில் தனது மூத்த மகன் காந்தியுடன் குடியேறி வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அதே ஊரில் 20 பிப்ரவரி 1961 அன்று தன் 71-ஆம் அகவையில் காலமானார்.அஞ்சலை அம்மாளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் இன்றைய மாநிலச் செயலாளருமான கே. பாலகிருஷ் ணன் கோரிக்கை விடுத்தார். 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், செங்கற்பட்டு தொகுதி திமுக பெண் உறுப்பினர் வரலட்சுமி ஆகியோரும் இதே கோரிக் கையை முன்வைத்து பேசினர்.
இதையடுத்து 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் முதுநகர் காந்தி பூங்காவில் அரசு சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில், அஞ்சலை அம்மாள் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.
பேசுபொருள் ஆனது ஏன்?
விஜய் மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட் அவுட் வைக்கப்பட்டு உள்ள நிலையில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்
சி.என்.இராமமூர்த்தி, வெளியிட்ட ஒரு போஸ்டரில் ‘வன்னியர் குல கடலூர் அஞ்சலை அம்மாள்’ என்று குறிப்பிட்டு உள்ளதை சிலர் பகிர ஆரம்பித்து உள்ளனர்.
இதையடுத்து, “மாநாடு நடப்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில். இந்தப் பகுதியில் வன்னிய இன மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். அஞ்சலை அம்மாள் வன்னிய இனத்தைச் சேர்ந்தவர். ஆகவே, அப்பகுதி வன்னிய இன மக்களின் ஆதரவைப் பெறவே அஞ்சலை அம்மாள் கட் அவுட் வைக்கப்பட்டதோ என்கிற கேள்வி எழுகின்றது” என்கிற பேச்சு எழுந்துள்ளது.
இப்படி கேள்வி எழுப்புபவர்கள், “திமுகவைத்தான் விஜய் டார்கெட் செய்ய இருப்பதாக பலரும் யூகிக்கிறார்கள். ஆனால் அவர் பாமகவை – பாமகவையும் குறிவைக்கிறார் என்றே தோன்றுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி கொடியில் உள்ள சிவப்பு, மஞ்சள் ஆகியவற்றை தனது கட்சி கொடியிலும் வைத்தார் விஜய். தவிர, பாமக என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் மட்டுமல்ல… யானையும்தான். முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் – 1991ல் – யானை சின்னத்தில் போட்டியிட்டே பாமக வென்றது. வென்ற வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை யானையில் ஏற்றி சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆகவே பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே யானை என்பது மறக்க முடியாத குறியீடு. அதையும் தனது கொடியில் வைத்து இருக்கிறார் விஜய்” எ்கிறார்கள்.
அப்படி இல்லை!
இது குறித்து விஜயின் தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். அவர்களில் பலர் பேச மறுக்க, சிலர் தயங்கித் தயங்கி – ஆனால் உறுதியான தொனியில் – பேசினர்.
அவர்கள், “எங்கள் தலைவர் தளபதி அவர்கள், சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவர். சமுதாயத்துக்காக உழைத்த தலைவர்களை முன்னோடியாக வைத்து இயக்கம் நடத்த விரும்புகிறார். எங்களையும் அப்படியே வழி நடத்த திட்டமிட்டு உள்ளார். அதன் வெளிப்பாடுதான் மாநாட்டில் தலைவர்களுக்கு கட் அவுட்கள் வைக்கக் காரணம். நிச்யமாக இதில் சாதி உள்ளிட்ட எந்தவித சுயநல அரசியலும் கிடையாது” என்றனர்.
மேலும், “எங்கள் மாநாட்டில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ள தலைவர்களில், தந்தை பெரியார் தவிர அண்ணல் அம்பேத்கர், கர்ம வீரர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரையும் சாதி வட்டத்தில் அடைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியது இல்லை” என்றனர்.
மேலும், “கொடின் நிறம், யானை இருப்பது.. ஆகியவற்றுக்கு முக்கிய காரணங்கள் உண்டு. அதை மாநாட்டில் தளபதி விளக்குவார்” என்றனர்.
அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள்?
அரசியல் நோக்கர்கள், “எல்லோருக்கும் பொதுவான தலைவர்களை, சிலர் தங்கள் சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்துவது காலம் காலமாக நடப்பதுதான். அஞ்சலை அம்மாளுக்கு சிலை வைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் குரல் கொடுத்த கே.பாலகிருஷ்ணன், சாதி மதம் கடந்த கம்யூனிஸ்ட். அதே போல குரல் கொடுத்த – இவர் அஞ்சலை அம்மாளின் கொள்ளுப்பேரன் – சாதி, மதம் கடந்த பெரியாரிஸ்ட்.
தவிர, அனைவருக்கும் பொதுவான, அனைவரும் போற்றும் அஞ்சலை அம்மாளை குறுகிய வட்டத்தில் யாராலும் அடைக்க முடியாது” என்கின்றனர்.
ஆம்.. அனைவருக்குமாக போராடிய வீரப்பெண்மணி அஞ்சலை அம்மாள் அவர்களை அனைவரும் போற்றுவோம்!
– டி.வி.சோமு