போட்டோகிராபர்: விமர்சனம்
விஞ்ஞானத்தையே விழிபிதுங்க வைக்கும் ரகசியங்கள், நடுநடுங்க வைக்கும் பேய்த்தனமான பின்னணி, அதிர வைக்கும் திகில் திருப்பங்கள் எனப் பழகிப்போன பாணியிலேயே பயணித்து, ஆங்காங்கே சில புதுமைகளை புகுத்த முயன்றிருக்கிறது இந்த ‘போட்டோகிராபர்’.
புகைப்படக் கலையில் தீராத ஆர்வம் கொண்ட வீரா என்ற வாலிபன், அடியெடுத்து வைத்தால் உயிருடன் திரும்பவே முடியாது எனக் கூறப்படும் ஒரு கொடுங்காட்டுக்குள் அரிதான காட்சிகளைத் தன் கேமராவில் சிறைபிடிக்கப் புறப்படுகிறான். ஆனால், அங்கு சென்றதும்தான் தெரிகிறது, அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே புதிராக இருக்கிறது என்று. நுழைந்த தடம் எது, வெளியேறும் வழி எதுவெனத் தெரியாமல் தவிக்கிறான். குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இன்றி உடலாலும் மனதாலும் சிதைந்துபோகிறான். அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலிருந்து அவன் மீண்டு வந்தானா இல்லையா என்பதுதான் கதையின் எஞ்சிய பகுதி…
உண்மையிலேயே விமான ஓட்டியாக ஆகாயத்தில் வலம் வந்த அஷ்ரப், இப்படத்தை இயக்கி, நாயகனாக அவதாரமெடுத்துக் காட்டுக்குள் வலம் வருகிறார். அடர்ந்த வனத்தின் பயம், அசாதாரண நிகழ்வுகள் தரும் அச்சம், பெற்றவள் மீதான பாசம் எனப் பலவிதமான உணர்வுகளைத் தனது நடிப்பில் சுமாராகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனுக்குச் ஜோடியாகச் சில காட்சிகளில் தலைகாட்டுகிறார் ஜனனி சமாதானம். தகப்பனாக ஆடுகளம் நரேன், நண்பனாக கருணாகரன், மற்ற வேடங்களில் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் கதையின் ஓட்டத்திற்குத் துணை நின்றிருக்கிறார்கள். தாயாக நடித்துள்ள தேவி மகேஷ், தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் மனதை நெகிழ வைக்கிறார்.
ஒரு திகில் திரில்லர் களத்திற்குப் பொருத்தமான வகையில், ரயீஸ் அஹ்மத்தின் ஒளிப்பதிவும், ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. காட்சிகளைச் செதுக்கி நேர்த்தியாகத் தொகுத்தளித்திருக்கிறது RC பிரணவ்வின் படத்தொகுப்பு.
படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நிதானமாக நகர்ந்து பொறுமையைச் சோதித்தாலும், காட்டிற்குள் சென்றவர்கள் மாயமாக மறைவதற்குக் காரணம் என்ன, பலரையும் சுருட்டிய அந்த வனம் நாயகனை மட்டும் விட்டு வைப்பதன் ரகசியம் என்ன எனப் பிற்பாதியில் திரைக்கதை விறுவிறுப்பு அடைகிறது.
வித்தியாசமான முயற்சிகள் அனைத்துமே எல்லாத் தரப்புப் பார்வையாளர்களையும் திருப்திப்படுத்துவதில்லை. தாறுமாறாக நகரும் திரைக்கதையால் அந்த வரிசையிலேயே போய் முடிகிறது இந்தத் திரைப்படம்.
