‘கூரன்’ : திரைப்பட விமர்சனம்: கூரன் அரிமா!

‘கூரன்’ : திரைப்பட விமர்சனம்:  கூரன் அரிமா!

கூரன் என்றால் அறிவுக் கூர்மையானவன் என்பதோடு, நாய் என்கிற அர்த்தமும் உண்டு. இரண்டுக்கும் பொருந்துகிறது மாதிரி சிறப்பான தலைப்பை வைத்து உள்ளனர்.

கொடைக்கானலில் ஜான்சி என்கிற நாய் தனது குட்டியுடன் சாலையை கடக்க…  குடிகாரன் ஒருவன் தாறுமாறாய் காரை ஓட்டி நாய்க்குட்டியைக் கொன்றுவிடுகிறான். நாய் ரத்தச் சகதியாய் கிடக்க, கதைட்டி சிரித்தபடி காரில் பறந்துவிடுகிறான்.

தாய் நாய் குரைத்துக் கொண்டே காரைத் துரத்திச் செல்கிறது.  கார் கடந்து மறைந்துவிடுகிறது.

நீதி கேட்டு காவல் நிலையம் செல்கிறது, நாய். அங்கி இதன் ‘மொழி’ புரியாமல் துரத்தி அடிக்கப்படுகிறது. ஆனாலும் நகராமல், அங்கேயே ஒரு மூலையில் படுத்துக் கொள்கிறது. அதன் பிறகு வழக்கறிஞர் தர்மராஜ் வீட்டுக்குச் செல்கிறது.  அங்கே காவலாளி விரட்டி அடித்தாலும், மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறது.

இதைக் கவனித்த எஸ் .ஏ. சி., நாய் ஏதோ சொல்ல விரும்புகிறது என்று அதன் உணர்வுகளைக் கவனிக்கிறார். அது வாயில்லா ஜீவன் என்றாலும் அது தனது சோகத்தை உணர்த்துகிறது.

தர்மராஜ் அந்த நாய்க்காக வாதாட வருகிறார். பல்லாண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடாமல் இருந்தவர், அந்த நாய்க்காக களத்தில் இறங்குகிறார். நாய்க்குட்டியை கொன்றவர்களை  கண்டுபிடிப்பதற்கும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கும் அவர் போராடுகிறார்.

வாயில்லா ஜீவனின் குரலுக்கு நீதி கிடைத்ததா, அதற்கு வழக்கறிஞர் தர்மராஜ் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

நமது உணர்வுகளை விலங்குகள் புரிந்துகொள்வதாகத்தான் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தில், விலங்கின் உணர்வை மனிதர்கள் புரிந்துகொண்டு செயல்படுவது போல வித்தியாசமான கோணத்தில் கதையை அமைத்து இருக்கிறார்கள்.

ஒரு நாயகியின் கதாபாத்திர கனத்தை, நாய்க்கு அளித்து இருக்கிறார்கள்.  திரைக்கதையில் அதை நேர்த்தியாகச் சொல்லவும் செய்து இருக்கிறார்கள்.

ஆகவே, நாய் தன் காதலைச் சொல்லும்போதும், குட்டியை பறிகொடுத்து தவிக்கும்போதும் நாமும் மகிழ்ச்சியையும் சோகத்தையும் உணர்கிறோம்.

தவிர அது காவல்துறையில் துப்பு துலக்கும் பிரிவில் செயல்பட்ட நாய் என லாஜிக்காக பிளாஷ்பேக்கும் வைத்து இருக்கிறார்கள்.

வழக்கறிஞர் தர்மராஜ் என்கிற பாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார்.  இயக்குநராக எண்ணற்ற படங்களில் முத்திரை பதித்தவர் அவர். ஆனால் நடிகராக இந்த அளவுக்கு அவர் வேறு எந்த படத்திலும் ஜொலித்தது இல்லை.

