“வசூலை குவிக்கும், விருதுகளையும் பெறும்!” : ‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதி நம்பிக்கை!

“வசூலை குவிக்கும், விருதுகளையும் பெறும்!” : ‘பத்தா’ பட விழாவில் விஜய் சேதுபதி நம்பிக்கை!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18, அட்லி வழங்கும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ வெற்றிகளுக்குப் பிறகு விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைக்கலைஞர்கள் & தயாரிப்பாளர்களின் உரைகள்:

  • கார்த்திக் நேத்தா: வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவனித்து தெளிவு பெற வைக்கும் விழிப்புணர்வாக இப்படம் இருக்கும். பாலாஜி அண்ணா என் கஷ்ட காலத்தில் என்னை கைவிடாமல் ஆதரவளித்தவர். அவருக்காக இன்னும் பல பாடல்கள் எழுதுவேன்.

  • தமிழ்: எனது முதல் இசை வெளியீட்டு விழா இது. பாடல்கள் எழுதும்போது சந்தேகம் கேட்டபோதெல்லாம் இயக்குநர் வழிகாட்டி முழு ஆதரவளித்தார்.

  • கானா ஜானி: விஜய் சேதுபதி ரசிகனான எனக்கு இப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சாய் அபயங்கரின் டியூன் கேட்டவுடனே உற்சாகம் தொற்றிக்கொண்டது.

  • முத்துராஜ் (கலை): 80-களின் சென்னையை உருவாக்க 3 மாதங்கள் உழைத்தோம். பாக்சிங் உபகரணங்கள் உட்பட பலவற்றைத் தனித்துவமாக வடிவமைத்தோம். லிஜோமோலின் நடிப்பு சில காட்சிகளில் நெகிழ வைத்தது.

  • கலைவாணன் (எடிட்டர்): வழக்கமான கமர்ஷியல் எடிட்டிங் பாணியில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு காட்சியையும் நிறுத்திச் செதுக்கியுள்ளோம். அட்லி அண்ணாதான் எனக்கு வகுப்பாசிரியர்.

  • செல்வகுமார் SK (ஒளிப்பதிவாளர்): பாலாஜி சாரின் உலகத்தை உருவாக்க நிறைய கலந்துரையாடல்கள் நடந்தன. விஜய் சேதுபதி 25 டேக்குகள் போனாலும் சலிக்காமல் நடிக்கும் அரக்கன்.

  • அஜித் அந்தாரே & முராத் கெதானி (தயாரிப்பாளர்கள்): பாலாஜி கதையைக் விவரித்தபோதே கண்ணீர் வந்தது. தமிழ் படைப்பாளிகளின் திறமையைப் பார்த்து வியக்கிறோம்.

  • விவேக்: அன்பையும் மனித உறவுகளின் மேன்மையையும் ‘பத்தா’ அழகாகப் பேசும். அட்லியின் உழைப்பும் விஜய் சேதுபதியின் பயணமும் தமிழ் சினிமாவுக்கு முக்கியமானது.

  • பாக்கியராஜ் கண்ணன் & சிபி சக்கரவர்த்தி: பாலாஜி தரணிதரன் மற்றும் அட்லியின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ‘பத்தா’ பொழுதுபோக்கு படங்களுக்கான இடைவெளியை நிரப்பும்.

  • லிஜோமோல் ஜோஸ்: பாலாஜி சாரின் இயக்கம் மற்றும் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் கனவு போல இருக்கிறது. அவரிடமிருந்து கிடைத்த பாராட்டு மிகப்பெரிய விருது போன்றது.

  • பாலாஜி தரணிதரன் (இயக்குநர்): கொரோனா காலத்தில் எழுதிய கதை இது. கலை மற்றும் ஒளிப்பதிவு மூலம் கதையின் உலகத்தை அற்புதமாகக் கொண்டு வந்துள்ளனர். சாய் அபயங்கர் பின்னணி இசையில் அசத்தியுள்ளார்.

  • சாய் அபயங்கர் (இசையமைப்பாளர்): அட்லி அண்ணாதான் இந்த வாய்ப்புக்கு ஆரம்பப் புள்ளி. விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைத்தது ஆசீர்வாதம். பாலாஜி சாரின் நேர்மையான அணுகுமுறை சிறப்பாக வேலை செய்ய உதவியது.

  • விஜய் சேதுபதி:

    இயக்குநர் அட்லியின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். கதை கேட்ட உடனே, ‘இந்தப் படம் சர்வதேச விழாக்களிலும் திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும்’ என்று அவர் தந்த வார்த்தை எனக்கு பெரும் நம்பிக்கையளித்தது. தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.

    பாலாஜி தரணிதரனை எனக்கு 15 வருடங்களாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ போன்ற படங்களை இயக்கிய அவர், சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் குறையாமல் வைத்திருக்கும் மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது; பாலாஜி போன்ற ஒருவரால்தான் இந்தப் படத்தை உருவாக்க முடியும்.

    நடிகை லிஜோமோல் இப்படத்தில் கணவன்-மனைவி வாழும் அந்த உலகத்திற்குள் முழுமையாகச் சென்று, இயல்பாக நடித்து அசத்தியுள்ளார். சாய் அபயங்கரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்; இதன் மூலம் அவர் புதிய உயரத்தை எட்டுவார். குழந்தை நட்சத்திரம் சகஸ்ரா கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறான்.

    விருதுகளைப் பெறும் படமாகவும், வசூலைக் குவிக்கும் படமாகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்க முடியும் என்ற கேள்விக்கு ‘பத்தா’ பதிலளிக்கும். ஒரு வீரனோ அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும் போது நடக்கும் மாயமும், அந்த அப்பாவித்தனத்திற்குள் இருக்கும் அறிவுமே இப்படத்தின் மையம்.

    படத்தைப் பார்த்த சபரி, இதை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியது மகிழ்ச்சியளிக்கிறது. தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் சந்திப்போம்!

  • அட்லி (இயக்குநர் & தயாரிப்பாளர்): காலம் கடந்தும் பேசப்படும் மாஸ் பொழுதுபோக்குப் படமாக இது இருக்கும். பாலாஜி போன்றவர்கள் நம் சினிமாவின் சொத்து. சாய் அபயங்கர் மிகப்பெரிய உயரங்களைத் தொடுவார். அர்ஜுன் சிதம்பரம், ஹரிஷ் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு; ஹரிஷைப் பார்க்கும்போது என் அப்பாவைப் பார்த்தது போல இருந்தது. நான் இந்த நிலைக்கு வர விஜய் அண்ணாதான் காரணம். எதிர்மறை கருத்துகளைப் பொருட்படுத்தாமல் நம் இலக்கை நோக்கி நகர வேண்டும்.

தொழில்நுட்பக் குழு  விவரங்கள்:

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக உள்ளார். முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் ரசிகர்களின் உற்சாகமும், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

Related Posts