திரௌபதி 2: மதமாற்றம், கோயில் திறப்பு, முகமதிய – வைணவ அரசர் போர்..?
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்கும் புதிய படம், ‘திரௌபதி 2’. இது, 14ம் நூற்றாண்டில் நடந்த முகலாய மன்னர்களின் படையெடுப்பையும், அதை எதிர்த்து நின்ற வைணவ பாரம்பரிய அரசர்களையும் முன்னிறுத்துவதோடு, அப்போது நடந்த மதமாற்ற நிகழ்வையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் என தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் கவனத்தை ஈர்த்தவர் மோகன் ஜி. இவற்றில் திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகியவை கலவையான விமர்சனத்தைப் பெற்றன.
முதல் படம் தவிர மீதம் மூன்று படங்களிலும், ரிச்சர்ட் ரிஷி அதிரடி நாயகனாக தோன்றினார்.
இந்தக் கூட்டணி, ‘திரௌபதி 2’ படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்து உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி, ” இத் திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்” என்றார்.
இதுதான் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து இருக்கிறது.
ஹோய்சாலர்களை தமிழ் தமிழ் கல்வெட்டுகளில் போசளர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் கர்நாடகத்தின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமி பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். ஒரு கட்டத்தில் அதையும் தாண்டி தங்கள் எல்லையை விரிவாக்கினர். தமிழ்நாட்டின் வட பகுதியும் குறிப்பிட்ட காலம் வரை அவர்களது ஆதிக்கத்தில் இருந்தது. அப்போது தமிழ்நாட்டுப் பகுதியை, தற்போதைய சமயபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
எதிரிகளால் பிரச்சினை ஏற்பட்ட காலத்தில், இங்கே ஆண்ட சோழ மன்னர்களின் உதவியை நாடினர்.
இந்த வம்சத்தின் கடைசி அரசனான மூன்றாம் வீர வல்லாளன், 1300களின் முற்பகுயில் ஆட்சி செய்தான். அப்போது டில்லியில் இருந்து சுல்தான் (முகமது பின் துக்ளக்) படைகள் தாக்குதல் நடத்தின. அதில் இந்த அரசு உள்ளிட்ட பல அரசுகள் வீழ்ந்தன.
முஹம்மது துக்ளக் தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார். தேவகிரியின் பெயரையும் தொளலதாபாத் என மாற்றினார். அவருக்கு கப்பம் செலுத்த வேண்டிய நிலை மூன்றாம் வீர வல்லாளனுக்கு ஏற்பட்டது.
ஆனாலும் பிறகு அவர், துக்ளக்குக்கு எதிரான பிற மன்னர்களின் எழுச்சியில் பங்கு கொண்டார்.
இதற்கிடையே, டில்லி சுல்தான்களின் தாக்குதலை எதிர்த்து நின்று போரிட்டனர் ஹரிஹரா மற்றும் புக்கா என்ற இரண்டு சகோதர்கள்! சுல்தான்கள் போரில் வென்று இந்த இருவரையும் சிறைப்பிடித்தனர். அவர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று, முகமதியர்களாக மதம் மாற்றினர்.
அவர்களும் சுல்தான் அரசர்களுக்கு ஆதரவாக இருப்பது போலவே தங்களது பங்களிப்பை செய்து வந்தனர். ஒரு கட்டத்தில், தக்காணம் பகுதியில் நடக்கும் புரட்சியை தடுக்கும் பொருட்டு சுல்தான்களின் பிரதிநிதியாக தெற்கே அனுப்பி வைகபட்டனர்,
அவர்கள் இங்கே வந்த பிறகு மீண்டும் தங்கள் தாய் மதமான வைணவத்தைத் தழுவினர். பிற மன்னர்களோடு இணைந்து டில்லி சுல்தான்களுக்கு எதிராக போரிட்டனர்.
கி.பி 1336 ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர்!
1342ல், டில்லி பேரரசுக்கு எதிரான போரில் மூன்றாம் வீர வல்லாளன் மரணமடைந்தார்.
அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து வந்தார். போரில், கண்ணனூர் குப்பம் என்ற இடத்தில் வல்லாளன் தலையை வெட்டி கொல்லப்பட்டார்.
வல்லாளனைத் தீர்த்துக் கட்டிய மதுரை சுல்தானை விஜய நகரப் பேரரசின் படை கொன்றது.
டில்லி சுல்தான்களால் சூறையாடப்பட்டு 40 ஆண்டுக்காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோவிலும் மீண்டும் திறக்கப்பட்டது.
வல்லாளன் புகழை 14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாச்சல புராணத்தில் காணலாம்.
இந்த வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே, திரௌபதி 2 உருவாகும் என யூகிக்க முடிகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து அறிய A Complete Guide to Hoysaḷa Temples By Gerard Foekema என்ற புத்தகத்தப் படிக்கலாம்.
குறிப்பு: விஜயநகர மன்னர்களை இந்து மன்னர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். 1300 – 1400 காலகட்டங்களில் இந்து என்கிற வார்த்தையே கிடையாது. பிற்காலத்தில் இந்த குதிகளை ஒன்றிணைத்து ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு இங்கே இருக்கும் பல்வேறு மதங்கள் குறித்து புரிந்துகொள்வது சிக்கலாக இருந்தது. ஆகவே, அவர்கள் சிறு சிறு மதங்கள் அனைத்துக்கும் சேர்த்து இந்து என பெயரிட்டனர்.
ஆகவேதான், சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இந்து அரசன் ராஜராஜன் வரலாறு என இந்துத்துவவாதிகள் தெரிவித்தபோது, “ராஜராஜன் காலத்தில் இந்து என்கிற வார்த்தையே கிடையாது” என்பதை பல்வேறு அரசியல் தலைவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அது, போசள மற்றும் விஜயநகர மன்னர்களுக்கும் பொருந்தும்.
– டி.வி.சோமு
