மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரின் கடைசி ஆசையும், ஆதங்கமும்!: டி.வி.சோமு
’மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் அவர் குறித்து பத்திரிகையாளர் டி.வி.சோமு எழுதியுள்ள முகநூல் பதிவு:
இந்த அதிர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. அன்புச் சகோதரர் திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன், மாரடைப்பால் காலமானார் என்பதை நம்பவே முடியவில்லை.
பேட்டி காணும் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி எனக்கில்லை. மிக அரிதாகவே அப்படியானவர்களுடனான பழக்கம், நட்பாகும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன்.
’மதயானைக் கூட்டம்’ , ‘இராவணக் கோட்டம்’ படங்களுக்கு அடுத்து தஞ்சை ஜமீன்களை மையமாக வைத்து கதை ஒன்றை உருவாக்கி இருந்தார். அதற்காக ஜமீன்களை சந்திக்க வேண்டும் என்றார்.
எனக்கு சொந்த ஊர் தஞ்சை என்பதால், “அண்ணே… ஒரு முறை போயிட்டு வரலாமா” என்றார்.
நண்பர் தஞ்சை ( கமல் ரசிகர் மன்ற தலைவர்) சரவணன் அவர்கள் மூலம் உக்கடம் ஜமீன் சென்று விக்ரம் சுகுமாரனும் நானும் சென்று சந்தித்தோம். தஞ்சையைச் சேர்ந்த பத்திரிகைளர், திரைப்பட இயக்குநர் தஞ்சை மணிவாசகன், முன்னாள் எம்.சி. நீலகிரி ஸ்ரீராம் ஆகியோரின் உதவிகளும் மறக்க முடியாது.
தஞ்சையில் இருந்த மூன்று நாட்களுமே கவனித்தேன். காலையில் எழுந்து உடற்பயிற்சி மாலையில் கொஞ்சம் நடைப் பயிற்சி போவார் விக்ரம் சுகுமாரன். சிகரெட், மதுப் பழக்கம் இல்லை. உணவு விசயத்திலும் கட்டுப்பாடாக இருந்தார். அந்த அளவுக்கு தனது உடல் நலத்தின் மீது அக்கறையாக இருந்தார்.
அப்படிப்பட்டவருக்கு இந்த சின்ன வயதில் மாரடைப்பு… மரணம் என்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.
அடுத்ததாக ஜமீன் கதை ஒன்றும், மஞ்சுவிரட்டு குறித்த கதை ஒன்றும் வைத்து இருப்பதாகச் சொன்னார். அதற்காக மதுரை செல்லப்போவதாக இரு வாரங்களுக்கு முன் அலை பேசினார்.
அவை நிராசைகளாகிவிட்டன.
தனக்கான வாய்ப்புகள் சிலவற்றை தடுத்தவர்கள் பற்றி கூறி அவர் வருத்தப்பட்டதும் உண்டு. இப்போது அந்த நபர்கள் மனநிலை எப்படி இருக்கும்…
# இருவரும் தஞ்சை சென்றபோது, பெரிய கோயில் சென்றோம்… அப்போது எடுத்த படம் இது!” என்று டி.வி.சோமு குறிப்பிட்டு உள்ளார்.
