“அமைதியான முறையில் திரையிடப்படுகிறது ‘ஒற்றைப் பனை மரம்’!”: படக்குழு அறிவிப்பு!

“அமைதியான முறையில் திரையிடப்படுகிறது ‘ஒற்றைப் பனை மரம்’!”: படக்குழு அறிவிப்பு!

RSSS பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரிக்க, புதியவன் இராசையா இயக்கி, கதை நாயகனாக நடிக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’ இன்று தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் கதைக்களம் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பித்து, சமகால சூழலைச் சொல்கிறது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக புதியவன் ராசையா, அஜாதிகா புதியவன், நவயுகா, மாணிக்கம் ஜெகன்,தனுகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.படத்திற்கு அஷ்வமித்ரா, தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே கொண்டு இசை அமைத்திருக்கிறார்.

சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும். தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

40 சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றிய இந்தத் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 க்கும் மேற்பட்ட விருதுகளை வாரிக் குவித்துள்ளது.

இத்திரைப்படம், அக்.25 (இன்று) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ஈழப் போராட்டத்துக்கு எதிராக படம் இருப்பதாக பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர் கூறினார்கள். ஆகவே இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை வைப்பதாகவும், மீறி திரையிட்டால் திராயரங்கு முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழ்நாடு முழுதும் ஒற்றைப் பனை மரம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இது குறித்து படக்குழுவினர், “திருவண்ணாமலை உள்ளிட்ட சில திரையரங்குகளில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். தமிழ்நாடு முழுதும் அமைதியான முறையில் படம் திரையிடப்பட்டுக்கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்து உள்ளனர்.