‘மக்கள் காவலன்’: அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாமானியன்: மணிகண்டனின் மாஸ்  அவதாரம் !

‘மக்கள் காவலன்’: அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாமானியன்: மணிகண்டனின் மாஸ்  அவதாரம் !

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் அடுத்த அதிரடிப் படைப்பாக “மக்கள் காவலன்” திரைப்படம் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது!

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ எனத் தொடர் வெற்றிப் படங்களால் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள கே. மணிகண்டன், தன் திரைப்பயணத்திலேயே முதன்முறையாக இந்த படத்தில் தான் முழுநீள மாஸ் ஆக்‌ஷன் நாயகனாக அவதாரம் எடுக்கிறார்!

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், நேர்மையாக வாழத் துடிக்கும் ஒரு சாமானியன், ஊழல் நிறைந்த அதிகார அமைப்பை எதிர்த்து எப்படி மக்களின் தலைவனாக உருவெடுக்கிறான் என்பதை விறுவிறுப்பான ஆக்‌ஷன் டிராமாவாகப் பேசுகிறது.

மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், சபுமோன், திவ்யா ஸ்ரீபாதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

“ரசிகர்களின் மனதைத் தொடும் வலுவான கதைகளை வழங்குவதே எங்களின் நோக்கம். மணிகண்டனின் இந்தப் புதிய அவதாரம் திரையரங்குகளில் பெரிய வரவேற்பைப் பெறும்” என பிர்லா ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் பேசுகையில், “தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் இயக்குநர் சந்தோஷ் குமாரை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். மணிகண்டனின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய தூணாக இருக்கும்” என்றனர்.

படத்தைப் பற்றிப் பேசிய நாயகன் மணிகண்டன், “இது கலாச்சார மற்றும் இன மோதல்களைப் பேசும் ஒரு புதுமையான ஆக்‌ஷன் டிராமா. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது” என்று உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

தான் நேரில் கண்ட அனுபவங்களின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதையை உருவாக்கியதாகக் கூறியுள்ள இயக்குநர் சந்தோஷ் குமார், தனது முதல் படத்திலேயே நம்பிக்கையளித்த தயாரிப்பாளர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்!