முதிர்ந்த வயது என்றாலும் சிங்கம் போல உலா கம்பீரமாக உலா வருகிறார்…  எதிரிகளைப் பந்தாடுகிறார்.  படத்துக்கு அரிமா ( சிங்கம்) என்றும் பெயர் வைத்து இருக்கலாம்.

அதே போல, நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளிலும், ஒரு கட்டத்தில் மனம் நொந்து தேவாயலத்தில் நிற்பதும் என பல்வேறு விதங்களில் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார்.

ரஞ்சித் ராஜா,  கவிதா பாரதி,  பாலாஜி சக்திவேல், சத்யன்,இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான் என அனைவரும் அவரவர் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

இந்தப் படத்தில் விலங்குகள் கொலை செய்யப்படுவதைத்தடுக்கவும் தண்டிக்கவும் மனிதருக்கான சட்டங்கள் பொருந்துமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. அதற்கான சட்டப்பிரிவுகளும் சொல்லப்படுகின்றன. அதன்படி விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை சார்ந்த பிரிவு 428 மற்றும் 429 -ன்படி குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்குவதாகப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள் கண்ணால் கண்ட சாட்சியை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனவாநீதி விசாரணையின் போது உணர்வுகளுக்கான இடம் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு அதற்கு ஆதாரமாக உரிய பதில் சொல்லப்படுகிறது.

படத்தில் பேசப்படும் சட்ட நுணுக்கங்களை எல்லாம் பார்க்கும் போது எஸ் .ஏ. சந்திரசேகரின் பங்களிப்பை உணர முடிகிறது.

ஈஎஸ்பி எனப்படும் எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்( Extra Sensory Perception ) பற்றி அதாவது
ஐம்புலன்களைத் தாண்டி அறியும் ஆறாவது உணர்வைப் பற்றியும்,அதனால் செவி வழியே கேட்கும் குரல்களை வைத்து படிமங்களை வரையும் திறமை பற்றியும் பேசப்படுகிறது.இது கதையின் திருப்பு முனையாக எப்படி அமைகிறது என்பதற்கும் காட்சிகள் உள்ளன.கொடைக்கானல்,மலைப்பிரதேசம் என்கிற பின்புலம் பசுமையும் நீலமும் கலந்து காட்சிப்படுத்தலுக்கு ஏற்றதாக அமைந்து காட்சிகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக உள்ளன. மார்டின் தன்ராஜ் செய்துள்ள ஒளிப்பதிவில் குறை ஒன்றும் இல்லை.

பிசிறு தட்டாத வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் மாருதி.படத்தொகுப்புப் பணியை மேற்பார்வை செய்துள்ளார் பீ. லெனின்.
.
ஒரு நாய் பற்றிய கதையாக இருந்தாலும் அதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நன்றாகவே பின்னணி இசையைச் சேர்த்துள்ளார் சித்தார்த் விபின். அதுமட்டுமல்ல இனிமையான பாடல்களும் உண்டு. படத்தின் கதைப் போக்குக்குத் தடையாக இருக்கும் என்று சுருக்கமாக ஒலிக்கின்றன.

மொத்தத்தில் விலங்குகளும் மனிதர்களைப் போன்றவை தான், அவற்றுக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு உரிமை உண்டு .தான் வாழ்வதற்காக மனிதன் அதை அழிக்கக்கூடாது, துன்புறுத்தக் கூடாது என்கிற கருத்தை நாகரிகமாகக் கூறி இருக்கிறார்கள்.

இந்த வகையில் ‘கூரன்’ நல்ல கருத்தைச் சொன்ன தரமான படம் எனலாம்.இன்றைய சூழலில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் வந்திருக்கும் அரிதான படம் என்று கூடக் கூறலாம்.

ஏற்கெனவே சொன்னது போல, எஸ்.ஏ.சி. என்கிற சிங்கமும் நடித்து இருப்பதால், படத்துக்கூ கூரன் அரிமா என பெயர் வைத்து இருக்கலாம்.

Related Posts